அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் திருவீதியுலா நடந்தது.
மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும், பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு, அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. காலை 10:00 மணி முதல், மதியம் ஒரு மணி வரை, கோவை, திருவேங்கடநாத பெருமாள் கோவில் குழுவின் பஜனை நடந்தது. இரவு 7:00 மணி முதல், 9:00 மணி வரை, கோவை, கிருஷ்ணா நாட்டிய கலாசேத்ரா மாணவ, மாணவியரின், பரதநாட்டியம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் என பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். பக்தர்கள், பலர் தாசர்களுக்கு அரிசி, பருப்பு, படைத்து, பெருமாளை வழிபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், அன்னூர், அவிநாசி, புளியம்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வருகிற 24ம் தேதி புரட்டாசி ஆறாம் சனிக்கிழமை விழா நடைபெறுகிறது. காலை 5:00 மணிக்கு, மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, பசூர் மற்றும் பகத்தூர் குழுவின் பஜனை நடைபெறுகிறது.