பள்ளிக்கட்டு கட்டி செல்வோம் சபரிமலைக்கு!மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில், நவ.,16 ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக சித்திரை ஆட்டத்திருவிழாவிற்காக, ஒருநாள் மட்டும் சபரிமலை நடை திறக்கும் போது அதிகபட்சம் ஆயிரம் பேர் வரை தான் ஐயப்பனை தரிசித்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு நவ.,5 ல் நடைதிறந்த போது, 18 ஆயிரம் பேர் வரை தரிசித்தனர். அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில், பக்தர்களின் இந்த பக்திபரவச போக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 10 வயதிற்குட்பட்ட, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அதிகம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஒருநாளுக்கே இப்படி என்றால் கார்த்திகை, மார்கழியில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பார்கள்; அதிலும் கன்னிசாமிகள் அதிகம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஏன் செல்ல வேண்டும்:

ஆண்களே...உங்களுக்கான புனித யாத்திரை இது. யாத்திரைகளில் தனித்தன்மை மிக்கது சபரிமலை பயணம். நீங்கள் அதிகபட்சம் 41 நாட்கள் விரதம் இருந்தாலும் சரி, உங்களுக்கு ஏற்றவாறு, எத்தனை நாட்கள் விரதம் இருந்தாலும், அது உங்களை பண்படுத்தும்; மனதில் பொறுமையும், அமைதியும் குடிகொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. மனதாலும், உடலாலும் துாய்மை காக்க துாண்டும் பக்தி பயணம் இது. சபரிமலைக்கு மாலை அணிந்ததும், உங்கள் மனம், செயல், வாக்கு மூன்றும் துாய்மையாகி விடும்.முதலில், நீங்கள் மது அருந்துபவர்களாக இருந்தால், அத்தனை நாட்களும் அந்த பக்கம் எட்டிப்பார்க்க மாட்டீர்கள். அசைவம் சாப்பிடுபவர் என்றால் சுத்தமாக சைவத்திற்கு மாறி விடுவீர்கள். பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனை, பிரம்மச்சரிய விரதம் இருந்து தான் தரிசிக்க வேண்டும். எனவே அந்த விரதமும் உடலுக்கு நல்லது.

கற்கள் நிறைந்த காட்டுப்பாதையில் குளிர்காலத்தில் மலையேறிச் செல்ல வேண்டி இருப்பதால், அதற்கேற்ற உடல்வலிமை தேவை. அதற்கு உங்கள் உடலை தயார்படுத்துவதே அருமையான உடற்பயிற்சி தான். அன்றாட வாழ்வில் இருந்து விலகி, ஆறு,மலை என்று இயற்கையான சூழலில் மலையேறி செல்லும் வித்தியாசமான அனுபவம் உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரும். சபரிமலை யாத்திரையில், ஆடம்பரம் இன்றி எல்லா பக்தர்களும் சமமாக நீலம், கருப்பு உடையில் சமத்துவத்தை வளர்ப்பது அருமையான அனுபவம். விரதநாட்களிலும் சரி, மலையேறும் போதும் சரி நாம் எப்போதும் உச்சரிப்பது சுவாமி சரணம் என்ற வார்த்தைகளை தான். அதுவே நம் சிந்தனைகளை ஒழுங்குப்படுத்தி விடும்.

இப்படி ஆண்களுக்கென்றே, ஆண்டிற்கு ஒரு முறை மனதாலும், உடலாலும் நல்லொழுக்கம் தரும் புனித யாத்திரை சபரிமலையைத் தவிர வேறு எங்கும் இல்லை. அதனால் தான் ஒருமுறை அங்கே சென்றவர் தொடர்ந்து செல்ல விரும்புகிறார்; சென்று கொண்டு இருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதற்கு இதுவும் காரணம்.

எப்படி செல்ல வேண்டும்:

சபரிமலை பயணம் சிரமமானது என்று பொதுவாக கருதப்படுவதன் காரணம், கரடு முரடான பாதை உள்ள மலையில் ஏறுவதால் தான்.பம்பை வழியே இரண்டு பாதைகளில் எதாவது ஒன்றில் நடந்து சென்று, சபரிமலை சன்னிதானத்தை அடையலாம். அவை...

1.பம்பையில் இருந்து சரங்குத்தி வழியே சன்னிதானம்(5 கி.மீ.,)
2.எருமேலியில் இருந்து பேரூர் தோடு, காளைகட்டி, கல்லிடுங்குன்று, கரிமலை, வலியானவட்டம், பம்பை, சரங்குத்தி வழியே சன்னிதானம்(44 கி.மீ.,)
இந்த ஆண்டு முதல் பம்பைக்கு, எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே வாகனங்களை, 22 கி.மீ.,க்கு முன்னதாக உள்ள நிலக்கல்லில் நிறுத்தி விட்டு, கேரள அரசின் பஸ்சில் பம்பை சென்று அங்கிருந்து மலை ஏறவேண்டும். பம்பையில் இருந்து நேரடியாக மலையேறி செல்வது எளிது. அதிகபட்சம் 2 மணி நேரத்தில் மலை ஏறிவிடலாம்.

தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள், குறிப்பாக மகரவிளக்கிற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியில் இருந்தே சன்னிதானத்திற்கு நடந்து செல்வதை விரும்புகிறார்கள். அவ்வாறு செல்ல அதிகபட்சம் 36 மணி நேரம் ஆகும். இருமுடிக்கட்டு கட்டி சென்றால் தான் 18 ம்படி வழியாக ஏற முடியும். தந்திரி, பந்தள மன்னர் குடும்பத்தினருக்கு மட்டுமே, இருமுடி கட்டு இல்லாமல் 18ம் படி ஏற அனுமதி உண்டு. இருமுடிகட்டு இல்லாத பக்தர்கள் பின்வாசல் வழி சென்று தரிசிக்கலாம். பொன்னு 18ம் படி என்று பக்தர்கள் புனிதமாக கருதும் அந்த படிகள் வழி ஏறி, நீங்கள் ஐயப்பனை தரிசிப்பதே புண்ணியம். எனவே இருமுடிக்கட்டு கட்டி சபரிமலை செல்வதே சிறந்தது.

என்ன கொண்டு செல்ல வேண்டும்?

சபரிமலையில் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களுக்கு அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் தண்ணீர் பாட்டில்களை, பம்பைக்கு அப்பால் எடுத்துச்செல்லமுடியாது. மலைப்பாதையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இருமுடிகட்டிலும் பன்னீர் பாட்டில்களையோ, பாலித்தீன் கவர்களில் விபூதி, மஞ்சள் போன்றவற்றையோ எடுத்துச்செல்லக்கூடாது. பூஜை பொருட்களை காகித பொட்டலங்களாக கொண்டு செல்ல வேண்டும். சபரிமலையின் சுற்றுச்சூழலை காக்க ஒத்துழைப்பது நமது கடமை.சில மாதங்களுக்கு முன்பு பம்பையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், அங்குள்ள கட்டடங்கள் சேதமாகி விட்டன. போதிய கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. கேரள மார்க்சிஸ்ட் அரசு சீரமைப்பு பணிகளில் மெத்தனமாக உள்ளதால் போதிய ஓட்டல்கள், கடைகளும் இருக்காது. எனவே பக்தர்கள் தேவையான உணவு பொருட்களை கொண்டு செல்வது நல்லது. முடிந்த அளவு சபரிமலையில் இரவு தங்குவதை தவிர்த்தால், நெரிசல் குறைந்து, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும். இதன்மூலம் அந்த புனிதமான காட்டில் அதிக கழிவு நீர் தேங்குவதையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் தவிர்க்கலாம்.

யாரைக்காண செல்கிறோம்?

சபரிமலை சன்னிதானத்தில் ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இல்லை. கட்டண தரிசனம் இல்லை. அங்கு ஒரே மொழி...ஒரே கோஷம்...அது சரணம் ஐயப்பா! பலநாட்கள் விரதமிருந்து, பயணம் செய்து, காடு, மலைகளை நடந்து கடந்து செல்லும் பக்தர்கள், ஐயப்பனை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். என்றாலும் அந்த வினாடிகள் போதும் பக்தனுக்கு! ஐயப்பனை ஒருமுறை பார்த்து, மனமுருகி வேண்டிக்கொள்ளும் போது, அனைத்தும் கிடைத்த ஆனந்தத்தை அவன் உணர்கிறான்.

ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷமிட்டு, சரணாகதி அடையும் பக்தனுக்கு ஆசி தந்து வேண்டுதல்களை நிறைவேற்றி தருவார் அகிலாண்ட நாயகன் ஐயப்பன் என்பது பக்தர்களின் அயராத நம்பிக்கை! அந்த நம்பிக்கை பொய்க்காது என்பதை நிரூபிக்கிறது , ஆண்டிற்கு ஆண்டு பெருகி வரும் பக்தர்களின் கூட்டம்! எனவே ஆண்களே...நல்லொழுக்கம் தரும் இந்த ஆன்மிக யாத்திரையை, நீங்களும் இந்த முறை தவறவிடாதீர்கள்! உங்கள் வீட்டில் உள்ள 10 வயதுக்குட்பட்ட, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களையும் அழைத்துச்செல்லுங்கள்.

-ஜி.வி.ரமேஷ் குமார்


rameshkumargv@dinamalar.in


சபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்