|
மகாலட்சுமியின் திருப்பார்வை ஒரு முறை நம்மீது பட்டாலே, வாழ்வு வளமாகும். நன்மைகள் நிலையாகும். அதே பலநூறு முறை படர்ந்தால்? எவ்வளவு நன்மை கிடைக்கும்.? அப்படித் திருமகளின் கடாட்சம் பலமடங்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு சுலபமான வழி,அட்சய திருதியை தினத்தில் அவளை வணங்குவது தான் என்கின்றன. புராணங்கள். பொன் மகளுக்கு உரிய அந்தப் புனித தினத்தில் போற்றித் துதித்து வணங்கிட ஓர் எளிய பாடல் துதியைச் சொல்லுங்கள். சுபலட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா சுபிட்சங்களும் நிறையும்!
திருமிகு பீடம் தன்னில் திகழ்ந்திடு திருவே உந்தன் திருக்கரம் அபயம் மற்றும் திருவினை வரதம் நல்கும் மருமலி மற்றைக் கைகள் மாண்புடைச் சங்கு சக்ரம் மறுவரு கதையும் கொள்ளும் மகாலக்ஷ்மி போற்றி போற்றி!
அனைத்துலகு எல்லாம் ஈன்றாள் அதனை எல்லாம் அறிந்தாள் அனைத்துள வரங்கள் யாவும் அளித்திட வல்லாள் அன்னை அடங்கிடாத் துட்டர் தம்மை அலமறச் செய்யும் சக்தி ஆன்றவை நல்கும்அன்னை மகாலக்ஷ்மி போற்றி போற்றி!
மகத்துவம் மிக்கதாகி மன்னிடும் சித்தி புத்தி இகத்தினில் போக பாக்யம் இனியன தருதலோடே முகம் மலர்ந்து இன்பமாக முக்தியும் ஈயும் அன்னை மகாமந்திர ரூப சக்தி மகாலக்ஷ்மி போற்றி போற்றி!
தேவியின் பீடம் பத்மம் திருப்பரம் பொருளின் ரூபம் தேவியே உலகின் தாயாம் தேன் பரமேஸ்வரியாம் ஆவிநேர் அவளை நந்தம் அகமெலாம் உறையும் நண்பை மாமலர்த் தூபம் கொண்டே மகாலக்ஷ்மி போற்றி செய்வாம்!
தூய செம் பட்டின் ஆடை தூயவன் தாயும் பூண்டாள் ஆயபல் ஆபரணங்கள் அலங்காரமாகப் பெற்றாள் பூவதின் இருப்பும் தாயே பூமியின் விருப்பும் தாயே மாமலர்த் தேனைப் போன்ற மகாலக்ஷ்மி போற்றி போற்றி!
மங்கள வடிவாம் தேவி எங்கணும் நிறைந்திருப்பாள் திங்களின் உடன் பிறந்தாள் திகழ் திருமாலின்தேவி பொங்கிடும் மங்களங்கள் புவி வாழும் மாந்தர் வேண்டத் தங்கிடச் செய்வாள் எங்கள் தாயவள் பாதம் போற்றி! |
|
|