எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக் கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம் -சேக்கிழார்-
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன் தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே இரவு பகல் உணர்வோர் சிந்தைத் திருகோட்டு அயன் திருமால் செல்வமும் ஒன்றோ என்னச் செய்யும் தேவே -அருணந்திசிவம்-
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம்மை -11-ம் திருமுறை-
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவு செல்வ கணபதியைக் கைதொழுதக்கால்.
|