|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> சித்ரகுப்தன் வழிபாடு!
|
|
சித்ரகுப்தன் வழிபாடு!
|
|
இந்நில உலகில் எவ்வுயிரும் அஞ்சக் கூடியது மரணம். அச்சத்தை தரும் மரணம் வரும் நாளைக் கண்டு அஞ்சாத மாந்தர்களே உலகில் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அத்தகைய மரணத்தை விளைவிப்பவன் எமதர்மராசன் என்றும் மரணத்திற்கு உட்படுத்துப்படும் மனிதனின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு மரண நாளை நிச்சயம் செய்து கொடுப்பவன் ஸ்ரீசித்ரகுப்தன் என்றும் புராண இதிகாசங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1985 ல் வெளியிட்டுள்ள தமிழ் அகரமுதலி என்னும் அகராதி நூலில் சித்ரகுப்தனால் உயிர்களின் நன்மை தீமைகள் எழுதி வைக்கப்படும் குறிப்பேட்டிற்கு அக்ரசந்தானி என்று பெயர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்தப்புராணத்தில் அசுரகாண்டம் என்னும் மார்க்கண்டேயப் படலத்தில் சித்ரகுப்தரைப் பற்றி ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிருகண்டு என்னும் முனிவர் புத்திரப்பேறு வேண்டி ஈசனை நோக்கி தவம் செய்தார். அவர் தவத்தை மெச்சிய சர்வேச்வரன் உமக்கு நீண்ட ஆயுளையுடைய கொடிய குணம் கொண்ட நூறு புதல்வர்கள் வேண்டுமா? அல்லது பதினாறு வயது வரை மட்டுமே வாழும் நற்குணமுடைய சத்புத்திரன் வேண்டுமா? எனக் கேட்டார். அதற்கு மிருகண்டு முனிவர் பதினாறு வயது கொண்ட சத்புத்திரன் ஒருவன் போதும் என்று வரம் பெற்றார். அந்த அறிவுள்ள புத்திரன் தான் மார்க்கண்டேயன்.
மார்கண்டேயன் இளமை முதலே சிவபெருமானிடம் குன்றாத பக்தியும் அன்பும் கொண்டு பூசித்து அடியவரானார். மார்க்கண்டேயன் 16 ஆண்டுகள் நிறைவுள்ளபோது சித்ரகுப்தனானவர் தனது அக்கிர சந்தானி என்னும் குறிப்பேட்டில் மார்க்கண்டேயன் வயது முடிவுற்றதை அறிந்து யமனுக்கு மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க நாள் குறித்துக் கொடுத்தார்.
-சித்ரகுத்தரென்றுரைக்கும் சீரியோர்
ஒத்திடும் இயற்கையர் உணர்வின் மேலையோர் கைத்தலமிகுந்ததங் கணக்கு நோக்கியே இத்திறங் கேளென இசைத்தல் மேயினார் - கந்தபுராணம்
மார்க்கண்டேயன் ஈசன் அருளைப் பூரணமாகப் பெற்றிருந்தாலும் சித்ரகுப்தர் தனது கடமை வழுவாமல் நாள் குறித்து எமனுக்குக் கொடுத்தார். நமது ஆயுள் நீடிக்க வேண்டுமானால் சித்ரகுப்தரை வணங்க வேண்டும்.
நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் சித்ரகுப்தர் பெருமையை பெரியாழ்வாரும் நன்கு விவரிக்கிறார்.
சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறியொற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி ஒளித்தார். முத்துத் திரைக்கடல் சேர்ப்பனன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டன்று பட்டினம்காப்பே - பெரியாழ்வார்.
மேற்கண்ட பாசுரத்தின் கருத்து:
முத்துக்கள் நிறைந்திருக்கின்ற அலைகள் வீசிக் கொண்டிருக்கும் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு திருக்கண் வளர்ந்தருளும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் இவ்வுலகில் உள்ள யாவரினும் முதிர்ச்சியுற்ற பேரறிவாளன் என்றும் ஆதி முதல்வன் என்றும் அனைவராலும் ஏற்றுப் போற்றும். ஆதிமூலமாவான், இத்தகைய எம்பெருமான் தன்னுடைய பக்தர்களாகிய அடியவர் பெருமக்களுக்கு இனிய திருவமுதாக இருக்கக் கூடியவனுமாவான். எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் அடியவர் பெருமக்களைக் கண்ட தென்புலத்து மன்னன் எமனானவன் தனது தூதுவர்களை சித்ரகுப்தன் இப்பிடம் அனுப்புகிறார். அவர்கள் சித்ரகுப்தன் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதிப் பதித்திருக்கும் இலச்சினை என்னும் கணக்கினைக் காணவும் அச்சம் கொணடு அக்கணக்குகள் அடங்கிய கட்டுக்களை அவை இருக்கும் இடம் அறிய இயலாதவாறு மறைத்து ஒளித்து வைத்து விட்டு தாமும் ஓடி ஒளிந்து கொண்டனர்.
திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியிலும் சித்ரகுப்தனைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை என்பெய்வினை தென் புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியான் நலத்தைப் பொறுத்தது இராமானுசன்தன் நயப்புகழே - இராமானுச நூற்றந்தாதி
மேற்கண்ட பாசுரத்தின் கருத்து:
எம்பெருமானார் இராமானுச முனிவரின் திருக்கல்யாண குணங்கள் இப்பூவுலகில் உள்ள உயிர்களைக் கொண்டுள்ள உடல்களைத் துன்புறுத்தித் தின்று கொண்டிருக்கும் தாழ்ந்த நிலையிலுள்ள கனலியின் நினைக்க இயலாத அளவில் பலத்தை அழித்த போதிலும் கூட ஒளியுடன் கூடிய சிறப்பினை அடையப் பெறவில்லை, ஆனால் அடியேனால் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் அந்த எம்பெருமானார் இராமானுச முனிவரின் திருவருள் அடியேனுக்குக் கிடைக்கப் பெற்ற அளவில் தென்புலக்கோனாகிய இயமன் இருக்கும் இவ்வுலகில் சித்ரகுப்தப் பெருமானால் எழுதி வைத்துள்ள கணக்குகள் கொண்ட ஓலைச்சுவடி (அக்கிரசந்தானி) என்னும் புத்தகக் கட்டுகளை இயமதூதர்கள் தீயில் இட்டு கொளுத்திய பின்னரே அந்த எம்பெருமானாரின் பெயரும் புகழும் ஒளி வீசிப் பிரகாசம் பெற்றது. அஃதாவது எம்பெருமானார் இராமானுச முனிவரை அடையப் பெற்ற வைணவ அடியவர் பெருமக்களைக் காணும் இயம தூதர்கள் அணுகவும் மாட்டார்கள்.
சைவ சமயத்தவர்களாலும் வைணவ சமயத்தவர்களாலும் சிறப்பாகப் போற்றப் பெரும் சித்ரகுப்தர் கேது கிரகத்தின்அதிபதியாவார். சித்ரகுப்தருக்கென்று தனிக்கோயில் காஞ்சியில் மட்டுமே உள்ளது. பிரம்மதேவனே வந்து சித்ரா பவுர்ணமியன்று 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் வைணவர்களால் பிரதானமாகக் குறிப்பிடப் படுவதுமான தேவாதிராசன் என்கிற வரதராசப் பெருமாளுக்கு ஆராதனை செய்கின்ற அதே நாளில் சித்ரகுப்தருக்கும் கர்ணகியம்பாளுக்கும் காலக்ஞேய முனிவரால் திருமணம் செய்விக்கப் பெற்று பெருமை இக்கோயிலிற்கு உண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று நவகலச பூஜை மற்றும் இதர சுபசடங்குகளோடு கூடிய திருக்கல்யாண உற்சவத்தை பிரம்மதேவனே வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம்.
நவக்கிரகங்களில் கடைசிக் கிரகமான கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு இராசியிலிருந்து முந்தின இராசிக்குப் பிரவேசிக்கும் குணம் கொண்டவர். இந்த பெயர்ச்சியால் உண்டாகும் சாதக பாதகங்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குவது சித்ரகுப்தர் கோயிலாகும்.
சித்ரலேகா சமேத கேது பகவான் என்று விளங்கும் நிகழ்கோளின் அதிஷ்டான தேவதை சித்ரகுப்தரே ஆவார். எனவே, அசுபக்கிரகம் என்றே பெயர் பெற்றது இக்கேது, இப்படிப்பட்ட கேது பகவானால் விளையத்தக்க தீங்குகள் அனைத்தும் கதிரவன் ஒளிபட்ட பனிபோல் நீங்கி நன்மையடைய வேண்டும் என விரும்புபவர்கள் சித்ரகுப்தரை பக்தியுடன் வழிபாடு செய்வதோடு கேது பகவானுக்கு உகந்த கொள் தானியம் மூலம் செய்விக்கப்பட்ட வடையாகவோ, சுண்டலாகவோ, புளியோதரையுடனோ நைவேத்தியமாகப் படைத்து கேது பகவானை வழிபட்டால் துன்பங்களிலிருந்து விடுபட்டு எந்நாளும் அழியாப்புகழும் அடைவர் என்பது திண்ணம்.
சீராரும் காஞ்சி நகர் சித்ரகுப்தரது தாராரும் பாதமலர் சார்ந்தோர்கள் பேரார் புகழுமுயர் பொன்பொருளும் பூதலத்தில் எய்தித் தகவுடனே வாழ்வோர் தழைத்து - திருமுருக கிருபானந்த வாரியார். |
|
|
|
|