|
தூய தமிழ்மாலை சூடும் சுந்தரா ஆயன் என வந்த அமரா, ஸ்ரீதரா! மாயம் புரிகின்ற மதுசூ தனனே, காயம் பூவண்ண கழல்சூடினனே.
தாயும், தந்தையும் நீயெனப் பணிந்தேன் சேயும் செந்தமிழ் மாலை கொணர்ந்தேன் காயும் கனியாம் கருணைக் கடலே, நீயும் கனிவாய் நிழல்தந் தருளே!
வாயில் வருபவை வண்டமிழமுதம் நீயஃதேற்றிடு நிர்மலக் கண்ணா! பாயும் நோயும் பறக்கச் செய்வாய் ஓய்விலாமல் உன்தொண் டாற்றுவேன்.
நாயேன் நல்லவை செய்திட அருள்வாய் மாயா நின் கழல் வணங்கிட வருவாய் வாயால் உனைப்பாடி மனத்தால் நினைத்தேன் நேயா உனைக்கண் ணீரால் நனைத்தேன்
தீயும் குளிரும் தேனருள் நீதந்தால் வேயும் குழலாம் வித்தக நீ வந்தால் ஓயும் பொழுதில் உறுதியும் நீதருவாய் தேயும் நிலவை வளர்ந்திடச் செய்வாயே
போய பிழைகள் போய்வி ழுந்தனவே தீயில் தூசாய் தீமை யானதே நோயில்லாமல் நூறாண்டு வாழ்விக்க தாயின் கருணை தாசர்க் கருளினையே
கோயில் வந்தேன்; குன்று கடந்தேன் ஜீயர் செந்தேன் மொழியும் கேட்டேன்; காயும், கனியும் நிறைந்த மலையில் மாயன் மலையப் பனெழில் கண்டேன்! |
|
|