|
த்வாதச மஞ்ஜரிகா
பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே
விவேகமற்றவனே! கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, மரண காலம் நெருங்கிய பொழுது டுக்ருஞ்கரணே போன்ற வியாகரண தாதுபாடம் உன்னை ஒருகாலும் காப்பாற்றவே காப்பாற்றாது.
1. மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மநஸி வித்ருஷ்ணாம் யல்லபஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம்
1. விவேகமற்றவனே! பொருள் வரவேண்டும் என்ற பேராசையை ஒழித்து விடு. மனதில் பேராசை இல்லாத நல்ல புத்தியை நாடு. உனக்கு உரித்தான கருமத்தால் எந்தப் பொருளை அடைகிறாயோ அதனால் சித்தத்தை இன்புறச் செய்வாயாக.
2. நாரீ ஸ்தனபர நாபீதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் ஏதன்மாம் ஸவஸாதி விகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம்
2. பெண்களின் நகில்களையும் நாபிப் பிரதேசத்தையும் பார்த்து மதிமயங்கி ஆவேசத்தை அடையாதே. இவை மாமிசம் கொழுப்பு ஆகியவற்றின் வேறுபட்ட உருவங்களே என்று அடிக்கடி மனதில் எண்ணிக்கொள்.
3. நளினீ தலகத ஜல மதிதரலம் தத்வஜ் ஜீவித மதி சய சபலம் வித்தி வ்யாத்யபிமான க்ரஸ்தம் லோகம் சோகஹதஞ்ச ஸமஸ்தம்
3. தாமரை இலையின் மேலுள்ள நீர்த்திவலை மிகவும் சஞ்சலமானது. அதுபோலவே வாழ்வும் அதிசயிக்கத் தக்க வகையில் சஞ்சலமானது. உலகம் முழுதும் நோயாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டதென்றும், துன்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதென்றும் உணர்வாயாக.
4. யாவத் வித்தோபார் ஜன ஸக்தஸ் தாவந்நிஜபரிவாரோ ரக்த: பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே வார்தாம் கோஸபி நப்ருச்சதி கேஹே
4. பொருள் ஈட்டுவதில் நாட்டம் உள்ளவனாய் இருக்கும் வரைதான் உன்னை அண்டியவர்கள் பற்றுடையவர்களாயிருப்பர். அதன் பின் மூப்படைந்த உடலில் வாழ்ந்தால் வீட்டில் எவரும் ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டார்கள்.
5. யாவத்பவனோ நிவஸதி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மின் காயே
5. எதுவரை மூச்சுக்காற்று உடலில் உளதோ அதுவரை வீட்டில் உன்னுடைய க்ஷேமத்தை விசாரிப்பார்கள். அந்த மூச்சுக் காற்றுப் போய் உடல் சாய்ந்துவிட்டால் மனைவியும் அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள்.
6. அர்த்தமனர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் புத்ராதபி தனபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
6. பொருளைப் பொருளாகக் கருதாமல் துன்பம் என்று எப்பொழுதும் எண்ணுவாயாக. அதில் சிறிதளவும் இன்பம் இல்லை என்பது உண்மை. பொருளைச் சேமிப்பவர்களுக்குப் பிள்ளைகளிடமிருந்தும்கூட பயம் ஏற்படுகின்றது. இதுவே எங்கும் இயல்பாக உள்ளது.
7. பாலஸ்தாவத் க்ரீடாஸக்தஸ் தருணஸ் தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ் தாவச்சிந்தாஸக்த: பரே ப்ரஹ்மணி கோஸபி ந ஸக்த:
7. குழந்தையானால் அப்போது விளையாட்டில் பற்றுவள்ளவனாகின்றான்; வாலிபனானால் அப்போது பருவமங்கையரிடம் பற்றுள்ளவனாகின்றான்; கிழவனானால் அப்போது கவலைச் சிந்தனைகளில் பற்றுள்ளவனாகின்றான்; பரப்பிரம்மத்தில் பற்றுள்ளவர் எவரும் இல்லை.
பரமே ப்ரஹ்மணி
8. கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோ (அ)யமதீவ விசித்ர: கஸ்ய த்வம் வா குத ஆயாதஸ் தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:
8. உன் மனைவி யார்? உன் மகன் யார்? இந்த ஸம்ஸாரம் மிகவும் விசித்திரமானது. நீதான் யாருடையவன்? எங்கிருந்து வந்தாய்? அந்த தத்துவத்தை இங்கு எண்ணிப்பார், தம்பீ!
கஸ்யத்வம் க: ததிஹ ப்ராந்த:
9.ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிச்சல தத்வே ஜீவன் முக்தி:
9. நல்லோர் உறவால் பற்றின்மை ஏற்படும். பற்றின்மையால் மதிமயக்கம் நீங்கும். மதிமயக்கம் நீங்கினால் மாறுபடாத உண்மை விளங்கும். மாறுபடாத உண்மை விளங்கினால் அதுவே ஜீவன் முக்தி.
10. வயஸி கதே க: காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார: க்ஷூ வித்தே க: பரிவாரோ: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார:
10. வயது கடந்தபின் காம விகாரம் ஏது? தண்ணீர் வற்றிய பின் குளம் ஏது? செல்வம் அழிந்த பின் சுற்றம் ஏது? தத்துவத்தை அறிந்த பின் சம்சாரம் ஏது?
11. மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் மாயா மயமிதம் மகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
11. செல்வத்தாலும் சுற்றத்தாலும் இளமையாலும் கருவம் கொள்ளாதே. காலன் அனைத்தையும் ஒரு நிமிஷத்தில் கொண்டுபோய் விடுவான். மாயாமயமான இதையெல்லாம் விட்டு பிரம்ம பதத்தை அறிந்து அதில் புகுவாயாக.
12. தினயாமின்யௌ ஸாயம் ப்ராத: சிசிர வஸந்தௌ புனராயாத: கால: க்ரீடதி கச்சத்யாயுஸ் ததபி ந முஞ்சத் யாசாவாயு:
12. பகலும் இரவும், மாலையும் காலையும், குளிர்காலமும் வஸந்த காலமும், மீண்டும் மீண்டும் வருகின்றன. காலம் விளையாடுகிறது. ஆயுள் செல்லுகின்றது. என்றாலும் ஆசாபாசம் விடுவதில்லை.
தினமபி ரஜனீ:
13. த்வாதச மஞ்ஜரிகாபி: ரசேஷ: கதிதோ வையாகரணஸ்யைஷ: உபதேசோஸபூத் விதயா நிபுணை: ஸ்ரீமச் சங்கர பகவச்சரணை:
13. பூங்கொத்துப் போன்ற இப்பன்னிரண்டு சுலோகங்களால் ஒரு வியாகரண பண்டிதருக்குப் பரிபூர்ணமாஜ உபதேசம் வித்யைகளில் பூரண அறிவு பெற்ற ஸ்ரீசங்கர பகவத்பாதரால் கூறி அருளப்பட்டது.
இதி ஸ்ரீசங்கராசார்யோபதிஷ்ட த்வாதசமஞ்ஜரிகா-ஸ்தோத்ரம் ஸமாப்தம்
இங்ஙனம் ஸ்ரீசங்கராசாரியார் உபதேசித்த த்வாதசசமஞ்ஜரிகா ஸ்தோத்ரம் முற்றும்.
சர்ப்பட-பஞ்ஜரிகா
1. பத்மாபாத உவாச
கா தே காந்தா தன கத சிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதி ரேகா பவதி பவார்ணவ தரணே நௌகா
1. பத்மபாதர் கூறியது: காற்றைப்போல் அலைபவனே! மனைவியைப் பற்றியும் பொருளைப் பற்றியுமே ஏன் சிந்தனை? உன்னை அடக்குபவர் இல்லையா? பிறவிக் கடலைக் கடக்கம் படகு மூவுலகிலும் நல்லோருடைய கூட்டுறவாகிய ஒன்றேதான் ஆகும்.
கா தே (அ)ஷ்டாதசதேசே-சிந்தா
2. தோடகாசார்ய உவாசா
ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச: காஷாயாம்பர பஹுக்ருத வேஷ: பச்யந்நபி ச ந பச்யதி மூடோ: ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ:
2. தோடகாசார்யர் கூறியது:
சடைதரித்தவனோ, தலைமழித்தவனோ, கேசத்தைக் கத்திரித்து கொண்டவனோ, காவித்துணியால் வெகுவாய் வேஷம் போட்டவனோ, எவனாயிருந்தாலும் மதியில்லாதவன் பார்த்தும் பார்ப்பதில்லை. வெகுவாக வேஷமெல்லாம் வயிற்றின் பொருட்டே ஆகிறது.
3. ஹஸ்தாமலக உவாச
அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தசனவிஹீனம் ஜாதம் துண்டம் வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஞ்சத் யாசா பிண்டம்
3. ஹஸ்தாமலகர் கூறியது:
உடல் தளர்ந்து விட்டது, தலை நரைத்து விட்டது, வாயில் பல் இல்லாமல் போய்விட்டது, கிழவன் கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்; என்றாலும் ஆசைக் கூட்டத்தை விடவில்லை.
4. ஸுபோத உவாச
அக்ரே வஹ்னி: ப்ருஷ்டே பானூ ராத்ரௌ சுபுக ஸமர்பித ஜானு: கரதல பிக்ஷ ஸ்தருதலவாஸ: ததபி ந முஞ்சத் யாசா பாச:
4. ஸுபோதர் கூறியது:
(பகலில்) எதிரில் அக்கினியும் பின்புறம் சூரியனும் (சுடத் சுடத் தவம் செய்கின்றான்); இரவில் (குளிரைச் சகித்துக் கொண்டு) முழந்தாளில் மோவாயை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். கைத்தலத்தில் பிச்சை வாங்கி உண்கிறான்; மரத்தடியில் வசிக்கிறான்; என்றாலும் ஆசைப் பிணிப்பு விடவில்லை.
5. வார்திககார உவாச
குருதே கங்கா ஸாகர கமனம் வ்ரதபரிபாலன மதவா தானம் ஜ்ஞானவிஹீன: ஸர்வமதேன முக்திம் பஜதி ந ஜனமசதேன
5. வார்த்திககாரர் கூறியது:
கங்கை, ஸேது ஸமுத்திரம் முதலிய இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்கிறான் (அல்லது கங்கை, ஸமுத்திரத்தில் சேரும் இடமான கங்கா ஸாகரம் எனும் தீர்த்தத்திற்குச் செல்கிறான்); விரதங்களைக் கைக்கொள்கிறான் அல்லது தானங்களைச் செய்கிறான்; ஞானமில்லாதவன் நூறு ஜன்மங்களிலும் முக்தியை அடைய மாட்டான் என்பதுதான் எல்லா மதங்களுடைய கொள்கையும்.
6. நித்யானந்த உவாச
ஸுரமந்திர தருமூல நிவாஸ: சய்யா பூதல மஜினம் வாஸ: ஸர்வ பரிக்ரஹ போக த்யாக: கஸ்ய ஸுகம் ந கரோதி விராக:
6. நித்யானந்தர் கூறியது:
தேவாலயங்களின் அருகிலுள்ள மரங்களின் அடியில் வாசம்; படுக்கை மண்தரை; உடை தோல்; எல்லா உடைமைகளையும் எல்லா போகங்களையும் துறத்தல். இப்படிப்பட்ட வைராக்கியம் யாருக்குத் தான் சுகத்தை அளிக்காது?
7. ஆனந்தகிரி உவாச
யோக ரதோ வா போக ரதோ வா ஸங்க ரதோ வா ஸங்க விஹீன: யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ
7. ஆனந்தகிரி கூறியது: யோகத்தில் மகிழ்பவனாக இருந்தாலும், போகத்தில் மகிழ்பவனாக இருந்தாலும், கூட்டுறவில் மகிழ்பவனாக இருந்தாலும், தனிமையில் மகிழ்பவனாக இருந்தாலும் எவனுடைய மனது பிரம்மத்தில் மகிழ்கின்றதோ அவன் மகிழ்கிறான். அவன் மகிழ்கிறான். அவன் மகிழ்கிறான்.
8. த்ருடபக்த உவாச
பகவத்கீதா கிஞ்சிததீதா கங்கா ஜல லவ கணிகா பீதா ஸக்ருதபி யேன முராரி ஸமர்சா க்ரியதே தேன யமேன ந சர்சா
8. த்ருட பக்தர் கூறியது: எவனால் பகவத் கீதை சிறிதேனும் படிக்கப்பட்டதோ, கங்கா தீர்த்தம் துளியேனும் பருகப்பட்டதோ, விஷ்ணுவின் அர்ச்சனை ஒரு தடவையேனும் செய்யப்பட்டதோ அவனால் யமனுடன் சச்சரவு செய்யப்படுவதில்லை.
க்ரியதே தஸ்ய யமனே ந சர்ச்சா
9. நித்யநாத உவாச
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் இஹ ஸம்ஸாரே பஹுதுஸ்தாரே க்ருபயாஸபாரே பாஹி முராரே
9. நித்யநாதர் கூறியது: கரையில்லாததும் கடத்தற்கரியதுமான இந்த சம்சாரத்தில் மறுபடியும் பிறப்பு, மறுபடியும் இறப்பு, மறுபடியும் தாயின் வயிற்றில் கிடத்தல். முராரியே, கருணை கூர்ந்து காத்தருள்வாயாக.
10. யோகானந்த உவாச
ரத்யா கர்பட விரசித கந்த: புண்யா புண்ய விவர்ஜித பந்த: யோகீ யோக நியோஜித சித்தோ: ரமதே பாலோன்மத்தவதேவ
10. யோகானந்தர் கூறியது: வழியில் கிடக்கும் கந்தைத் துணிகளால் ஆக்கப்பட்ட ஆடை உடையவனாகவும், புண்ணியமும் பாவமும் அற்ற மார்க்கம் உடையவனாகவும், யோகத்தில் நிறுத்தப்பட்ட சித்தம் உடையவனாகவும் உள்ள யோகி பாலனைப்போலும் பித்தனைப் போலும் மகிழ்ச்சி நிறைந்தவனாகியிருப்பான்.
ரத்யா சர்ப்பட
11. ஸுரேந்த்ர உவாச
கஸ்த்வம் கோஸஹம் குத ஆயாத: கா மே ஜனனீ கோ மே தாத: இதி பரிபாவய ஸர்வமஸாரம் விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்
11. சுரேந்திரர் கூறியது: நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? என் தந்தை யார்? என்றிவ்வாயு எண்ணி உலகனைத்தும் ஸாரமற்றது என்றும் கனவிற் கொப்பானதென்றும் துறந்து அலக்ஷியம் செய்வாயாக.
இதி பரிபாவித நிஜஸம்ஸார: ஸர்வம் த்யக்த்வா ஸவப்ன-விசார:
12. மேதாதிதிருவாச
த்வயி மயி ஸர்வத்ரைகோ விஷ்ணு: வ்யர்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மானம் ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேத ஜ்யானம்
12. மேதாதிதி கூறியது: உன்னிடத்தும் என்னிடத்தும் பிறரிடத்தும் விஷ்ணுவே இருக்கிறார். என்னிடம் சகிப்பின்றி வீணாகக் கோபிக்கிறாய். எல்லோரிடத்தும் ஆத்மாவையே காணபாயாக. வேற்றுமை எண்ணத்தை எங்கும் விட்டுவிடுவாயாக.
12-13. இவ்விரண்டு சுலோகங்களின் முதல் அடியும் கடைசி அடியும் சேர்ந்து ஒரு சுலோகமாகவும், நடு அடிகள் இன்னொரு சுலோகமாகவும் பாடபேதம்.
13. சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ மா குரு யத்னம் விக்ரஹஸந்தௌ பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம் வாஞ்சஸ் யசிராத் யதி விஷ்ணுத்வம்
13. பகைவனிடத்தும் நண்பனிடத்தும், புத்திரனிடத்தும் உறவினரிடத்தும் சண்டைக்கோ சமாதானத்துக்கோ முயற்சி செய்யாதே. நீ விஷ்ணுவின் பதவியை விரும்பினால் விரைவில் எங்கும் சம சித்தமுடையவனாக ஆகவேண்டும்.
14. பாரதீவம்ச உவாச
காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வாத்மானம் பாவய கோஸஹம் ஆத்மஜ்ஞான விஹீநா மூடாஸ் தே பச்யந்தே நரக நிகூடா:
14. பாரதீவம்சர் கூறியது: காமம், கோபம், லோபம், மதிமயக்கம் ஆகியவற்றைவிட்டு நீங்கி நான் யார்? என்று ஆத்ம சிந்தனை செய்வாயாக. ஆத்மஞானமில்லாதவர்கள் மூடர்கள். அவர்கள் நரகத் தீயில் ஆழ்ந்ஆ வேக வைக்கப்படுகின்றனர்.
த்யக்த்வாத்மானம் பச்யதி ஸோஹம்.
15. ஸுமதிருவாச
கேயம் கீதா நாமஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதிரூப மஜஸ்ரம் நேயம் ஸஜ்ஜனஸங்கே சித்தம் தேயம் தீனஜனாய ச வித்தம்
15. ஸுமதி கூறியது: கீதையும் ஸஹஸ்ரநாமமும் பாராயணம் செய்யவேண்டும். ஸ்ரீபதியின் ரூபத்தை இடைவிடாது தியானம் செய்ய வேண்டும். மனதை நல்லவர்களின் இணக்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும். பொருளை ஏழை ஜனங்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
16. ஸுகத: க்ரியதே ராமா போக: பச்சாத்தன்த சரீரே ரோக: யத்யபி லோகே மரணம் சரணம் ததபி ந முஞ்சதி பாபாசரணம்
16. சுகமாக மாதர் போகத்தை ஒருவன் அனுபவிக்கிறான். ஐயோ பாவம்! முடிவில் உடலில் ரோகத்தை அனுபவிக்கிறான். உலகில் மரணம் தான் முடிவில் எல்லோரும் அடைவது என்று தெரிந்திருக்கும் பாவம் செய்வதை விடுவதில்லை.
17. ப்ராணாயமம் ப்ரத்யாஹாரம் நித்யாநித்ய விவேக விசாரம் ஜாப்யஸமேத ஸமாதி விதானம் குர்வவதானம் மஹ தவதானம்
17. பிராணயாமம், வெளி நாட்டத்தினின்று இந்திரியங்களைத் திருப்புதல், எது அழிவது எது அழியாதது என்று ஆராய்ந்தறிதல், ஜபத்துடன் ஸமாதி கூடுதல் ஆகியவற்றை கவனத்துடன், மிக கவனத்துடன், செய்வாயாக.
18. குருசரணாம்புஜ நிர்பரபக்த: ஸம்ஸாரா தசிராத்பவ முக்த: ஸேந்த்ரிய மானஸ நியமாதேவம் த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
18. குருவின் திருவடித் தாமரைகளில் திடமான பக்தி உடையவனாகிப் பிறவித்தளையினின்று விரைவில் விடுபடுவாயாக. இங்ஙனம் இந்திரியங்களுடன் கூட மனதையும் அடக்கி உன்னுடைய இருதயத்தில் உறையும் தெய்வத்தை காண்பாய்.
19. மூட: கச்சன வையாகரணோ டுக்ருஞ்கரணாத்யயன-துரீண: ஸ்ரீமச்சங்கர-பகவச்சிஷ்யைர் போதித ஆஸிச்-சோதித-கரண
19. டுக்ருஞ்கரணே என்ற வியாகரண தாது பாடங்களை அத்தியயனம் செய்வதையே பெரிய காரியமாகக்கொண்டிருந்த ஒரு மூடன் ஸ்ரீசங்கர பகவத்பாதருடைய சீடர்களால் இவ்வாறு ஞானோபதேசம் செய்யப்பெற்றுத் தெளிந்த அந்தக்கரணம் உடையவனானான்.
20. பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே நாம ஸ்மரணா-தன்ய-முபாயம் ந ஹி பச்யாமோ பவதரணே
20. விவேகமற்றவனே! கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, பிறவிக்கடலைக் கடப்பதற்கு நாம ஸ்மரணையைத் தவிர வேறு உபாயத்தை நாங்கள் காணவில்லை.
இதி சர்பட- பஞ்ஜரிகா-ஸ்தோத்ரம் ஸமாப்தம்
இங்ஙனம் சர்ப்பட-பஞ்ஜரிகா ஸ்தோத்ரம் முற்றும்
பஜ கோவிந்தம் முற்றும். |
|
|