SS ஸ்ரீஸூக்தம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீஸூக்தம்
ஸ்ரீஸூக்தம்
ஸ்ரீஸூக்தம்

ஓம் ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்
ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம்
லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ (1)

1) அக்கினி தேவனே! பொன் நிறத்தவளும், பாவங்களைப் போக்குபவளும், பொன் வெள்ளி மாலைகளை அணிந்தவளும், நிலவு போன்றவளும், பொன்மயமானவளுமான மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்!

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ
மனபகாமினீம் யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம்
காமச்வம் புருஷானஹம் (2)

2) அக்கனி தேவனே! யாருடைய அருளால் நான் பொன்னையும் பசுக்களையும் குதிரைகளையும் உறவினரையும் பெறுவேனோ, அந்த மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய், அவள் என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாய்!

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத
ப்ரபோதினீம் ச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா
தேவீர் ஜுஷதாம் (3)

3) முன்னால் குதிரைகளும் நடுவில் ரதங்களும் புடைசூழ வருபவளும், யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்டவளுமான ஸ்ரீதேவியை அழைக்கிறேன். திருமகளே, நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய்!

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய
ப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம்
தர்ப்பயந்தீம் பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்
தாமிஹோபஹ்வயே ச்ரியம் (4)

4) புன்முறுவல் தவழ்பவளும், பொன்கோட்டையில் உறைபவளும், கருணை நிறைந்தவளும், ஒளி பொருந்தியவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும், மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு பிரார்த்திக்கிறேன்.

சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம்
ச்ரியம் லோகே தேவ ஜுஷ்டாமுதாராம் தாம்
பத்மினீமீம் சரணமஹம் ப்ரபத்யேஸலக்ஷ்மீர்மே
நச்யதாம் த்வாம் வ்ருணே (5)

5) சந்திரனைப் போன்றவளும், ஒளிமிக்கவளும், தன் மகிமையால் சுடர்விட்டுப் பிரகாசிப்பவளும், தேவர்களால் வழிபடப் பெறுபவளும், கருணை மிக்கவளும், தாமரையைத் தாங்கியவளும், ஈம் என்ற பீஜமந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளுமான அந்த மகாலட்சுமியை நான் சரணடைகிறேன். தேவியே உன்னை வேண்டுகிறேன் எனது வறுமை விலகுமாறு அருள்வாய்!

ஆதித்ய வர்ணே தபஸோஸதிஜாதோ
வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோஸத பில்வ: தஸ்ய
ஃபலானி தபஸா நுதந்து மாயாந்தராயாச்ச
பாஹ்யா அலக்ஷ்மீ: (6)

6) சூரியனின் நிறத்தவளே, காட்டிற்குத் தலைவனாகிய வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று. அதன் பழங்கள் அறியாமையாகிய அகத் தடையையும், அமங்கலமாகிய புறத் தடையையும் உன் தவத்தாலேயே அழிக்கட்டும்!

உபைது மாம் தேவஸக: கீர்த்தச்ச மணினா
ஸஹ ப்ராதுர் பூதோஸஸ்மி ராஷ்ட்ரேஸஸ்மின்
கீர்த்திம்ருத்திம் ததாது மே (7)

7) குபேரனும், புகழின் தேவனும் செல்வங்களுடன் என்னை நாடி வர வேண்டும். உன் அருள் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன். எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய்!

க்ஷுத்பிபாஸாமலாம் ஜ்யேஷ்டாமலக்ஷ்மீம்
நாசயாம்யஹம் அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வாம்
நிர்ணுத மே க்ருஹாத் (8)

8) பசி தாகத்தினால் மெலிந்தவளும், ஸ்ரீதேவிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விலக்குகிறேன். என் வீட்டிலிருந்து எல்லா ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருள்வாய்!

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்ட்டாம்
கரீஷிணீம் ஈஸ்வரீக்ம் ஸர்வ - பூதானாம் தாமி
ஹோபஹ்வயே ச்ரியம் (9)

9) நறுமணத்தின் இருப்பிடமானவளும், வெல்லப்பட முடியாதவளும், என்றும் வலிமையைத் தருபவளும், எல்லாம் நிறைந்தவளும், எல்லா உயிர்களின் தலைவியுமான மகாலட்சுமியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்.

மனஸ: காமமாகூதிம் வாசஸ்ஸத்யமசீமஹி
பசூனாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ச்ரயதாம்
யச: (10)

10. திருமகளே! மனத்தில் எழுகின்ற நல்ல ஆசைகளையும், மகிழ்ச்சியையும், வாக்கில் உண்மையையும், பசுக்களின் மிகுதியாலும் உணவின் நிறைவாலும் ஏற்படுகின்ற இன்பத்தையும் நான் அனுபவிக்க வேண்டும். எனக்கு கீர்த்தி உண்டாகட்டும்!

கர்த்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம
ச்ரியம் வாஸய மே குலே மாதரம்
பத்மமாலினீம் (11)

11) கர்தம முனிவரே! உமக்கு மகளாய்ப் பிறந்த மகாலட்சுமி என்னிடம் வர வேண்டும். தாமரை மாலை அணிந்தவளும், செல்வத்தின் தலைவியும், அன்னையும் ஆகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.

ஆப: ஸ்ருஜந்து ஸ்னிக்தானி சிக் லீத வஸ
மே க்ருஹே நி ச தேவீம் மாதரம் ச்ரியம்
வாஸய மே குலே (12)

12) திருமகளின் மகனான சிக்லீதரே! தண்ணீர் நல்ல உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யட்டும். என் வீட்டில் நீங்கள் வசிக்க வேண்டும். தேவியும் உமது அன்னையுமான திருமகளை என் குலத்தில் வாழும்படி அருள வேண்டும்!

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்ட்டிம் பிங்கலாம்
பத்மமாலினீம் சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவஹ (13)

13) அக்கினி தேவனே! கருணை மனத்தவளும், தாமரையில் உறைபவளும், உலகை உணவூட்டி வளர்ப்பவளும், குங்கும நிறத்தினளும், தாமரை மாலை அணிந்தவளும், பொன்மயமானவளுமான மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்யவேண்டும்!

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்ட்டிம்
ஸுவர்ணாம் ஹேமமாலினீம் ஸூர்யாம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம
ஆவஹ (14)

14) அக்கினி தேவனே! கருணை மனத்தவளும், கம்பீரமானவளும், செங்கோல் ஏந்தியவளும், அழகிய நிறத்தவளும், சூரியனைப்போல் பிரகாசிப்பவளும், பொன்மயமானவளுமான மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும்!

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ
மனபகாமினீம் யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம்
காவோ தாஸ்யோஸச்வான், விந்தேயம்
புருஷானஹம் (15)

15. அக்கினி தேவனே! யாரால் ஏராளமான பொன்னும், பசுக்களும், பணிப்பெண்களும், குதிரைகளும் ஆட்களும் நான் பெறுவேனோ, அந்தத் திருமகள் என்னை விட்டு விலகாதிருக்குமாறு அருள வேண்டும்!

ய: சுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயாதாஜ்ய
மன்வஹம் ச்ரிய: பஞ்சதசர்ச்சம் ச ஸ்ரீகாம:
ஸததம் ஜபேத் (16)

16) யார் திருமகளின் அருளை வேண்டுகிறானோ, அவன் தூயவனாகவும், புலன்களை அடக்கியவனாகவும் இருந்துகொண்டு தினமும் நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும். திருமகளின் மேற்கண்ட பதினைந்து மந்திரங்களையும் எப்போதும் ஜபம் செய்ய வேண்டும்.

ஆனந்த கர்தமச்சைவ சிக்லீத இதி
விச்ருதா: ரிஷயஸ்தே த்ரய: ப்ரோக்தாஸ்
ஸ்வயம் ஸ்ரீரேவதேவதா (17)

17) பிரபலமானவர்களும் முனிவர்களுமான ஆனந்தர், கர்தமர், சிக்லீதர் ஆகிய மூவரும் இந்த ஸூக்தத்தின் ரிஷிகள்; மகாலட்சுமியே தேவதை.

பத்மானனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம
ஸம்பவே த்வம் மாம் பஜஸ்வ பத்மாக்ஷீ யேன
ஸௌக்யம் லபாம்யஹம் (18)

18) தாமரை போன்ற முகத்தவளே, தாமரை போன்ற கால்களை உடையவளே, தாமரை போன்ற கண்களை உடையவளே, தாமரையில் தோன்றியவளே, நான் எதனால் வளம் பெறுவேனோ அதை எ
னக்கு நீ அருள்வாய்!

அச்வதாயீ கோதாயீ தனதாயீ மஹாதனே
தனம் மே ஜுஷதாம் தேவி ஸர்வ காமாம்ச்ச
தேஹி மே (19)

19) குதிரை, பசு, செல்வம் எல்லாம் தருபவளும், செல்வத்தின் தலைவியுமான மகாலட்சுமியே! எல்லா ஆசைகளும் நிறைவேறுவதால் வரும் இன்பத்தைத் தருகின்ற செல்வத்தை எனக்கு அருள்வாய்!

புத்ர பௌத்ர தனம் தான்யம்
ஹஸ்த்யச்வாதி கவே ரதம் ப்ரஜானாம் பவஸி
மாதா ஆயுஷ்மந்தம் கரோது மாம் (20)

20) பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், செல்வம், தானியம், யானை, குதிரை, முதலியவையும் பசுக்கள், தேர்கள் எல்லாம் தருவாய்! மக்களுக்கு நீ தாயாக இருக்கிறாய். என்னை நீண்ட ஆயுள் உள்ளவனாக ஆக்குவாய்!

தனமக்னிர் தனம் வாயுர்தனம் ஸூர்யோ
தனம் வஸு: தனமிந்த்ரோ ப்ருஹஸ்பதிர்
வருணம் தனமச்னு தே (21)

21) அக்கினி தேவனும், வாயுதேவனும், சூரிய பகவானும், வசுக்களும், இந்திரனும், பிருகஸ்பதியும், வருண தேவனும் தத்தம் செல்வத்தை உன் அருளாலேயே அனுபவிக்கிறார்கள்.

சந்த்ராபாம் லக்ஷ்மீமீசானாம் ஸூர்யாபாம்
ச்ரியமீச்வரீம் சந்த்ர ஸூர்யாக்னி வர்ணாபாம்
ஸ்ரீமஹாலக்ஷ்மீமுபாஸ்மஹே (22)

22) சந்திரனைப்போல் குளிர்ந்து பிரகாசிப்பவளும், தெய்வங்களின் ஆற்றலாக விளங்குபவளும், சூரியனைப் போல் பிரகாசிப்பவளும், திருமகளும், தலைவியும், சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய மூவரையும் மகிமையாகக் கொண்டவளுமான ஸ்ரீமகாலட்சுமியை வழிபடுகிறோம்!

வைனதேய ஸோமம் பிப ஸோமம் பிபது
வ்ருத்ரஹா ஸோமம் தனஸ்ய ஸோமினோ
மஹ்யம் ததாது ஸோமின: (23)

23) கருடனே! சோம ரசத்தைப் பருகு. விருத்திராசுரனைக் கொன்றவனான இந்திரன் சோம ரசத்தைப் பருகட்டும். சோம யாகம் செய்ய விரும்புகின்ற எனக்கு ஏராளமான செல்வத்தைத் தரட்டும்!

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ
நாசுபா மதி: பவந்தி க்ருத புண்யானாம்
பக்தானாம் ஸ்ரீஸூக்தம் ஜபேத்ஸதா (24)

24) புண்ணியம் செய்த பக்தர்களுக்குக் கோபம் வருவதில்லை, பொறாமை வருவதில்லை, கருமித்தனம் வருவதில்லை, கெட்ட புத்தி வருவதில்லை, பக்தி பெறுவதற்காக அவர்கள் ஸ்ரீஸூக்தத்தை எப்போதும் ஜபிக்க வேண்டும்.

வர்ஷந்து தே விபாவரி திவோ அப்ரஸ்ய
வித்யுத: ரோஹந்து ஸர்வ பீஜான்யவ ப்ரஹ்ம
த்விஷோ ஜஹி (25)

25) உன் கருணையால் மேகங்கள் மின்னலுடன் இரவும் பகலும் மழை பொழியட்டும். எல்லா விதைகளும் நன்றாக முளைத்து வளரட்டும். கடவுளை நிந்திப்பவர்கள் விலகிவிடட்டும்!

பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே
பத்மதலாயதாக்ஷி விச்வப்ரியே விஷ்ணு
மனோஸனுகூலே த்வத்பாத பத்மம் மயி
ஸன்னிதத்ஸ்வ (26)

26. தாமரையை விரும்புபவளே, தாமரை மகளே, தாமரையைக் கையில் ஏந்தியவளே, தாமரையில் வீற்றிருப்பவளே, தாமரையிதழ் போன்ற அகன்ற கண்களை உடையவளே, உலகிற்குப் பிரியமானவளே, விஷ்ணுவின் மனத்திற்கு உகந்தவளே உனது திருவடித் தாமரைகளை என்மீது வைத்தருள்வாய்!

யா ஸா பத்மாஸனஸ்தா விபுல கடிதடீ
பத்ம பத்ராயதாக்ஷி கம்பீராவர்த்தநாபி:
ஸ்தனபர நமிதா சுப்ர வஸ்த்ரோத்தரீயா
லக்ஷ்மீர் திவ்யைர் கஜேந்த்ரைர் மணிகண
கசிதை: ஸ்னாபிதா ஹேம கும்பை: நித்யம் ஸா
பத்மஹஸ்தா மம வஸது க்ருஹே ஸர்வ
மாங்கல்ய யுக்தா (27)

27) யார் தாமரையில் வீற்றிருப்பவளோ, பருத்த பின் புறங்களை உடையவளோ, தாமரையிதழ் போன்ற கண்களை உடையவளோ, கம்பீரமான தொப்புள் உடையவளோ, மார்பகங்களின் பாரத்தால் தலைகுனிந்தவளோ, வெண்ணிறமான ஆடையும் மேலாடையும் தரித்தவளோ, ரத்தினங்கள் பதித்த பொற்கலச நீரைக் கொண்டு தேவலோகத்தின் சிறந்த யானைகளால் அபிஷேகம் செய்யப்படுபவளோ, தாமரையைக் கையில் தாங்கியவளோ, எல்லா மங்கலமும் நிறைந்தவளோ அந்த மகாலட்சுமி என் வீட்டில் என்றென்றும் வசிக்க வேண்டும்.

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதனயாம் ஸ்ரீரங்க
தாமேச்வரீம் தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம்
லோகைக தீபாங்குராம் ஸ்ரீமன்மந்த கடாக்ஷ
லப்த விபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம் த்வாம்
த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே
முகுந்தப்ரியாம் (28)

28) அதிர்ஷ்டத்திற்கு இருப்பிடமானவளும், பாற்கடலரசனின் மகளும், ஸ்ரீரங்கத்தில் உறைகின்ற தேவியும், தேவலோகப் பெண்கள் அனைவரையும் பணிப்பெண்களாகக் கொண்டவளும், உலகிற்கு ஒரே தீபமாக இருப்பவளும், யாருடைய மென்மையான கடைக்கண் பார்வையைப் பெற்றதால் பிரம்மனும் இந்திரனும் சிவபெருமானும் பெருமை பெற்றார்களோ அவளும், மூன்று உலகங்களையும் குடும்பமாகக் கொண்டவளும், தாமரைக் குளத்தில் தோன்றியவளும், மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளுமான உன்னை வணங்குகிறேன்.

ஸித்த லக்ஷ்மீர் மோக்ஷ லக்ஷ்மீர் ஜயலக்ஷ்மீஸ்
ஸரஸ்வதீ ஸ்ரீலக்ஷ்மீர் வரலக்ஷ்மீச்ச ப்ரஸன்னா
மம ஸர்வதா (29)

29) நினைத்ததை நிறைவேற்றவல்ல ஸித்த லட்சுமியாகவும், முக்தியைத் தரவல்ல மோட்ச லட்சுமியாகவும், வெற்றியைத் தரவல்ல ஜெய லட்சுமியாகவும், தாமரைக் குளத்தில் தோன்றியவளாகவும், செல்வத்தைத் தரவல்ல திருமகளாகவும், வரங்களைத் தரவல்ல வரலட்சுமியாகவும் இருக்கின்ற நீ எனக்கு எப்போதும் அருள் நிறைந்தவளாக இருப்பாய்!

வராங்குசௌ பாசமபீதி முத்ராம் கரைர்
வஹந்தீம் கமலாஸனந்தாம் பாலார்க்க கோடி
ப்ரதிபாம் த்ரிணேத்ராம் பஜேஹமாத்யாம்
ஜகதீச்வரீம் த்வாம் (30)

30) வரம் மற்றும் அபய முத்திரைகளைக் கைகளில் தாங்கியவளும், பாசம் அங்குசம் ஆகிய ஆயுதங்களைக் கைகளில் தாங்கியவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், கோடி உதயசூரியப் பிரகாசம் பொருந்தியவளும், மூன்று கண்களை உடையவளும், ஆதி சக்தியும், உலகின் இறைவியுமான அவளை நான் துதிக்கிறேன்.

ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ர்யம்பகே
தேவி நாராயணி நமோஸஸ்து தே நாராயணி
நமோஸஸ்து தே நாராயணி நமோஸஸ்து
தே (31)

31) மங்கலம் அனைத்திற்கும் மங்கலமானவளே, மங்கலத்தைத் தருபவளே, எல்லா நன்மைகளையும் தருபவளே, சரணடைவதற்கு உரியவளே, மூன்று கண்களை உடையவளே, தேவீ, நாராயணீ உனக்கு நமஸ்காரம்!

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவளதராம்சுக கந்தமால்ய சோபே பகவதி
ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவனபூதிகரி
ப்ரஸீத மஹ்யம் (32)

32. தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே, தாமரையைக் கையில் தாங்கியவளே, தூய வெள்ளாடையும் நறுமண மாலையும் அணிந்து அழகாய் விளங்குபவளே, பகவதீ, திருமாலின் துணைவியே, விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவளே, வளமளித்து மூவுலகையும் காப்பவளே எனக்கு அருள்புரிவாய்!

விஷ்ணுபத்னீம் க்ஷமாம் தேவீம் மாதவீம்
மாதவப்ரியாம் விஷ்ணோ: ப்ரிய ஸகீம் தேவீம்
நமாம்யச்யுத வல்லபாம் (33)

33) திருமாலின் தேவியும், பூமாதேவியாக இருப்பவளும், துளசிச் செடியாக இருப்பவளும், மாதவனுக்குப் பிரியமானவளும், அவனது மனத்திற்கு உகந்த துணைவியும், அவனுடன் இணைந்தவளுமான தேவியை வணங்குகிறேன்.

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி தன்னோ லக்ஷ்மீ:
ப்ரசோதயாத் ஓம் (34)

34) மகாலட்சுமியை அறிந்துகொள்வோம். திருமாலின் துணைவியான அவளை அதற்காக தியானிப்போம். அந்த லட்சுமிதேவி நம்மைத் தூண்டுவாளாக!

ஸ்ரீவர்ச்சஸ்யமாயுஷ்ய மாரோக்யமாவிதாத்
பவமானம் மஹீயதே தனம் தான்யம் பசும்
பஹு புத்ரலாபம் சதஸம்வத்ஸரம் தீர்கமாயு:
ரிண ரோகாதி தாரித்ர்ய பாபக்ஷுதபம்ருத்யவ:
பய சோக மனஸ்தாபா நச்யந்து மம
ஸர்வதா (35)

35) மகாலட்சுமியே! ஆற்றல், வளமான வாழ்க்கை, நல்ல உடல்நிலை இவற்றை எனக்குத் தந்தபடி எப்போதும் காற்று வீசட்டும். செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், பிள்ளைச் செல்வங்கள், நூறாண்டுகள் நீண்ட ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன், நோய், வறுமை, பசி, அகால மரணம், பயம், கவலை, மனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்!

ச்ரியே ஜாத ச்ரிய ஆனிர்யாய
ச்ரியம் வயோ ஜரித்ருப்யோ ததாது
ச்ரியம் வஸானா அம்ருதத்வமாயன்
பஜந்தி ஸத்ய: ஸவிதா விதத்யூஜன் (36)

36) திருமகள் சேர்பவர்களுக்கு செல்வம் சேர்கிறது; ஐசுவரியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. அவர்கள் செல்வத்தில் திளைத்தபடி மரணமற்ற நிலையை அடைகிறார்கள். விரைவாக புகழையும் வெற்றியையும் அடைகிறார்கள்.

ச்ரிய ஏவைனம் தச்ச்ரியாமாததாதி
ஸந்ததம்ருசா வஷட்க்ருத்யம்
ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபி:
ய ஏவம் வேத (37)

37) எல்லா நன்மையும் திருமகளேதான் இவ்வாறு அறிபவன் திருமகளை அடைகிறான். மந்திரங்களுடன் யாகம் எப்போதும் செய்ய வேண்டும். அப்படி செய்பவனுக்கு மக்கட் செல்வமும் கால்நடைச் செல்வமும் கிடைக்கிறது. இதனை அறிந்துகொள்ள வேண்டும்.

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

மகா தேவியான திருமகளை அறிந்துகொள்வோம். திருமாலின் துணைவியான அவளை அதற்காக தியானிப்போம். அந்த லட்சுமி தேவி நம்மைத் தூண்டுவாளாக!

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

நமஸ்தேஸஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கசக்ர கதாஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸஸ்துதே (1)

1) மாயை வடிவினளே, ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருப்பவளே, தேவர்களால் வழிபடப் பெறுபவளே, சங்கு சக்கரம் கதை ஆகியவற்றைக் கையில் தாங்கியவளே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்!

நமஸ்தே கருடாரூடே
கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (2)

2) கருடனை வாகனமாகக் கொண்டவளே, கோலாசூரனை நடுங்கச் செய்தவளே, எல்லாப் பாவங்களையும் அழிப்பவளே, மகாலட்சுமி தேவியே உன்னை வணங்குகிறேன்!

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே
ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வது: க்கஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (3)

3) எல்லாம் அறிபவளே, எல்லா வரங்களையும் நல்குபவளே, எல்லாத் தீயவர்களையும் அச்சமுறச் செய்பவளே, எல்லாத் துன்பங்களையும் அழிப்பவளே, மகாலட்சுமி தேவியே உன்னை வணங்குகிறேன்!

ஸித்திபுத்திப்ரதே தேவி
புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸதா தேவி
மஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (4)

4) ஆற்றல், விழிப்புணர்வு, இன்பம், மோட்சம் எல்லாம் நல்குபவளே, மந்திர வடிவினளே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

ஆத்யந்தரஹிதே தேவி
ஆதிசக்தி மஹேச்வரி
யோகஜே யோகஸம்பூதே
மஹாலக்ஷ்மி நமோஸஸ்துதே (5)

5) முதல் முடிவற்றவளே, ஆதிசக்தியே, உலகை நடத்துபவளே, யோகநிலையில் இருப்பவளே, யோக நிலையால் அடையப்படுபவளே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்!

ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே
மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (6)

6) தூல சூட்சும வடிவினளே, மிகவும் பயங்கர வடிவினளே, எல்லையற்ற ஆற்றல் கொண்டவளே, அனைத்தையும் தன்னுள் கொண்டவளே, மகாபாவங்களையும் அழிப்பவளே, மகாலட்சுமி தேவியே உன்னை வணங்குகிறேன்!

பத்மாஸனஸ்திதே தேவி
பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன்மாதர்
மஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (7)

7) தாமரை மலரில் வீற்றிருப்பவளே, பரப்பிரம்ம வடிவினளே, மேலான இறைவியே, உலக அன்னையே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்!

ச்வேதாம்பரதரே தேவி
நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாதர்
மஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (8)

8) வெண்ணாடை தரித்தவளே, பலவித அலங்காரத்துடன் கூடியவளே, உலகிற்கு ஆதாரமானவளே, உலக அன்னையே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்!

மஹாலக்ஷ்ம்யஷ்டக ஸ்தோத்ரம்
ய: படேத் பக்திமான் நர:
ஸர்வஸித்திமவாப்னோதி
ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா (9)

9) மகாலட்சுமியைப் பற்றிய இந்த எட்டு பாடல்களையும் பக்தியுடன் படிப்பவர்கள் எல்லா செல்வங்களும் நன்மையும் பெறுவார்கள்.

ஏக காலம் படேந்நித்யம்
மஹாபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந்நித்யம்
தனதான்ய ஸமன்வித: (10)

10) தினமும் இந்த அஷ்டகத்தை ஒருமுறை படித்தால் மகாபாவங்கள் அழியும்; இருமுறை படித்தால் செல்வ வளமும் தானிய வளமும் பெருகும்.

த்ரிகாலம் ய: படேந்நித்யம்
மஹாசத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம்
ப்ரஸன்னா வரதா சுபா (11)

இதி இந்த்ரக்ருத

மஹாலக்ஷ்ம்யஷ்டகம் ஸம்பூர்ணம்

11) மும்முறை படிப்பவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். என்றென்றும் மகாலட்சுமி அவர்களிடம் மகிழ்வுடன் எழுந்தருளி வரங்களும் மங்களமும் நல்குவாள்.

இந்திரனால் அருளப்பெற்ற மகாலட்சுமி அஷ்டகள் நிறைவுற்றது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar