உலகின் ஆதியே ஊழி அந்தமே அலைகள் ஆர்த்திடும் ஆழிச் சங்கமே மலைகள் போர்த்திய மாரிப் பந்தலே கலைகள் வீரமா காளி அம்மனே!
பெருமை ஊட்டுவாய் பீடு நாட்டுவாய் அருமை வாழ்வினை ஆண்டு காட்டுவாய் திருவின் வானமே தெற்கின் காவலே கருணை வீரமா காளி அம்மனே!
புவியின் அன்னையே பூவின் மென்மையே அவியும் வேள்வியின் ஆற்றல் வன்மையே ரவியும் திங்களும் சேர்ந்து தீட்டிய கவிதை வீரமா காளி அம்மனே!
அருவி போல்வரம் ஆறு போலருள் உருவில் பேரலை ஊற்றில் ரௌத்திரம் பெருகும் மாமழை பேணி வாழ்ந்திடக் கருவி வீரமா காளி அம்மனே!
அழகுப் பூவனம் ஆதி ஐந்தினை உழவின் மண்மணம் ஊறும் சிந்தனை பழகும் பல்கலை பாவை செம்மொழிக் கழகம் வீரமா காளி அம்மனே!
பவள வேல்விழி பால்வெண் பல்லணி புவனம் காத்திடப் பொங்கும் போர்முகம் நவமும் தொன்மையும் நாடி நல்கிடும் கவசம் வீரமா காளி அம்மனே!
வனமும் ஆழியும் வாழும் குன்றமும் புனமும் பாலையும் போற்றும் தாய்மையே தினமும் வேளையும் தேவை தீர்ப்பவள் கனகம் வீரமா காளி அம்மனே!
பழகு நாடகம் பாடும் இன்னிசை அழகுச் சொற்றொடர் ஆளும் செம்மொழி விழவின் நாயகி வீரம் பூத்திடும் கழனி வீரமா காளி அம்மனே!
சுடரின் வீதியாள் சோதி ஆதியாள் நடனப் போதியாள் நாட்டின் நாதியாள் உடலின் பாதியாள் ஊழின் மீதியாள் கடமை வீரமா காளி அம்மனே!
இடியும் மின்னலும் ஏற்ற மாமழை படியும் நன்செயில் பாடு ஏற்பவர் விடியும் காலையாய் வேர்வை நோற்பவர் கடவுள் வீரமா காளி அம்மனே! |