|
(சிரவையாதீனம் கவிக்கடல் தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் மாணவர் சிரவை தவத்திரு மருதாசல (தம்பி) சுவாமிகள் இயற்றியது)
எண் விருத்தங்கள்
1. திருமுகமண் டலமொளிரக் கிரீடம் மின்னத் திருச்செவியில் தோடாடத் திருக்கண் நோக்கம் வரும் அடியார்க் கருள்புரியக் கழுத்தின் பாங்கர் மகாதேவன் கரத்தணிமங் கலநாண் தங்க மருமலர்மா லிகையாடச் செங்கை தோறும் மன்னு படை பொண்ணிகள் பலவும் தோன்றத் திருவடியிற் சிலம்பதிர ஆடீர் ஊசல் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்
2. உயர்மாற்றுப் பசும்பொன்னால் பீடம் ஆக்கி ஒளிர்பச்சை மரகதத்தாற் கால்கள் ஆக்கி வெயில்விரிக்கும் வயிரத்தால் விட்டம் ஆக்கி விரிகிரண வெண்முத்தால் வடமும் ஆக்கி அயர்வகற்றும் இமயமலை மன்னன் தேவி ஆம், மேனை அன்னையார் ஆட்டூ சல்போல் செயஅறியோம்; செயும் இந்த ஊசல் ஆடீர் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்
3. எவ்வுயிர்க்கும் உயிரான ஈசன் தேவி எவ்வுயிர்க்கும் தாயான இமயப் பாவாய் எவ்வுயிர்க்கும் சுகமளிக்கும் சுகசொ ரூபி எவ்வுயிர்க்கும் கருணைபொழி இனிய வானே செவ்வியதா மரைப்பூவும் முல்லைப் பூவும் திருமருவும் மல்லிகையும் சேர்த்திக் கட்டிச் செவ்வியர்கள் அலங்காரம் செய்பொன் னூசல் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்
4. வானத்தின் மின்னாட இடியும் ஆட மழைத்துளிகள் கோடிபல கோடி ஆடக் கானத்தின் மரங்களெலாம் செழிப்பாய் ஆடக் கரும்புசெந்நெல், தென்னை, பலா, கனித்தே மா, வும் தானத்திற் கிளைத்தெழுசெவ் வாழை ஆதித் தருக்கள்எலாம் வளர்ந்தாடக் கண்டோர் ஆடத் தேனக்க மலர்க்கொன்றை யார்தம் தேவி சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்
5. மகாதேவ னார்ஆடத் திருமால் ஆட மறைதரு நான்முகனாட மதனன் ஆடக் குகன் ஆட விநாயகரும் கூட ஆடக் குபேரன்ஆ டிடத்தேவேந் திரனும் ஆடக் தகதாவென் றேபூத கணமு மாடச் சந்திரசூ ரியர்வித்யா தரரும் ஆடச் செகமீதில் அன்பரெலாம் மகிழ்வாய் ஆடச் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்
6. ஆத்திகமாம் தருமங்கள் எதையும் எண்ணார் ஆகமங்கள் வேதங்கள் அறிவோர் சொன்ன சாத்திரங்கள் பொய்யென்று தருக்கம் பேசிச் சமயநெறிச் சின்னத்தை இகழ்ந்து மேலாம் நேத்திரமாம் ஞானமின்றி முகக்கண் ணாலே நிமலனைக்கண் டிலம் அதனால் இல்லை என்னும் தீத்தொழிலோர் உளம்தெளிய ஆடீர் ஊசல் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்.
7. பவானி, மயிடாசுரசங் காரி, வாலை பார்வதி, மீனாட்சி, காமாட்சி, வீசும் சுவாலையுள முக்கண்ணி, கவுரி, ஞான சுந்தரி, மகாமாயி, மாரி, ஆடும் சபாபதியாம் சிவகாம சவுந்த ரீ, நற் சங்கரீ, சிங்கவா கனி, சா முண்டி சிவானந்தி, அபிராமி, புவனை, எங்கள் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்.
8. தருக்கோல விண்ணோர்கள் தாமும் போற்றும் தாயார்நீர் எந்நாளும் தங்கி வாழும் திருக்கோயிற் புதுப்பித்துப் பணிசெய் அன்பர் செம்பொனீந் தவர் கும்ப நீராட் டாற்றி உருக்கோலத் திருமேனி, உற்ச வச்சீர், உவந்துசெய்தார்க் குயர்நலங்கள் உதவ வேண்டி தெருக்கோல மாளிகைச்சீர் சிறப்பு மிக்க சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்
9. கலைமகளும் திருமகளும் வடந்தொட் டாட்டக் கமலினியும் அநிந்திதையும் மாலைதாங்கச் சிலைநுதல் இந் திராணிரதி கவரி வீசத் தெய்வானை வள்ளி, புகழ்ச் சிறப்பைப் பாட கலைவான மகளிர்மங் கலங்கள் தாங்கக் கண்டதிருத் தொண்டருளும் களிக்க, மேருச் சிலையுடையோன் தலை அசைக்க ஆடீர் ஊசல் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்.
10. அன்னபர மேஸ்வரி நீர் ஆடீர் ஊசல் அகிலாண்ட நாயகிநீர் ஆடீர் ஊசல் பன்னகமோ திரவிரலீர் ஆடீர் ஊசல் பராசக்தி, அம்பிகை, நீர் ஆடீர் ஊசல் மன்னுகவு மாரி நீர் ஆடீர் ஊசல் மருதாச லன்பாட்டுக் காடீர் ஊசல் தென்னைபொலி கோயிலுளீர் ஆடீர் ஊசல் சிரவணவூர்க் காளியம்மை ஆடீர் ஊசல்
வாழி வெண்பா
வாழி சிரவணவூர் வாழிபத்ர காளியுமை வாழி அவிர்கோயில் வாழியே - வாழியவே சன்மார்க்கம், பக்தி, தவம் உடையார், இவ்வுலகம் நன் மார்க்கத்தின் பால் நயந்து. |
|
|