அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலம் நேயர் கரமே இகமும் பரமும் இணையும் இடமே ஈதல் மரபாம் இதயத் தவமே உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே ஒளியே விழியே உயிரே வழியே ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்அவ் வுலனை ஆக்கும் நிலையே அடியன் சரணம் சரணம் சரணம்! அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே வேதம் விளையும் வித்தே விளைவே நாதம் பொழியும் நலமே நிலமே ஓதும்பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய் அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்!
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய் படித்தவன் மகிழப் பரமே வருக மூன்று குணங்கள் முறையாகக் கூறிய சான்றோன் பாதம் தாவி அணைத்தேன் சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன் பக்கென உந்தன் பாதம் பற்றினேன் கொக்கென நின்று குறிவைத் திருந்தேன் அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் இக்கணம் என்னை ஏங்க விடாமல் தக்கவ னேநீ தயவுடன் அருள்க கல்லாய்ப் போனவள் காலடி பட்டு பெண்ணாய் ஆனது பிழையே அன்று!
உன்னால் தானே உலக இயக்கம் கண்ணனி லாமல் கடல்வான் ஏது? கண்ணனி லாமல் கடவுளு மில்லை கண்ணனி லாமல் கவிதையு மில்லை கண்ணனி லாமல் காலமு மில்லை கண்ணனி லாவிடில் காற்றே இல்லை எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்! சத்திய நாதன் தாள்களை மறவேன்! தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன் உன்னை நம்பி உன்னையே சேர்ந்தால் பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்கு தர்மம் நிலைக்க பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல் மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல் இல்லை என்றொரு நாளில் லாமல் இன்னும் என்னும் ஆசை வராமல் தொல்லை என்பது துளியு மிலாமல் தொற்றும் நோய்கள் பற்றி விடாமல் முதுமைத் துயரம் மூண்டு விடாமல் படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்
சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு நிந்தனை பெற்று நீங்கி விடாமல் என்றும் பதினா றிளமை வழங்கு இப்பணி தொடர அற்புதம் காட்டு தளராமேனியில் சக்தியைக் கூட்டு தாய்போ லிருந்து சாதம் ஊட்டு வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு! உலகில் ஒருவன் உத்தமன் இவனென உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர் சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும்விளங்க மளமள மளவென மனையிருள் நீங்க கலகல கலவெனக் காசுகள் சேர தளதாள தளவெனத் தர்மம் தழைக்க வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க ஐயா சரணம் சரணம் சரணம் அடியவன் வாழ்வில் நீயே கவசம் கவசம் கவசம் கவசம் கவசம் வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் கவசம் கவசம் கவசம் கவசம் வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம்