|
யாதேவி ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநம:
எந்த தேவியானவள், இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் தாய்மை உணர்வோடு விளங்குகிறாளோ, அந்த தேவிக்கு எனது நமஸ்காரங்கள் என்று போற்றுகிறோம்.
எல்லாம்வல்லதேவி, தானே இவ்வுலகத்தின் அன்னையாக இருந்து நம்மைக் காப்பாற்றி வருகின்றாள். லலிதா ஸஹஸ்ர நாமமும் மாதா என்று தேவியை தாயாகவே வர்ணிக்கிறது. ஒரு தாய் எப்படி தன் குழந்தையின் மீது கருணையுடன் திகழ்வாளோ, அப்படியே உலக மாதாவான ஆதிபராசக்தியும் நம்மீது கருணையுள்ளம் கொண்டவளாக விளங்குகின்றாள். அவளின் அருளைப் பெற, சாஸ்திரங்கள் பல வழிமுறைகளை நமக்கு அளித்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நவராத்திரி வழிபாடு. சரத்காலே மஹாபூஜா க்ரியதேயாச வார்ஷிகி என்கிறது தேவி மஹாத்மியம். அதன்படி, இந்த சரத் கால நவராத்திரியில் எல்லாம் வல்ல அன்னையை வழிபட்டு, எண்ணிய பலன்களை அடைந்து மகிழ்வோம்.
அம்பிகை வழிபாட்டில், தசமகா வித்யா தேவியருக்கான வழிபாடு குறிப்பிடத்தக்கது. இவர்களை எப்போதுமே வழிபடலாம் என்றாலும், சக்திதேவிக்கு உகந்த நவராத்திரியில் வழிபடுவது, இன்னும் விசேஷம். தசமகா தேவியருக்கான வழிபாட்டு முறைகளையும் மிகத் தெளிவாக அளித்திருக்கின்றன சாஸ்திரங்கள். பல நூற்றாண்டுகளாக நம் தேசத்தின் மீது நிகழ்ந்த அந்நிய படையெடுப்புகள் ஆதிக்கங்கள் காரணமாக, நமது கலாசாரத்தில் <உள்ள ஆழ்ந்த தத்துவங்களை நாம் முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவற்றின் மகத்துவங்களையும் மறந்து, சில மதியீனர்கள் காட்டிய தவறான வழியில் சென்று, மகிழ்ச்சியைத் தரக்கூடிய இந்த உயர்ந்த உபாசனைகளை நாம் தவற விட்டு விட்டோம். எனினும், எல்லாம் வல்ல அன்னையானவள், நாம் நன்மை அடைய வேண்டி, மறைந்து நின்ற இந்த உயர்ந்த மகத்துவங்களை எல்லாம் இருளை நீக்கி பேரொளி தரும் ஞான தீபங்களாக, இந்த நூற்றாண்டில் பல மகான்களின் மூலமாக, வழங்கியிருக்கிறாள்.
அந்த மகத்துவங்களில் ஒன்று தசமகாவித்யா தேவியர் வழிபாடு. தச என்றால் பத்து, மஹா என்றால் பெரிய, வித்யா என்றால் அறிவு. இங்கு வித்யா என்பது, வெறும் அறிவை மட்டுமே குறிக்காமல், அறிவினால் அடையக்கூடிய பராசக்தியை குறிப்பதாக உள்ளது. ஆகவே, பத்துவிதமான சக்திகள் பற்றி அறியக் கூடியதாகத் திகழ்கிறது இந்த வழிபாடு. நவராத்திரி காலத்தில் விஜயதசமியையும் சேர்த்து பத்து நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியின் திருவடிவில் ஆதிசக்தியை மனதில் தியானித்து வழிபட்டுவந்தால், நமது இன்னல்கள் யாவும் நீங்கும்; அன்னையின் அருளால் சகல வரங்களும் கைகூடும். |
|
|