|
ஆதிபராசக்தி அனந்தகோடி பிரம்மாண்டங்களின் நாயகி. ஆதியும் அந்தமும் இல்லாதவள்.
யதா யதா ஹி ஸாதூனாம் துக்கம் பவதி தானவ ததா தேஷாம் ச ரக்ஷார்த்தம் தேஹம் ஸந்தாரயாம்யஹம் அரூபாயஸ்ச மே ரூபம் அஜன்மாயாஸ்ச ஜன்ம ச
அதாவது மகிஷாசுரனை நோக்கி, ஹே, மகிஷாசுர, ஸாதுக்களுக்கு எப்போதெல்லாம் துன்பம் நேரிடுகின்றதோ, அப்போதெல்லாம் தேகமெடுக்கின்றேன். உருவமில்லா எனக்கு உருவமும், பிறவியற்ற எனக்கு ஜன்மாவும் அமரரைக் காப்பதற்காகவே ஏற்படுகின்றது என்பதை அறிந்துகொள் என்று தேவி உரைப்பதாகச் சொல்கிறது தேவி பாகவதம். இவை அசுரனுக்கு கூறிய வார்த்தைகள் மட்டுமல்ல, கடவுளின் சக்தியைக் குறித்து பலநேரங்களில் நடக்கும் சந்தேகம் வரும்போது, அந்த மாய இருளை நீக்க கடவுள் கொடுத்த அருள்விளக்கு எனவும் கொள்ளலாம். அனைத்து காலங்களிலும் நம்மை காக்கக் கூடிய சக்தியே காளி. பத்ரம் எனில் நன்மை. எனவே அவளை பத்ரகாளி அதாவது அனைத்து காலங்களிலும் நன்மை செய்பவள் என்று போற்றுகிறோம். அவள் இருப்பதாகச் சொல்லப்படும் மசானம் என்பது, ஏதோ இங்கு நாம் காணும் மயானமல்ல, மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கி இருக்கும் நிலையில் அவள் ஒருவளே ஆதிசக்தி என்பதை <உணர்த்துவதே.
கலனாத் காளீ என்று அனைத்து பூதங்களையும் தன்னுள் அடக்கிவைத்த நிலையில் காளி என்று போற்றப்படுகிறாள் அன்னை. அவள் எல்லா யுகங்களிலும் நமக்கு நன்மை அளிப்பினும், கலிகாலத்தில் <உயரிய பலன்களை அருள்பவளாகத் திகழ்கிறாள். பயப்படவேண்டாம், நான் அபயம் அளிக்கிறேன் என்று காளி தன் பக்தர்களை பயத்தினின்று காப்பாற்றுகிறாள். விக்னேச்வரர், இந்திரன், பரசுராமர், கங்கை, லட்சுமி, சூரியன், சந்திரன், ராவணன், குபேரன், வாயு, குரு, சுக்ரர், ஹனுமான் முதலிய பலரும் காளி உபாசகர்கள் என விவரிக்கிறது காளி கல்பதரு எனும் ஞானநூல். காளியை வழிபடுபவர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பலம், புஷ்டி, பெரும் கீர்த்தி, கவிபுனையும் சக்தி, போக மோக்ஷம் முதலான உயர்ந்த பலன்களை அடைவர்.
காளியின் அனுக்கிரஹத்தால் பிரம்ம ஞானம் ஏற்படுகிறது. காளி <உபாசகனே புண்ணிய சாலியாகவும், குலம் தழைக்கச் செய்யும் புத்திரனாகவும் ஆகின்றான். அவன் ஜீவன் முக்தனாக விளங்குகிறான். தக்ஷிணகாளி என்று போற்றப்படுபவள் தேவி. தக்ஷிண என்றால் வலது என்று பொருள். பொதுவாக வலது பாகம் என்பது சிவபெருமானுடையது. ஆதலின் சிவபெருமானின் ஆற்றல், சக்தி இவளே என்று நாம் அறிய இந்தப் பெயர் விளங்குகிறது. தக்ஷிணம் என்றால் தெற்கு திசையைக் குறிக்கும். இந்த தக்ஷிண காளியை வழிபடுவதால், தெற்கு திசையின் அதிபதியான யமதர்மராஜனைப் பற்றிய பயம் நம்மை அணுகாது. இவள் தக்ஷிணாமூர்த்தி என்று போற்றப்படும் தென்முகக் கடவுளின் அருளை ஒரு தாயின் உருவில், எளிமையானதாக நமக்குப் பெற்றுத் தருகிறாள். அதேநேரத்தில் மிகுந்த ஆற்றல் உடையதாக செய்து கொடுப்பதினாலும், இவளை தக்ஷிணகாளி என்று போற்றுகிறோம்.
ஆதிகாளீ, பத்ரகாளீ, ச்மசான காளீ, காலகாளீ, குஹ்ய காளீ, காமகலா காளீ, தனகாளீ, ஸித்தி காளீ, சண்டி காளீ, டம்பர காளீ, கஹனேச்வரீ காளீ, ஏகதாரா காளீ, சாமுண்டா காளீ, வஜ்ராவதீ காளீ, ரக்ஷா காளீ, இந்தீவரீ காளீ, தனதா காளீ, ரமண்யா காளீ, ஈசான காளீ, மந்த்ரமாலா காளீ, ஸ்பர்சமணி காளீ, ஸம்ஹார காளீ, தக்ஷிண காளீ, ஹம்ஸ காளீ, வீர காளீ, காளீ, காத்யாயனி, சாந்தா, சாமுண்டா, முண்டமர்தினி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி என்று காளியை பல வடிவங்களில் வர்ணிக்கின்றன ஞானநூல்கள். காளி என்றாலே நாம் பயம் அடையாமல், நம்மை பயத்தில் இருந்து காக்கக்கூடிய சக்தியே அவள் என்பதை உணர்ந்து, கீழ்க்காணும் மந்திரங்களை ஜபித்து வழிபட்டு அருள் பெறுவோம் (தேவியரின் மூல மந்திரத்தை குருமுகமாகப் பெற்று ஜபித்திட வேண்டும்.)
ஸ்ரீகாளி காயத்ரீ:
ஓம் காளிகாயை வித்மஹே ச்மசானவாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத்
மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீகாளீதேவ்யை நம: |
|
|