|
புவனங்களும் எல்லாம் தலைவியாகத் திகழ்பவள், புவனேஸ்வரி. ஞானியர் போற்றும் குண்டலினி சக்தி இவளே. விச்வஸ்ய பீஜம் பரமாஸி மாயா என்று, இந்த தேவியை <உலகின் விதையாகப் போற்றுகிறது தேவிமகாத்மியம். நாம் அனைவரும் அந்த ஆதிசக்தியின் குழந்தைகள். அம்மையின் திருக்கரங்களில் திகழும் அபய-வரத முத்திரைகள், அவளது தாயுள்ளத்தையே காட்டுகின்றன. உலகத்தவருக்கு பயம் வந்தால், அதைப் போக்க பராசக்தியால்தான் முடியும். அப்படி, சகல ஜீவராசிகளுக்கும் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதையே தனது அபய முத்திரையால் உணர்த்துகிறாள் சக்திதேவி. எதை நினைத்ததும் இந்த ஸம்ஸார ஸாகரத்தினின்று விடுபடுகிறோமோ அதை அபயம் என்று போற்றுவதாகக் கூறுகிறார் ஆதிசங்கரர்.
வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ க்ஷிப்ர ப்ரஸாதினீ என்றபடி, வேண்டியவற்றை வேண்டியபடி அளிக்கவும், குறிப்பிட்ட காலத்தில் அருளவும் ஆற்றல் பெற்றவள் தேவி ஒருவளே. ஆக, புவனம் காக்கும் அந்த அன்னையை வழிபடுபவர்கள் சொற்செல்வம், கவித்துவம், ஸர்வ வசியம், ராஜ்ய லாபம், சூரியனைப் போன்ற காந்தி பெற்றவர்களாகவும் விளங்குவர்.
உலகில் உள்ள அனைத்து பெண் வடிவங்களாகவும் இவள் போற்றப்படுகிறாள். எனவேதான், நமது மதத்தில் பெண்ளை சுவாசினியாகவும், கன்னிகையாகவும் போற்றுவது தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமா? சப்தாத்மிகா என்றும் அதாவது, நாம் சொல்லும் அனைத்து சொற்களும் அவளே என்கின்றன சாக்த தந்திரங்கள்.
எல்லாம் வல்ல அன்னையே ஒளி, புகழ், அழகு, ஸம்பத்து, இரவு, ஸந்த்யை, செயல், ஆசை, இருள், பசி, புத்தி, நுண்ணறிவு, ஸ்துதி, சொல், நிச்சயம், செய்யும் அறிவு, பணிவு, சோபை, சக்தி ஆகியவையாகவும், அவைபோன்ற மற்ற சக்திகளாகவும் திகழ்கிறாள் எனப் போற்றுவர். நெருப்பின் வெம்மை போன்று உலகின் அனைத்துப் பொருட்களிலும் விரவியிருப்பவள் சக்திதேவி. இதை உணர்ந்தோமானால், இன்றைக்கு உலகில் உள்ள எவ்வித பேதங்களும் இருக்காது. அனைத்திலும் அந்த சக்தியை உணர்ந்ததால்தான், சக்தி உபாஸகரான மகாகவி எங்கும் நீ நிறைந்தாய் என்று பாடியுள்ளார். நாமும் எல்லாம்வல்ல புவனேஸ்வரிதேவியின் அருளால் உலகங்கள் அனைத்திலும் அமைதி நிலவிட வேண்டுவோமாக.
ஸ்ரீபுவனேஸ்வரி காயத்ரி:
ஓம் நாராயண்யை வித்மஹே புவனேச்வர்யை தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்
மூல மந்திரம்:
ஓம் புவனேஸ்வர்யை நம: |
|
|