|
ஆதி சக்தியான காளியே ஸம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். சிவப்பரம்பொரும் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர்.
அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமானார் ஆட்கொண்ட பிறகு, மலைகளில் உறைந்து சிவார்ச்சனை விதிகளையும், தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். அவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட, எல்லாம்வல்ல பராசக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி அனைத்து பைரவ சக்திகளும் உண்டாயினர்ரந்த சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள்.
மும்மூர்த்திளை சிருஷ்டி செய்வதாலும், முன்னரே இருப்பதாலும், மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குவதாலும், உலகம் அழிந்த பின்னும் முன்போலவே உலகை பூர்த்தி செய்வதாலும், சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குவதாலும், ஸ்தூல சூட்சும, காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை த்ரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர். கூப்பிட்டவுடன் வந்து நம்மை காப்பவளே பைரவி. உலகில் ஏற்படும் கோர சம்பவங்களை நொடிப்பொழுதில் போக்கி அமைதி நிலை நிறுத்தக்கூடியவள் பைரவி.
பைரவி சக்தியின் போதங்கள் சாக்த தந்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவை: ஸம்பத்ப்ரதா பைரவி, சைதன்ய பைரவி, காமேச்வர பைரவி, அகோர பைரவி, மஹா பைரவி, மஹா பைரவி, லளிதா பைரவி, காமேச்வரீ பைரவி, ரக்தநேத்ர பைரவி, ஷட்கூடா பைரவி, நித்யா பைரவி, ம்ருதஸஞ்ஜீவினி பைரவி, ம்ருத்யுஞ்ஜயா பைரவி, வஜ்ரப்ரஸ்தாரிணீ பைரவி, புவனேச்வரீ பைரவி, கமலேச்வரீ பைரவி, சித்த கௌலேச பைரவி, டாமர பைரவி, காமினீ பைரவி.
இவ்வாறு திகழும் மாதா பைரவி தேவியின் புண்ணிய உருவங்களை நினைத்து தினமும் வழிபடுபவர்களுக்கு எந்த நேரத்திலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பயம் ஏற்படாது என்பது நிச்சயம்.
ஸ்ரீபைரவி காயத்ரி:
ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி தன்னோ தேவி பிரசோதயாத்
மூல மந்திரம்:
ஓம் பைரவ்யை நம: |
|
|