|
பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க மஹரிஷியின் பிரார்த்தனைக்கு ஏற்ப ஆதிசக்தியின் அம்சமானது மாதங்கியாக தோன்றியது. இந்த சக்தியை மந்த்ரிணீ எனப் போற்றுவர். தேவர்கள் இந்த தேவியை ஸங்கீத யோகினீ, ச்யாமா, ச்யாமளா, மந்த்ரிநாயிகா, மந்த்ரிணீ, ஸசிவேசானீ, ப்ரதானேசீ, சுகப்ரியா, வீணாவதீ, வைணிகீ, முத்ரிணீ, ப்ரியக ப்ரியா, நீபப்ரியா, கதம்பேசீ, கதம்பவன வாசினீ, ஸதாமதா என்று துதித்தனர். வீணை, குழல், மிருதங்கம் ஆகியவை தரித்த சங்கீத யோகினிகள் ஆகிய சக்திகள் எப்போதும் இந்த தேவியின் பக்கம் இருப்பர். இந்த சக்தியின் நாமாக்களை அனுதினமும் வழிபடுபவர்களுக்கு மூவுலகங்களும் வசமாகும்.
ராஜாங்க காரியங்களில் வெற்றி, ஆட்சி செய்பவர்களுக்கு வெற்றி ஆகிய அனைத்தையும் அளிப்பவள் ராஜமாதங்கீ. இந்த தேவியை உபாசிப்பவர்களுக்கு ஸர்வ ஸித்திகøயும் அளிப்பாள். குறிப்பாக வாக் ஸித்தி ஏற்படும். சங்கீதக் கலையில் நல்ல தேர்ச்சி உண்டாகும். சத்ரு ஜயம் ஏற்படும். சாஸ்திர ஞானத்திலும், கவிதை புனைவதிலும் சிறந்தவராக விளங்குவர், குபேர சம்பத்து உண்டாகும். இந்த மாதங்கீ தேவியின் பாதாரவிந்தத்தை சரணடையும் பக்தன், பல ஸித்திகளையும் அவற்றின் மூலம் அடையமுடியாத முக்தியையும் பெறுகிறான். அனைவரும் அவருக்கு வசமாவர். விரும்பியது அனைத்தும் கிடைக்கும். பாபங்கள் நசியும். பிள்ளை பாக்கியம் முதலாக சகல சவுபாக்கியங்களுக்கும் குறை இருக்காது.
இந்த தேவியின் பக்தர்களின் வீட்டில் லட்சுமி சஞ்சலம் இன்றி வாசம் செய்வாள். அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் உண்டாகும். பிணிகளை விரட்டவும், நெருப்பு மற்றும் திருடர் பயங்களில் இருந்து விடுபடவும், கிரக தோஷங்களை போக்குவதிலும் இந்த தேவியின் மந்திரம் துணை செய்யும். மகாகவி காளிதாஸர், இந்த சக்தியின் அருளினாலேயே மகா கவிகளுள் தலைமையானவராக இருந்தார். அவளே அனைத்துமாய் விளங்குகிறாள் என ச்யாமளா தண்டகத்தில் மிகச் சிறப்பாக கூறியுள்ளார் அவர். இந்த ராஜமாதங்கீ தேவியே மதுரையில் மீனாட்சியாகவும், திருவெண்காட்டில் லகுச்யாமா என்று போற்றப்படும் ப்ரஹ்ம வித்யாம்பிகையாகவும் விளங்கி அருள்பாலித்து வருகிறாள். நாம் நம்மை அறிந்து, பிறவி எடுத்த பயனைச் சிறப்புறச் செய்து எல்லாம் வல்ல பராசக்தியை அடைவோமாக.
ஸ்ரீராஜமாதங்கீ காயத்ரி:
ஓம் சுகப்ரியாயை வித்மஹே காமேச்வர்யை ச தீமஹி தன்னோ ச்யாமா ப்ரசோதயாத்
மூல மந்திரம்:
ஓம் ராஜமாதங்க்யை நம: |
|
|