அபிராமி பட்டர் அபிராமி அம்மைப் பதிகம் என்று 22 பாக்கள் பாடியுள்ளார். உருக்கமான பாடல்கள். கடைசி இரண்டு பாக்கள் நூல் பயன்போல் மெய்சிலிர்க்கும்.
மிகையுந் துரத்த வெம்பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த மிடியுந் துரத்த நரை திரையும் துரத்த மிகு வேதனைகளுந் துரத்த பகையுந் துரத்த வஞ்சனையுந் துரத்த பசி யென்பதுந் துரத்த பாவந் துரத்த பதிமோகந் துரத்த பல காரியமுந் துரத்த நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த நாளுந் துரத்த வெகுவாய் நாவறண்டோடி கால் தளர்ந்திடும் என்னை நமனுந் துரத்துவானோ? அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!
சகல செல்வங்களுந் தரும் இமய கிரிராச தனயை மாதேவி நின்னைச் சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய் சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி! திரி சூலி! மங்கள விசாலி! மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி! மகிழ் வாமி! அபிராமி! உமையே!
- அபிராமி பட்டர்
|