முதல் பாவம்
1 ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : காந்தாரப்பஞ்சமம் (3--22) ராகம் : கேதாரகௌளை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி
துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே
மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே
நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே
கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே
வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே
புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே
நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே
திருச்சிற்றம்பலம்
இரண்டாம் பாவம்
2 பொருளாதாரநிலை சீர்பெறுதவற்கும், வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : காந்தாரப்பஞ்சமம் (3--4) ராகம் : கேதாரகௌளை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவாவடுதுறை
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வாழ்வினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;
தாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
நனவினும் கனவினும் நம்பா, உன்னை
மனவினும் வழிபடல் மறவேன், அம்மான்
புனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடிஅலால், அரற்றாது என் நா;
கைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
கையது வீழினும் கழிவு உறினும்
செய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மைஅணி மிடறு உடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வெம்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்
எந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்தவெண் பொடிஅணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்
சீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்,
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட, வரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடிலால் உரையாது, என் நா;
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன்அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது
வோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேல்படை எம் இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன
விலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர் வியன் உலகம் நிலையாக முன்ஏறுவர்; நிலைமிசை நிலைஇலரே
திருச்சிற்றம்பலம்
3 உணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : கொல்லி (7-34) ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருப்புகலூர்
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே;
எந்தை புகலூர் பாடுமின்; புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்,
ஏத்தலாம்இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
மிடுக்கு இலாதானை வீமனே,
விறல் விசயனே, வில்லுக்கு இவன் என்று
கொடுக்கிலாதானைப் பாரியே
என்று கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக்கொள் மேனி, எம் புண்ணியன்,
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
காணியேல் பெரிது உடையனே,
கற்று நல்லனே, சுற்றம் நல்கிளை
பேணியே, விருந்து ஓம்புமே
என்று பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டு உழப்புள் சிலம்பும்,
தண்புகலூர் பாடுமின், புலவீர்காள்,
ஆணியாய் அமருலகம் ஆள்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே
நரைகள் போந்து மெய் தளர்ந்து,
மூத்து, உடல்நடுங்கி நிற்கும் இக்கிழவனை
வரைகள் போல், திரள் தோளனே
என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரைவேள் ஏறு உடைப் புண்ணியன்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனைப்
பாவியை, வழக்கு இல்லøயைப்
பஞ்ச துட்டனை, சாதுவே
என்று பாடினும் கொடுப்பார் இலை;
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன்,
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
நெஞ்சில் நோய் அறுத்து,
உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
நலம் இலாதானை, நல்லனே என்று,
நரைத்த மாந்தரை, இளையனே
குலம் இலாதானைக் குலவனே என்று
கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அலமராது அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
நோயனைத், தடந்தோளனே என்று,
நொய்ய மாந்தரை, விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று
சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே,
எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்;
ஆயம் இன்றிப் போய், அண்டம்
ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ளலே, எங்கள் மைந்தனே
என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள் எலாம் சென்று சேரும் பூம்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அல்லல் பட்டு அழுந்தாது போவதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
கற்றிலாதானைக், கற்று நல்லனே
காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை, முற்றனே என்று
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே
தையலாருக்கு ஓர் காமனே என்றும்,
சால நல் வழக்குடையனே
கைஉலாவிய வேலனே என்று,
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதியாய்
புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே
செறுவினில் செழும் கமலம் ஓங்கு
தென்புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன், வனப்பகை
அப்பன், சடையன் தன்
சிறுவன், வன் தொண்டன், ஊரன், பாடிய
பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு,
யாதும் ஐயுறவு இல்லையே
திருச்சிற்றம்பலம்
4 கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய இரு பதிகங்கள்
இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு :
பண் : தக்கேசி (7--61) ராகம் : காம்போதி
பாடியவர்: சுந்தரர் தலம்: திருக்கச்சி ஏகம்பரம்
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை,
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச்
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈர்உரி போர்த்து உகந்தானைக்
காமனைக் கனலா விழித்திõனை
வரிகொள் வெள்வளையான் உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
குண்டலம் திகழ் காது உடையானை
கூற்று உதைத்த கொடுந் தொழிலானை
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை
வாள்அரா மதிசேர் சடையானை
கெண்டை அம் தடங்கண் உடை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை,
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள் செய்ய வல்லானை,
அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
திங்கள் தங்கிய சடை உடையானை,
தேவ தேவனை, செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை,
சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை,
வேதம்தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்தன்னை,
நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண்இல் தொல் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள்
சிந்தையில் திகழும் சிவன் தன்னை
பந்தித்த வினைப் பற்று அறுப்பானை
பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தம் இல் புகழாள் உமைநங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
வரங்கள் பெற்று உழல், வாள் அரக்கர் தம்
வாலிய புரம் மூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி
நிரந்தரம் செய்த நிட்கண்டனைப்
பரந்த தொல் புகழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை
பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றது என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானைக்
குளிர் பொழில், திரு நாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர்தாமே
திருச்சிற்றம்பலம்
5 வலக்கண் கோளாறு நீங்குவதற்கு :
பண் : செந்துருத்தி (7--95) ராகம் : மத்தியமாவதி
பாடியவர்: சுந்தரர் தலம்: திருவாரூர்
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்,
பிறரை வேண்டாதே
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று,
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர்? திருவாரூரீர்
வாழ்ந்து போதீரே
விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்;
விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை;
கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண்
கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால்,
வாழ்ந்து போதீரே
அன்றில் முட்டாது அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே,
கன்று முட்டி உண்ணச் சுரந்த
காலி அவைபோல,
என்றும் முட்டாப் பாடும் அடியார்
தம்கண் காணாது,
குன்றில் முட்டிக் குழியல் விழுந்தால்,
வாழ்ந்து போதீரே
துருத்தி உறைவீர்; பழனம் பதியாச்
சோற்றுத்துறை ஆள்வீர்,
இருக்கை திருஆரூரே உடையீர்;
மனமேஎன வேண்டா;
அருத்தி உடைய அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து, மறுமை பணித்தால்,
வாழ்ந்து போதீரே
செந்தண் பவளம் திகழும் சோலை
இதுவோ திருஆரூர்?
எந்தம் அடிகேள், இதுவே ஆமாறு,
உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார்
தம் கண் காணாது
வந்து, எம்பெருமான் முறையோ?
என்றால், வாழ்ந்து போதீரே
தினைத்தாள் அன்ன செங்கால்
நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல்
மாலைப் புரிபுன் சடையீரே,
தனத்தால் இன்றித் தாம்தாம்
மெலிந்து, தம்கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார்
இருந்தால், வாழ்ந்த போதீரே
ஆயம் பேடை அடையும் சோலை
ஆரூர் அகத்தீரே,
ஏய எம்பெருமான், இதுவே ஆமாறு,
உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டிப் பிறவி காட்டி,
மறவா மனம்காட்டிக்
காய் காட்டிக் கண்ணீர் கொண்டால்
வாழ்ந்து போதீரே
கழியாய், கடலாய், கலனாய்,
நிலனாய், கலந்து சொல்ஆகி,
இழியாக் குலத்தில் பிறந்தோம்;
உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர்,
அடிகேள் பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து
இருந்தால் வாழ்ந்து போதீரே
பேயோடேனும் பிறவிஒன்று இன்னாது
என்பர் பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ,
கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும்,
உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திருஆரூரீர்,
வாழ்ந்து போதீரே
செருந்தி செம்பொன் மலரும் சோலை
இதுவோ, திருஆரூர்?
பொருந்தித் திருமூ லட்டா னம்மே
இடமாகக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை
இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று
உரைத்தால், வாழ்ந்து போதீரே
காரூர் கண்டத்து எண்தோள் முக்கண்
கலைகள் பலஆகி,
ஆரூர்த் திருமூ லட்டா னத்தே
அடிப்பேர் ஆரூரன்;
பாரூர் அறிய, என்கண் கொண்டீர்,
நீரே பழிப்பட்டீர்,
வாரூர் முலையாள் பாகம் கொண்டீர்,
வாழ்ந்து போதீரே
திருச்சிற்றம்பலம்
6 சொல் சோர்வு நீங்குவதற்கும், திக்குவாய் மாறிச் சீர்பெறுவதற்கும், சிறந்த பேச்சாளர் ஆவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
ராகம்: மோகனம் பாடியவர்: மாணிக்கவாசகர்
திருவாசகம் திருச்சாழல் தலம்: தில்லை சிதம்பரம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்குஅரவம்,
பேசுவதும் திருவாயால் மறைபோலும்?காணேடி!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை?
ஈசன் அவன், எவ்வுயிர்க்கும் இயல்புஆனான்; சாழலோ
என்அப்பன், எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது, என்னேடீ?
மன்னுகலை, துன்னுபொருள், மறைநான்கே, வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினான்; காண்; சாழலோ
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை;
தாயும்இலி, தந்தை இலி; தான்தனியன்; காணேடி!
தாயும்இலி, தந்தை இலி தான்தனியன் ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும், கல்பொடி, காண், சாழலோ
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான்; காணேடி!
நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால்
சயம்அன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய்? சாழலோ
தக்கனையும் எச்சனையும் தலைஅறுத்த, தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி, அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண், சாழலோ
அலரவனும் மால்அவனும் அறியாமே, அழல்உருஆய்,
நிலமமுதல், கீழ்அண்டம்உற நின்றது தான், என்னேடீ?
நிலம்முதல் கீழ்அண்டம் உற நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும் அது, என்னேடீ?
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல், தரணிஎல்லசாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து, பெருங்கேடாம்; சாழலோ
கோலாலம் ஆகிக் குரைகடல்வாய்; அன்று எழுந்த
ஆலாலம் உண்டான்; அவன் சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல், அன்றுஅயன் மால் உள்ளிட்ட
மேல்ஆய தேவர்எல்லாம் வீடுவர்காண்; சாழலோ
தென்பால் உகந்து ஆடும் தில்லைச்சிற் றம்பலவன்,
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ!
பொண்பால் உகந்திலனேல் பேதாய், இருநிலத்தோர்
விண்பால் யோகுஎய்தி வீடுவர்காண்; சாழலோ
தான்அந்தம் இல்லான் தனைஅடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; காணேடீ!
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்,
வான்உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள்; காண்; சாழலோ
நங்காய், இது என்னதவம்? நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான்; காணேடீ?
கங்காளம் ஆமாகேள் கால அந்தரத்து இருவர்,
தம்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ
கான் ஆர் புலித்தோல் உடை; தலை ஊண்; காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆரேடீ!
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்,
வான் நாடார் கோவும், வழி அடியார் சாழலோ
மலை அரையன் பொற்பாவை, வாள்நுதலாள், பெண்திருவை,
உலகுஅறியத் தீ வேட்டான் என்னும், அது என்னேடீ!
உலகுஅறியத் தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்
கலைநவின்ற பொருள்கள் எல்லாம், கலங்கிடும், காண், சாழலோ
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ!
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணிஎல்லாம்
ஊன்புக்க வேல் காளிக்கு ஊட்டுஆம்; காண்; சாழலோ
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடீ!
தடமதில்கள் அவைமூன்றும், தழல்எரித்த அந்நாளில்,
இடபம் அதுவாய்த் தாங்கினான், திருமால்காண், சாழலோ
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம்உரைத்தான்; காணேடீ!
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண், புரம்மூன்றும் கூட்டோடே; சாழலோ
அம்பலத்தே கூத்துஆடி, அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவன் என்று, நண்ணும் அது என்னேடீ!
நம்பனையும் ஆமாகேள்; நான்மறைகள் தாம் அறியா
என்பெருமான், ஈசாஎன்று ஏத்தின காண்; சாழலோ
சலம் உடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று அருளியவாறு என்னேடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம்இடந்து அரன் அடிக்கீழ்
அலர்ஆக இட, ஆழி அருளினன்; காண்; சாழலோ
அம்பரம்ஆம், புள்ளித்தோல்; ஆலாலம் ஆர்அமுதம்;
எம்பெருமான் உண்டசதுர் எனக்கு அறிய இயம்பேடீ!
எம்பெருமான் ஏதுஉடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்
தம்பெருமை தான் அறியாத் தன்மையன்; காண்; சாழலோ
அரும்தவர்க்கு ஆலின் கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்து, அவர்க்கு அருளும் அது எனக்கு அறிய இயம்பேடீ!
அரும்தவர்க்கு, அறம்முதல் நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல்
திருந்த, அவருக்கு உலகுஇயற்கை தெரியா; காண்; சாழலோ
திருச்சிற்றம்பலம்
7 குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்வதற்கும், குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் அமைதியுடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : கொல்லி (3--24) ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர்குறைவு இலை;
கண்ணில், நல்லஃதுஉறும்; கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
போதையார் பொன்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உறத் தான் எனை ஆண்டவன்
காதையார் குழையினன்; கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே
தொண்டு அணை செய் தொழில், துயர் அறுத்து உய்யலாம்;
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண்துணை நெற்றியான்; கழுமல வளநகர்ப்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெய, பெருந்தகை இருந்ததே
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழிநெஞ்சமே
விடைஅமர் கொடியினான்: விண்ணவர் தொழுதுஎழும்
கடைஉயர்மாடம் ஆர் கழுமல வளநகர்ப்
பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே; மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள்உடைப் பெருந்தகை இருந்ததே
குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே
நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
களை வளர் பொழில்அணி கழுமல வள நகர்ப்
பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே
அரக்கனார், அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்; நீடுயாழ் பாடவே
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வளநகர்ப்
பெருக்கும் நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடிகமழ் பொழில் அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
தார்உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர்உறு சொல் களைந்து அடிஇணை அடைந்து உயம்மின்
கார்உறு பொழில் வளர் கழுமல வளநகர்ப்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே
கருந்தடம் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்த எம்பிரான்தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன் செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய், விண்ணுலகு ஆள்வரே
திருச்சிற்றம்பலம்
8 கல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : இந்தளம் (2--31) ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர்: திருஞான சம்பந்தர் தலம்: தலைஞாயிறு
சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும்
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறிய லூரே
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆக
போதினோடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே
மடம்படு மலைக்கு இறைவன் மங்கைஒரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே
ஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய
நிருத்தன் அவன் நீதிஅவன் நித்தன் நெறிஆய
விருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதம்
கருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே
விண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும்
கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே
ஆதிஅடியைப் பணிய அப்போடு மலர்ச்சேர்
சோதிஒளி நல்புகை வளர்க்கு வடுபுக்குத்
தீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே
பரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்துஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தர நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே
அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்று என இருப்பது கருப்பறிய லூரே
நலம்தரு புனல்கலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்களைப்
பலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று
வலம் தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே
திருச்சிற்றம்பலம்
மூன்றாவது பாவம்
9 எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெறுவதற்கும், விஷசுரம், விஷக்கடி முதலியன நீங்குவதற்கும் தொண்டையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி குரல் வளம் பெறுவதற்கும், செய்வினை, பில்லி, சூனியம் பாதிக்காமல் இருக்கும் பொருட்டும், துணிவுடன் செயலாற்றுவதற்கும், இளைய சகோதரன் நலம் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : வியாழக்குறிஞ்சி (1--116) ராகம் : சௌராஷ்ட்டிரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருச்செங்கோடு
அவ்வினைக்கு இவ்வினைதுஆம் என்று
சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான்
கழல் போற்றுதும்; நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
காவினை இட்டும் குளம்பல
தொட்டும், கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து, மலர்அடி
போற்றுதும், நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்
மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு
எமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும்
மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
விண்உலகு ஆள்கின்ற
விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும்
தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர்!
உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
மற்று இணை இல்லா மலை திரண்டு
அன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது
ஒழிவதும் தன்மை கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து,
உம்திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
மறக்கும் மனத்தினை மாற்றி, எம்
ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான், திருந்து
அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர்கொடு வந்து, உமை
ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை
கடிந்து, உம்கழல் அடிக்கே,
கருகி மலர்கொடு வந்து உமை
ஏத்ததும்; நாம் அடியோம்;
செருவில் அரக்கனைச் சீரில்
அடர்த்து அருள்செய்தவரே,
திருஇலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
நாற்றமலர் மிசை நான்முகன்
நாரணன் வாது செய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும்
தொடர்வு அரியீர்;
தோற்றினும் தோற்றும்; தொழுது
வணங்குதும்; நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
சாக்கியப் பட்டும் சமண்உரு
ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப்
போகமும் பற்றும் விட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்
அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்
பிறந்த பிறவியில் பேணி எம்
செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில்
இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடும் கூடுவரே
திருச்சிற்றம்பலம்
நான்காம் பாவம்
10 தாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கும், பிரசவம் சுகமாக அமைவதற்கும், உறவினர், நண்பர்களின் தொடர்பு நன்கு அமையப் பெறுதற்கும், வீடு, மனை முதலிய செம்மையுறக் கட்டி முடிப்பதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : குறிஞ்சி (1-98) ராகம் : அரிகாம்போதி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருச்சி
நன்று உடையானை, தீயது இலானை, நரைவெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர்உரி போத்த விகிர்தா, நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடைஊரும்
எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே
துறை மல்கு சாரல், சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள்ளம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரை ஆகச் செற்றன ரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும், வெள்ளை நிறம் ஆமே!
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஓர் பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர் இவர் செய்கை அறிவாரே
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே
மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலன் ஆகப் பலிதிரிந்து உண்பர்; பழி ஓரார்;
சொல வல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலஅல போலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே
அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டலரேனும், கல் சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள் காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானைத், திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்,
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்,
வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே
திருச்சிற்றம்பலம்
ஐந்தாம் பாவம்
11 மக்கட் செல்வம் வாய்க்கப் பெறுவதற்கும், பட்டிமன்றம், கருத்தரங்கம் முதலியவற்றில் வாதத் திறமை பெறுவதற்கும், எழுத்தாற்றல் பெறுவதற்கும், தத்துவ ஞானத் தெளிவினைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : சீகாமரம் (2--48) ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவெண்காடு
கண் காட்டும் நுதலானும், கனல்
காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும்,
பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர்
காட்டும் புயலானும்
வெண் காட்டில் உறைவானும், விடை
காட்டும் கொடியானே
பேய் அடையா, பிரிவு எய்தும்;
பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற
வேண்டா ஒன்றும்;
வேயனதோள் உமை பங்கன் வெண்காட்டு
முக்குள நீர்,
தோய்வினையார் அவர் தம்மைத்
தோயாவாம், தீவினையே
மண்ணொடு நீர், அனல், காலோடு
ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இக
பரமும், எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையோடு
சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட, வெண்காடு
இடமா விரும்பினனே
விடம் உண்டா மிடற்று அண்ணல்
வெண்காட்டின் தண்புறவில்
மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக்
குருகு என்று
தடம் மண்டு துறைக்கெண்டை,
தாமரையின் பூமறையக்
கடல் விண்ட கதிர் முத்தம் நகை
காட்டும் காட்சியதே
வேலை மலி தண்கானல் வெண்
காட்டான் திருவடிக்கீழ்
மாலை வலி வண்சாந்தால் வழிபடு
நல் மறையவன்தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட
பினை, நமன் தூதர்,
ஆலமிட்டற்றான் அடியார் என்று,
அடர அஞ்சுவரே
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான்,
சடையின் உடன்,
ஒண்மதிய நுதல் உமை ஓர்
கூறுஉகந்தான்; உறைகோயில்
பண்மொழியால் அவன் நாமம் பல
ஓதப், பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல்
வீற்றிருக்கும் வெண்காடே
சக்கரம் மாற்கு ஈந்தானும்,
சலந்தரனைப் பிளந்தானும்,
அக்கு அரைமேல் அசைத்தானும்
அடைந்து அயிரா வதம்பணிய
மிக்க அதனுக்கு அருள் சுரக்கும்
வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும்,
முக்கண்உடை இறையவனே
பண்மொய்த்த இன்மொழியாள்,
பயம்எய்த மலைஎடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று
அருள்செய்தான் உறைகோயில்,
கண்மொய்த்த கரு மஞ்ஞை
நடம்ஆட, கடல் முழுங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு
இசைமுரலும் வெண்காடே
கள்ஆர்செங் கமலத்தான்
கடல்கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து
ஆழ்ந்தும், உணர்வு அரியான்;
வெள்ஆனை தவம் செய்யும் மேதகு வெண்
காட்டான் என்று
உள்ஆடி உருகாதார்
உணர்வு உடைமை, உணரோமே
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
மொழிபொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிரிமின்;
அறிவுடையீர், இதுகேள்மின்;
வேதியர்கள் விரும்பியசீர்
வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர்
என்று உணருமினே
தண் பொழில் சூழ் சண்பையர் கோன்,
தமிழ்ஞான சம்பந்தன்,
விண் பொழி வெள் பிறைச் சென்னி
விகிர்தன்உறை வெண்காட்டைப்,
பலர் பொலி செந் தமிழ் மாலை
பாடியபத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய்
வான்பொலியப் புகுவாரே
திருச்சிற்றம்பலம்
ஆறாம் பாவம்
12 வெப்பம் மிகுதியால் ஏற்படும் சுரநோய், பித்தசுரம் முதலிய நோய்கள் நீங்குவதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : காந்தாரம் (2--66) ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம்அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப் படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தும் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண் பொடிநீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும்; இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று, எம் ஆலவாயான் திருநீறே
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப் பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தம் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித், தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயினதீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
திருச்சிற்றம்பலம்
13 பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குவதற்கும், சிறை வாசத்தைத் தடுப்பதற்கும், சிறையிலிருந்து விரைவில் விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : கௌசிகம் (3--51) ராகம் : பயிரவி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை
செய்யனே, திரு ஆலவாய் மேவிய
ஐயனே, அஞ்சல் என்று அருள்செய்; எனைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்,
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே
சித்தனே, திரு ஆலவாய் மேவிய
அத்தனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
பத்திமன், தென்னன், பாண்டியற்கு ஆகவே
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எக்காரம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே
சிட்டனே, திரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்தியனே, அஞ்சல் என்று அருள்செய்;
துட்டராம் அமணர் கொளுவும் சுடர்
பட்டிமன், தென்னன், பாண்டியற்கு ஆகவே
நண்ணலார் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
எண்ணிலா அமணர் கொளுவும் சுடர்
பண்இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல் என்று அருள், ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன், பாண்டியற்கு ஆகவே
செங்கண் வெள்விடையாய், திரு ஆலவாய்
அங்கணா, அஞ்சல் என்று அருள்செய்; எனை
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன், பாண்டியற்கு ஆகவே
தூர்த்தனன் வீரன் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
ஏத்திலா அமணர் கொளுவும் சுடர்,
பார்த்திவன் தென்னன், பாண்டியற்கு ஆகவே
தாவினான் அயன் தான் அறியா வகை
மேவினாய் திரு ஆலவாய், அருள்;
தூவிலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன், பாண்டியற்கு ஆகவே
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே, அஞ்சல் என்று அருள்செய்; எனை
குண்டராம் அமணர் கொளுவும் சுடர்,
பண்டிமன் தென்னன், பாண்டியற்கு ஆகவே
அப்பன், ஆலவாய் ஆதி, அருளினால்
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரை பத்தும்
செப்ப வல்லவர், தீது இலாச் செல்வரே
திருச்சிற்றம்பலம்
14 கடன் தொல்லைகள் நீங்கி, மன நிம்மதியுடன் வாழ்வதற்கும், பிறரிடமிருந்து கடன் பெறாமலே போதிய பொருளாதாரத்துடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : பழம்பஞ்சுரம் (3--108) ராகம் : சங்கராபரணம்
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே?
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாது செயத் திருவுள்ளமே?
கைதிகழ் தரு மாமணி கண்டனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திருவுள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே?
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாது செயத் திருவுள்ளமே?
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே,
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல, வாது செயத் திருவுள்ளமே?
தழல் இலங்கு திருவுருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாது செயத் திருவுள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
கோலம் மேனியது ஆகிய குன்றமே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்ற வாது செயத் திருவுள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே,
ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்
பாடல் வல்லவர், பாக்கிய வாளரே
திருச்சிற்றம்பலம்
15 இரத்த அழுத்த நோய், இனிப்பிலி நோய் (நீரிழவு) முதலிய நோய்கள் நீங்குவதற்கும், மூர்ச்சை நோயிலிருந்து எழுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இக்காலத்தில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி மீள இயலாமல் இருப்பவர்களை மீட்பதற்கும் இந்த பதிகத்தை ஓதிப் பயன் பெற்றுள்ளனர்
பண் : தக்கராகம் (1--44) ராகம் : காம்போதி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருப்பாச்சிலாச்சிரமம்
துணிவளர் திங்கள் துளங்கி விளங்க
சுடர்ச்சுடை சுற்றி முடித்து,
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ,
ஆரிடமும் பலி தேர்வர்;
அணிவளர் கோலம் எலாம் செய்து,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட
மயல் செய்வதோ, இவர்மாண்பே?
கலைபுனை மானஉரி தோல்உடை ஆடை,
கனல் சுடரால் இவர்கண்கள்,
தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர்,
தம்அடிகள் இவர் என்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர்
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ, ஏழையை வாட,
இடர்செய்வதோ, இவர் ஈடே?
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சுஇருள்;
மாலை வேண்டுவர், பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு
இடமாக நண்ணுவர், நம்மை நயந்து
மஞ்ச அடைமாளிகை, சூழ்தரு
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி
வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
கன மலர்க் கொன்றை அலங்கல்
இலங்க கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்து, அழகு
ஆய புனிதர் கொல்ஆம், இவர் என்ன,
அனம் மலி வண்பொழில் சூழ்தரு
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ மங்கையை
வாட மயல் செய்வதோ, இவர் மாண்பே?
மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து
ஆடி வளர் சடைமேல் புனல்வைத்து
மோந்தை, முழா, குழல், தாளம் ஓர்
வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி,
ஆந்தை விழிச் சிறு பூதத்தர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச்
சதுர் செய்வதோ, இவர் சார்வே?
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ,
நெற்றிக் கண்ணால் உற்றுநோக்கி
ஆறு அது சூடி, ஆடு அரவு ஆட்டி,
ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர், பூதத்தர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர், ஏழையை வாட,
இடர் செய்வதோ இவர்ஈடே?
பொங்கு இள நாகம், ஏர் ஏகவடத்தோடு
ஆமை வெண்நூல், புனைகொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய,
குழகர் கொல் ஆம், இவர் என்ன
அங்கு இள மங்கை ஓர் பங்கினர்;
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
சங்குஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச்
சதிர் செய்வதோ இவர்சார்வே?
ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து,
இராவணன் தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய், நடு ஆய
மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் தொழில்
பாச்சலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச்
சிதை செய்வதோ, இவர் சேர்வே?
மேலது நான்முகன் எய்தியது இல்லை;
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை;
என இவர் நின்றதும் அல்லால்
ஆல்அது மாமதி தோய்பொழில்
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வதோ, இவர் பண்பே?
நாணொடு கூடிய சாயினரோனும் நகுவர்,
அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள்
அவை கொள வேண்டா;
ஆணோடு பெண்வடிவு ஆயினர்,
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப்
புனை செய்வதோ, இவர் பொற்பே?
அகம்மலி அன்போடு தொண்டர் வணங்க,
ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்த, அழகு ஆய
புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகைமலி தண் பொழில் சூழ்தரு
காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவை
ஏத்த, சாரகிலா வினைதானே
திருச்சிற்றம்பலம்
16 தீராத வயிற்றுவலி நீங்குவதற்கும், குடல் தொடர்பான அனைத்துத் தொல்லைகளைப் போக்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம் மஞ்சள் காமாலை நோயைப் போக்குவதற்கும் இந்தப் பதிகத்தைப் படனம் செய்யவும்
பண் : குறிஞ்சி (4--1) ராகம் : நவரோசு
பாடியவர்: திருநாவுக்கரசர் தலம்: திருவதிகை வீரட்டானம்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்;
கொடுமை பலசெய்தன நான் அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்;
அஞ்சேலும் என்னீர்: அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்;
படுவெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்;
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
சுடுகின்றது சூலை; தவிர்த்து அருளீர்;
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்;
பெற்றம் ஏற்று உகந்தீர்; சுற்றும் வெண்தலை கொண்டு
அணிந்தீர்; அடிகேள், அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து
என்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்;
சுடுகின்றது சூலை; தவிர்த்து அருளீர்;
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ
தலை ஆயவர் தம்கடன் ஆவதுதான்?
அன்னம் நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
கரத்து ஆள்வர் காவல் இகழ்ந்தமையால்
கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்து ஆய கயம் புக நூக்கியிட, நிலைக்கொள்ளும்
வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்,
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார், புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்;
நலம்தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன்நாமம் என்நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய்;
உடலுள் உறுசூலை தவிர்த்து அருளாய்;
அலந்தேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல்உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்;
பயந்தே என்வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
வலித்தேன் மனைவாழ்க்கை, மகிழ்ந்து, அடியேன்,
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண் குழைக் காதுஉடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
பொன்போல மிளிர்வது ஓர் மேனியினிர்;
புரிபுன் சடையீர்; மெலியும் பிறையீர்;
துன்பே, கவலை, பிணி என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;
என்போலிகள் உம்மை இனித் தெளியார்,
அடியார் படுவது இதுவே ஆகில்,
அன்பே அமையும், அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
போர்த்தாய், அங்குஓர் ஆனையின் ஈர்உரிதோல்,
புறங்காடு அரங்கா, நடம்ஆட வல்லாய்;
ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக் கீழ்
அடர்த்திட்டு, அருள் செய்தஅது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என்வேதனை ஆன விலக்கியிடாய்;
ஆர்த்துஆர் புனல்சூழ் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே
திருச்சிற்றம்பலம்
17 எலும்பு முறிவு குணம் அடைவதற்கும், இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் தீர்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
பண் : சாதாரி (3--72) ராகம் : பந்துவராளி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருமாகறல்
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல் அரவம்,
மங்குலொடு நீள கொடிகள் மாடம்மலி
நீடுபொழில் மாகறல் உளான்
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர்
திங்கள் அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள்
தீவினைகள் தீரும் உடனே
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி
ஆடல் கவின் எய்தி அழகு ஆர்
மலையின் நிகர் மாடம் உயர் நீள்கொடிகள்
வீசும் மலி மாகறல் உளான்;
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன்
ஏந்தி எரி புன்சடையினுள்
அலைகொள் புனல் ஏந்து பெருமான், அடியை
ஏத்த வினை அகலும் மிகவே
காலையொடு துந்துபிகள் சங்கு, குழல்,
யாழ், முழவு காமருவு சீர்
மாலை வழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி அதன் மேல் ஓர்சுடர்
நாகம் அசையா அழகிதாப்
பாலை அன நீறுபுனை வான், அடியை
ஏத்த வினை பறையும் உடனே
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்தி எழில் மெய்யுள் உடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுனல்
ஆடி மகிழ் மாகறல் உளான்
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி
செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்தி வழி
பாடு நுகரா எழுமினே
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி
தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சுமலி பூம்பொழிலில் மயில்கள் நடம்
ஆடல் மலி மாகறல் உளான்;
வஞ்சமத யானைஉரி போர்த்து மகிழ்
வான் ஓர் மழுவாளன் வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடி
யாரை நலியா வினைகளே
மன்னும் மறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடி உடனாய்
இன்ன வகை யால்இனிது இறைஞ்சி, இமையோரில்
எழு மாகறல் உளான்
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள்
கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர் தொல் வினைகள் ஒல்க உயர்
வான்உலகம் ஏறல் எளிதே
வெய்யவினை நெறிகள் செல வந்து அணையும்
மேல் வினைகள் வீட்டல் உறுவீர்,
மைகொள் விரி கானல் மது வார்கழனி
மாகறல் உளான் எழில் அது ஆர்
கையகரி கால் வரையில் மேலது உரிதோல்
உடையமேனி அழகு ஆர்
ஐயன்அடி சேர்பவரை அஞ்சி அடையா
வினைகள் அகலும் மிகவே
தூசு துகில் நீள்கொடிகள் மேமொடு
தோய்வன பொன் மாடமிசையே
மாசுபடு செய்கை மிக மாதவர்கள்
ஓதிமலி மாகறல் உளான்
பாசுபத இச்சை வரி நச்சு அரவு
கச்சை உடை பேணி அழகுஆர்
பூசுபொடி ஈசன் என ஏத்தவினை
நிற்றல் இல, போகும் உடனே
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர்
குவளை தோன்ற மது உண்
பாய வரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன்
தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை
ஆயினவும் அகல்வது எளிதே
காலின் நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரி
ஆகி உயர் மாகறல் உளான்
நாலும் எரி தோலும் உரி மா மணிய
நாகமொடு கூடி உடனாய்
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள்
அடியாரை அடையா வினைகளே
கடைகொள் நெடு மாடம் மிக ஓங்குகமழ்
வீதி மலி காழியவர் கோன்,
அடையும் வகை யால், பரவி அரனை அடி
கூடு சம்பந்தன் உரையால்,
மடைகொள் புனலோடு வயல் கூடு பொழில்
மாகறல் உளான் அடியையே
உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள்
தொல்வினைகள் ஒல்கும் உடனே
திருச்சிற்றம்பலம்
ஏழாம் பாவம்
18 சர்ப்பதோஷத்தால் திருமணம் தள்ளிப் போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : இந்தளம் (2--18) ராகம் : நாதநாமக்கிரியை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருமருகல்
சடையாய் எனுமால்; சரண்நீ எனுமால்;
விடையாய் எனுமால்; வெருவா விழுமால்;
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ, இவன் உள் மெலிவே
சிந்தாய் எனுமால்; சிவனே எனுமால்;
முந்தாய் எனுமால்; முதல்வா எனுமால்;
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே
அறையார் கழலும் அழல்வாய் அரவும்
பிறையார் சடையும் உடையாய்; பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளை கொண்டு எழில் வல்வினையே
ஒலி நீர் சடையில் கரந்தாய், உலகம்
பலி நீர் திரிவாய், பழி இல் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய், இவளை
மெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம் உடையாய் மருகல்
கணி நீலவண்டார் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையார் மருகல்
புலரும் தனையும் துயிலாள் புடைபோந்து
அலரும் படுமோ அடியாள் இவளே
வழுவாள் பெருமான் கழல்வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே
எரிஆர் சடையும் மடியும் இருவர்
தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே
மரியார் பிரியா மருகல் பெருமான்
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே
அறிவுஇல் சமணும் அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறிஏந்து கையாய்; மருகல் பெருமான்
நெறியார் குழலி நிறை நீக்கினையே
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே
திருச்சிற்றம்பலம்
19 தடைபடும் திருமணம் சடுதியில் கூடிவருவதற்கு ஓதவேண்டிய பதிகம்
பண் : சாதாரி (3--78) ராகம் : பந்துவராளி
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருவேதிக்குடி
நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு
என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல்
ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகம்மலி வாழை விரை
நாறஇணை வாளை மடுவில்
வேறுபிரியாது விளையாட வளம்
ஆறும் வயல் வேதிகுடியே
சொற்பிரிவு இலாதமறை பாடி நடம்
ஆடுவர் தொல் ஆனை உரிவை
மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்
நாளும்வளர் வானவர் தொழத்
துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர்
இயன்ற தொகுசீர்
வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர்
என்பர்திரு வேதிகுடியே
போழும்மதி பூண்அரவு கொன்றை மலர்
துன்றுசடை வென்றி புகமேல்
வாழும்நதி தாழும் அருளாளர் இருள்
ஆர்மிடறர் மாதர் இமையோர்
சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர்
வரிதோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி
என்பர்திரு வேதிகுடியே
காடர்கரி காலர்கனல் கையர் அனல்
மெய்யர்உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர்சரி கோவணவர்
ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள்
மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை
மேவுதிரு வேதிகுடியே
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற
முனிந்து தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்
இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல்
பற்றி வரி வண்டு இசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர்
போக நல்கு வேதிகுடியே
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து
கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மடமங்கை யொடு
அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ்
மிக்க இழிவு இலாதவகையார்
வெய்ய மொழி தண்புலவருக்கு உரை
செயாத அவர் வேதிகுடியே
உன்னி இரு போதும் அடி பேணும் அடியார்
தம் இடர் ஒல்க அருளி
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல்
இருந்த துணை வன்தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம்
விரும்பி அரு மங்கலம் மிக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர்
இயற்று பதி வேதிகுடியே
உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை
பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது
நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும்
ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்இசை
உலாவுதிரு வேதிகுடியே
பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி
அங்கையனும் நேட எரிஆய்
தேவும்இவர் அல்லர் இனி யாவர்என
நின்று திகழ் கின்றவர்இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது
அறாத கொடையாளர் பயில்வாம்
மேவுஅரிய செல்வம்நெடு மாடம்வளர்
வீதி நிகழ் வேதிகுடியே
வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து
அறிவிலாதவர் மொழி
தஞ்சம்என என்றும் உணராத அடியார்
கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள்
தெரிந்துஎழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி
நிகழ்கின்ற திருவேதிகுடியே
கந்தமல்லி தண்பொழில் நல்மாடம் மிடை
காழி வளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலிசெந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்
என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளும் அதுவே
சரதம் ஆணை நமதே
வினைநீங்கு பதிகம்
சேலம் கி. சுப்பராயப்பிள்ளை என்ற ஒரு சிவபக்தர் தனது 84வது வயதில் கீழே விழுந்ததில், அவரது முழங்கால் எலும்பும், இடுப்பெலும்பும் முறிந்த நிலையில் பெரிய மருத்துவர்கள் எல்லாம், குணப்படுத்த இயலாது என்று கைவிட்டு விட்டனர். அவர் திருமுறையில் நூல் சாத்திப் பார்த்ததில், வினைநீங்கு பதிகம் ஓதச் சொல்லி வழிகாட்டல் கிடைத்தது. அதன்படியே அவரும் கீழ்க்கண்ட வினைநீங்கு பதிகத்தை ஓதி வழிபட்டதில், ஓராண்டுக்குள்ளேயே எலும்புகள் கூடி மீண்டும் நடக்கத் தொடங்கினாராம். இதுபற்றிய விவரம், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்க 1960ம் ஆண்டு வெளியீடு ஒன்றில் காணப்படுகிறது.
1. விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணீ செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும்உடனே.
2. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல் நுனைய சூலம்வலன் ஏந்திஎரி புன்சடையினுள்
அலைகொள்புனல் ஏந்துபெரு மானடியை ஏத்தவினை அகலும்மிகவே.
3. காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை ஏத்தவினை மறையும்உடனே.
4. இங்குகதிர் முத்தினொடு பெண்மணிகள் உந்திஎழின் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுனல் ஆடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராஎழுமினே.
5. துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடமலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதன் அடி யாரைநலி யாவினைகளே.
6. மன்னுமறை யோர்களோடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சிஇமை யோரில்எழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கஉயர் வானுலகம் ஏறல்எளிதே.
7. வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டல்உறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனிஅழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.
8. தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுண்ட பேணியழகார்
பூசுபொடி ஈசனென ஏத்தவினை நிற்றலில் போகும்உடனே.
9. தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவிரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிரல் ஊன்றியஇ ராவணன் தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுகழ் ஏத்தும்அடி யார்களைவினை ஆயினவும் அகல்வதெளிதே.
10. காலினல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலும்மல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலும்எரி தோலும்உரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை அடிகள்அடி யாரைஅடை யாவினைகளே.
11. கடை கொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்தும்உணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்கும்உடனே.
திருச்சிற்றம்பலம்