பிறமொழி பேசமுடியவில்லையே என்ற கவலை படித்தவர்கள், பாமரர்கள் எல்லார் மத்தியிலும் இருக்கிறது. எந்த நாட்டை எடுத்தாலும் நாடு முழுவதும் ஒரே மொழியைத்தான் பேசுவார்கள். இந்திய துணைக்கண்டம் தான் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு மொழிகள், பல்வேறு நடை, உடை பாவனைகள் 500 கி.மீ.,க்கு ஒருமுறை மாறும் தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசம். எனவே ஒரு பொதுமொழி நமக்கு அவசியமானதாக இருக்கிறது. நல்லதோ, கெட்டதோ...இருபத்தாறே எழுத்துக்களில் உலகை ஆட்டுவிக்கும் ஆங்கிலத்தை நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எங்கு பார்த்தாலும் ஆங்கிலப்பள்ளிகள் உருவெடுத்திருக்கின்றனவே தவிர, தமிழகத்தில் குறிப்பிட்ட சில நகரங்களில், குறிப்பிட்ட சில பள்ளிகளில் படிக்கும் பணக்கார குழந்தைகளே ஆங்கிலத்தை நுனிநாக்கில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
முந்தைய தமிழ் மீடியத்தில் படித்த 40 50 வயதுக்காரர்கள் எவ்வளவு முயன்றாலும் ஆங்கிலம் பேசவராமல் தங்கள் அலுவலகங்களில் பல இடையூறுகளைச் சந்திக்கிறார்கள். மாநில அரசுக்கு மத்திய அரசு ஆங்கிலத்தில் ஒரு தாக்கீது அனுப்பினால், அதை படித்து பொருள் தெரிந்து கொள்ள படித்தவரின் உதவியைத் தேடி ஓடுகிறார்கள். ஆங்கிலத்தை இப்போதும் சிலர் மனதுக்குள் தெளிவாகப் பேசுவார்கள். ஆனால், வெளியில் பேச நேர்ந்தால், எதிரில் இருப்பவர் பழக்கத்தின் காரணமாக படபடவென பொரிந்து தள்ளுவதைப் பார்த்ததும், இவர்களது நாக்கு பயத்தில் உள்ளே இழுத்துக் கொள்கிறது. இந்த பயத்தைப் போக்க சில முயற்சிகளை எடுத்தாக வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் பிறர் நம்மைக் கேலி செய்வார்களோ என்ற பயத்தை முதலில் விட்டுவிட வேண்டும். மனதை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். "இன்று மாலைக்குள் ஆங்கிலம் என் கைப்பையில் என்ற நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மட்டுமே பேசும் சராசரி குடும்பத்திலுள்ள ஒருவர் ஆங்கிலத்தில் பேச விரும்பினால், தனிமையில் அமர்ந்து மனதுக்குள் சொல்லிப் பார்க்க வேண்டும். பிறகு சற்று சத்தமாக பேசி பார்க்க வேண்டும். முதலில் இலக்கணச் சுத்தமாக பேச வேண்டுமென்பதில்லை. பேசப் பேச எந்த இடத்தில் எந்த இணைப்பு வார்த்தையைப் போட வேண்டும், எந்த "டென்ஸ் உபயோகிக்க வேண்டும் என்பதை புத்தகங்களின் உதவியோடு தெரிந்து கொண்டாலே ஆங்கிலம் எளிதாகி விடும்.
திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் குமரகுருபரர். பிறவியிலேயே வாய் பேச இயலாத இவர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றார். மதுரை வந்து மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றிப்பாடினார். வண்டாற்குழற் கண்ணி மலையத்துவம்சன் பெற்ற மாமதுரை இளங்குயிலே வருகவே என்று இனிய தமிழில் பாடிய இவர் காசிக்குச் சென்றார். அங்கே உருது பேசும் மன்னன் ஒருவனிடம் பேசி பொதுநலன் கருதி சில உதவிகள் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலைவாணியை தமிழ் பாசுரங்களால் பாடிவிட்டு, உருது கற்க உட்கார்ந்தார். ஒரே நாளில் உருது கற்றுக் கொண்டு மன்னனோடு உரையாடி சலுகையைப் பெற்றார். இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர், இஸ்லாமிய பாஷையில் பேசியது கண்டு மன்னன் மகிழ்ந்தான் என்கிறது வரலாறு.
நாமும் குமரகுருபரர் போல, நம்பிக்கையோடு பிற மொழிகளைக் கற்போம். நம் இந்திய மண்ணின் பாஷைகளையாவது முதலில் தெரிந்து கொள்வோமே!