கவுதமன் என்பவன் அந்தண குலத்தில் பிறந்தான். ஊர் சுற்றியே பொழுதைப் போக்கி விட்டான். பெற்றவர்கள் இறந்துவிட, வயிற்றுப்பாடு திண்டாட்டமானது. ஒரு கிராமத்துக்குச் சென்று திருடர்களுடன் சேர்ந்தான். அவர்களைப் போலவே செல்வந்தனாக விரும்பினான். அந்த திருடர்களிலும் நல்லவனான ஒருவன், கவுதமனை தன் நண்பனான நாடீஜங்கன் என்ற கொக்கிடம் அனுப்பி வைத்தான். காஷ்யப முனிவரின் மகனான அந்த கொக்கு, அசுர வடிவெடுத்திருந்தது. ஒரு சாபத்தால் கொக்காக மாறியிருந்தது. அசுர குலமாயினும், நற்குணமுடைய அந்த கொக்கு, கவுதமனுக்கு அறிவுரை வழங்கியது.நண்பனே! நீ பணக்காரனாகும் நோக்கத்தில் இங்கு வந்துள்ளாய். எங்கள் அசுரகுலத்தில் விருபாக்ஷன் என்பவன் வருடத்தில் ஒருநாள் மட்டும் வேண்டுமளவு பொருள் கொடுப்பான். அந்த நல்ல நாளும் நாளையே வருகிறது. எனவே உடன் புறப்பட்டுச் சென்று, வேண்டிய செல்வத்தை அள்ளிக்கொள், என்றது. கவுதமன் உடனே புறப்பட்டான். மன்னன் அவனை கருவூலத்திற்குள்ளேயே அனுமதித்தான். அவனுக்கு என்னென்ன வேண்டுமோ அத்தனையையும் எடுத்துக் கொள் ளச் சொன்னான். கவுதமனும் மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளிக் கொண்டு, மூடைகளில் கட்டிக் கொண்டு கொக்கு இருந்த இடத்துக்கே திரும்பி வந்தான். இரவாகி விட்டதால், கொக்கு உறங்கிக் கொண்டிருந்தது. இவன் பெரும் பொருளுடன் அந்த வெட்டவெளியில் தங்க மனமில்லாமல், உடனே ஊருக்குப் புறப்பட ஆயத்தமானான். அதே நேரம் பசி வயிற்றைக் கிள்ளியது. சுற்றுமுற்றும் பார்த்தான்.
அங்கே ஏதுமில்லை. அவனது கண்கள் கொக்கை நோக்கிப் பாய்ந் தன. அந்தணனாக இருந்தாலும், தீய திருடர்களுடன் அவன் வாழ்ந்ததால், புலால் சாப்பிடவும் பழகியிருந்தான். அவ்விடத்தில் தீ மூட்டினான். கொக்கை ஒரே அமுக்காக அமுக்கி தீயில் தூக்கிப் போட்டான். கொக்கு துடிதுடித்து இறந்தது. அதன் மாமிசத்தை சாப்பிட்டு விட்டு புறப்பட்டான். தன் நண்பனை நீண்ட நாளாக காணாத விருபாக்ஷன் கொக்கிற்கு ஏற்பட்ட நிலைமை தெரிந்து வருந்தினான். அதன் சாவுக்கு காரணம் தன்னிடம் செல்வம் பெற்றுச் சென்ற அந்தணன் என தெரிந்தவுடன். அவனைப் பிடித்து வந்து கண்டம் துண்டமாக வெட்டினான். அந்த உடலை சாப்பிடும்படி தன் சுற்றத்தாரை வேண்டினான். நன்றி கெட்டவனின் உடலைத் தின்றாலும் பாவம் என அவர்கள் மறுத்து விட்டனர். வேலைக்காரர்களை சாப்பிடச் சொன்னான். அவர்களும் மறுத்து விட்டனர். கடைசியாக உடல் துண்டுகளை வீசி வெளியே எறிந்துவிட்டான். அவற்றை முகர்ந்து பார்த்த நாய்களும், நரிகளும், பறவைகளும் கூட இந்த நன்றி கெட்டவனின் உடலைச் சாப்பிட மாட்டோம் என ஓடி விட்டன.
பார்த்தீர்களா! நன்றி கெட்ட செயலைச் செய்தவன் பிணமானால் கூட அவனைத் தொட ஆளிருக்காது. நீங்கள் உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி உடையவர்களாய் இருங்கள்.