வாழத்தானே பிறந்தோம். வாழ வைப்பதற்காகத்தானே ஜீவன்களை உற்பத்தி செய்கிறோம். பிறகென்ன...பிறந்த பிறகு குழந்தைகளை வழிநடத்தி, அவர்களை உயர்த்தும் எண்ணத்தில் இருந்து மட்டும் உனக்கு என்ன தயக்கம்? முன்னால் வைத்த காலை பின்னால் வைக்காதே என்று தெரியாமலா நம் பெரியவர்கள் சொன்னார்கள்? திருமணம் செய்கிறாய்...எந்த தைரியத்தில்? மனைவியை வைத்து வாழ முடியும் என்ற தைரியத்தில்...ஆனால், திருமணமான உடனேயே மனைவி வீட்டில் இருந்து பொருள் வர வேண்டும், இல்லாவிட்டால் அவள் வேலைக்குப் போய் சம்பாதித்து வரும் சம்பளத்தில் குடும்பம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது ஆண் வர்க்கத்தில் சிலருக்கு. பெண்களில் சிலர், புருஷனை என்ன பாடுபடுத்தியேனும், தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவித்து, அவனை கடனாளியாக்கியே தீர வேண்டும் என்ற கங்கணம்.
குழந்தைகள் விஷயத்திலும் இப்படியே. குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்காகவும், வெறும் சுகத்துக்காகவுமா குழந்தைகள் இறைவனால் நம்மால் தரப்படுகிறார்கள்! அவர்கள் நல்லவர்களாக இந்த பூமியில் வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே நமக்கு பரிசாக அளிக்கப்படுகிறார்கள். அவர்கள் பிறக்கும் வரை வேண்டும்....வேண்டும் என அரசமரம் சுற்றியவர்கள், பிறந்தவுடன் சனியனே! என திட்டுவதில் என்ன நியாயம்? உன் ஒழுங்கைத் தானே உன் பிள்ளைகளும் கடைபிடிப்பார்கள். உங்கள் இரு தரப்பாருக்குமே சொல்கிறேன். உங்கள் எண்ணங்கள் மாறுபட வேண்டும். அவரவர் உழைக்க வேண்டும். கலந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். தேவையானது எது, தேவையற்றது எது என்பதைப் பட்டியலிட்டு, தேவையானதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். வேலைக்குப் போகாத பெண்களாக இருந்தால், கணவரின் வருமானத்தில், எவ்வளவு மிச்சம் பிடிக்கலாம் என்பதை ஆலோசித்து, சேமித்து அவரைக் குஷிப்படுத்த வேண்டும். தேவையற்ற ஆசைகளை எக்காரணம் கொண்டும் உள்ளத்துக்குள்ளும், இல்லத்துக்குள்ளும் விடக்கூடாது. குழந்தைகளை வளர்ப்பதில், அவர்களுக்கு நல்லதைக் கற்றுக் கொடுப்பதில், அவர்கள் முன் நல்லவிதமாக நடந்து கொள்வதில் இருவருக்கும் பங்கிருக்கிறது. ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்.
ஜூலியஸ்சீசர் என்ற பேரரசரை தெரியாதவர்கள் இல்லை. பலநாடுகளிலும் ரோமப் பேரரசின் ஆதிக்கத்தைச் செலுத்தியவர். இங்கிலாந்திலும் ரோம் கொடி பறக்க வேண்டும் என்பது இவரது ஆசை. படைகள் படகில் இங்கிலாந்தின் கரையை அடைந்ததும், அவர் போட்ட முதல் உத்தரவு என்ன தெரியுமா? படகுகளை கொளுத்தி விடுங்கள் என்பது தான். வீரர்கள் திகைத்தனர். மகாராஜா! படகுகளைக் கொளுத்திவிட்டால் நாம் எப்படி திரும்பிப் போவோம், என்றனர். சீசர் முழங்கினார். ஏன் திரும்ப வேண்டும் வீரனே! இந்த நாடு இன்றுமுதல் நம்முடையது. படகுகள் இருந்தால், புறமுதுகிட்டுத் திரும்பி படகுகளில் ஓட வாய்ப்பு கிடைக்கும். படகுகள் இல்லாவிட்டால், தப்பிச்செல்ல வழியிருக்காது. நீ தோற்றால் உன் உயிரை ஆங்கிலேயன் பறித்து விடுவான். இதனால், நீ அவனது படையைத் தோற்கடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் வரும். நாம் நம் கொடியை இங்கு பறக்க விட்ட பிறகு, இந்நாட்டின் படகும் நமக்கும் சொந்தம். அதில் ஏறி நாம் செல்வோம், என்றான்.
வாழ்க்கையில் இருந்து தப்பிக்க முயலக்கூடாது. அந்த யுத்தத்தில் போராடி ஜெயிக்க வேண்டும்.