ஒரு ஊரில் பரந்தாம முனிவர் என்பவர் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். ஏழைகளுக்கு சித்தமருத்துவம் செய்வார்.அவ்வப்போது பணக்காரர்கள் சிலரும் வருவார்கள். அவர்களாக தரும் பணத்தை கொண்டு ஏழைகளுக்கு மருந்து வாங்குவார். இவருக்கு சில சீடர்கள் உண்டு. அவர்கள் ஆஸ்ரம பணத்தை தொட மாட்டார்கள். எங்காவது பிச்சை எடுத்து வந்து பரந்தாம முனிவருக்கு கொடுத்து விட்டு தாங்களும் சாப்பிடுவார்கள். பரந்தாம முனிவரின் வைத்தியம் புகழ் பெற்றதாகி விட்டது. ஆஸ்ரமமும் வேகமாக வளர்ந்தது. இது அவ்வூரில் வசித்த மாணிக்கம் என்ற பணக்காரனுக்கு பிடிக்க வில்லை. தன்னை விட உயர்ந்த புகழ் உள்ள ஒருவன் தனது ஊரில் இருக்கக்கூடாது என எண்ணினான். இந்த பொறாமை தீ காரணமாக பரந்தாம முனிவருக்கு அவர் அறியாமலே கேடு செய்வான். எதையும் கண்டு கொள்ளாத முனிவர் தன் போக்கில் நடந்து கொண்டிருந்தார்.இதனால் மாணிக்கம், கூலிக்கு ஆட்களை அடிக்கும் முண்டன் என்பவனை அணுகினான். அவனிடம் சிறிது பணத்தைக் கொடுத்து ஆஸ்ரமத்திலுள்ள விலை மதிப்பு மிக்க மருந்துகளை அழித்து விடச் சொன்னான்.
முண்டன் ஆஸ்ரமத்திற்கு வந்தான். வாசலில் ஒரு குதிரை நின்றது. அது முனிவருக்குரியது. யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல், ஆஸ்ரமத்திற்கு வர இயலாத போது முனிவர் அதில் ஏறிச்சென்று வைத்தியம் பார்ப்பார். முண்டன் வந்த வேலையை விட்டு விட்டு, குதிரை இருந்தால் தானே முனிவர் வெளியூரெல்லாம் போவார். இதை முதலில் எங்காவது கட்டி வைத்து விடுவோம்? என எடுத்துச் சென்றான். அப்போது வெளியே சென்றிருந்த முனிவர் வந்தார். தன் குதிரையில் மாணிக்கம் செல்வதைப் பார்த்தார். தம்பி! நீ குதிரையை உன்னிடமே வைத்துக்கொள். பரவாயில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நல்லது செய்வோர் தங்களுக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டால், நல்லது செய்வதையே விட்டு விடுவார்கள், என்றார். முண்டனின் காதுகளில் இந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. அவன் மனம் தெளிந்தான். ஆஸ்ரமத்திற்கு திரும்பி வந்து குதிரையை ஒப்படைத்து விட்டு அங்கேயே தங்கி விட்டான்.
மாணிக்கத்திற்கு ரத்தம் கொதித்தது. அவன் தன் நம்பிக்கைக்குரிய சில பணியாளர்களுடன் ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்க சென்றான். இரவாகி விட்டதால் கண் தெரியாமல் ஒரு பள்ளத்தில் குதிரையுடன் விழுந்து விட்டான். குதிரை பெரும் பள்ளத்தில் விழுந்து இறந்தது. மாணிக்கம் ஒரு கிளையில் சிக்கி தொங்கியபடியே அலறினான். சத்தம் கேட்ட முனிவர் முண்டனையும் இன்னும் சில சீடர்களையும் அழைத்துக் கொண்டு வந்து மாணிக்கத்தைக் காப்பாற்ற முயன்றார்.முண்டன் சீறினான். இந்தக் கொடியவனைக் காப்பாற்றக்கூடாது, என்றான். முனிவர் அவனை அடக்கினார். மாணிக்கத்தை மீட்டு அவனுக்கு மருத்துவ உதவி செய்தார். மனம் மாறிய மாணிக்கம் முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். வெறுப்பு வெறுப்பை வளர்க்கிறது. அன்பு வெறுப்பின் தன்மையை மாற்றுகிறது. எதிரியாய் இருந்தாலும் அன்பைப் பொழிய கற்றுக் கொள்ள வேண்டும். மகான்களின் செயலை ஆதரிக்க வேண்டும்.
நல்லதை நினைப்பவர்கள் நல்லதையே அடைவார்கள்.