மன்னர் விஜயராகவ நாயக்கர் அங்குமிங்கும் நடை போட்டுக் கொண்டிருந்தார். அமைச்சர்கள் கவலையோடு அவரவர் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர். அமைச்சர்களே! தாங்கள் தான் இதற்கு வழி சொல்ல வேண்டும். நாட்டில் பசி,பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கருணைக்கடலான தெய்வம் ஏனோ என்னை இப்படி சோதிக்கிறது. பத்து வருடமாக மழையே பெய்யவில்லை என்றால், காடு, கழனிகளை கவனிப்பது எப்படி? குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பது எப்படி? நேற்று கூட ஒரு குடிமகன் என்னிடம் ஓடோடி வந்தான். மகாராஜா! என்னை இதுவரை கட்டியாண்ட மனைவி, தாகத்தால் உயிர்போகும் நிலையில் இருக்கிறாள். பசி வேறு. அரண்மனையில் இருக்கும் ஒரு குவளை தண்ணீரைக் கொடுங்கள். நான் அதை அவளுக்கு கொடுத்து உயிரைக் காப்பாற்றுகிறேன். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனையும் பெண் பிள்ளைகள். தாயில்லாத பெண் பிள்ளைகளை நான் எப்படி பாதுகாப்பேன்? நான் வேலைக்குப் போய்விட்டால் அவர்களைப் பாதுகாக்க யார் இருக்கிறார்கள்? தாயில்லாத பெண் குழந்தைகளை பெண் எடுக்கவும் மாப்பிள்ளை வீட்டார் யோசிப்பார்களே! என் குடும்பம் தறிகெட்டு போவதைத் தடுக்க இந்த ஒரு குவளை தண்ணீரால் முடியும் என்று சொல்லி கதறி அழுதான்.
நானே அவனுடன் மாறுவேடத்தில் தண்ணீர் பானையுடன் புறப்பட்டேன். வீடு சென்று சேர்வதற்குள் அப்பெண்ணின் தலை சாய்ந்து விட்டது. அந்த ஐந்து பெண் குழந்தைகளும் கதறிய கதறல் என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது. அந்த வாலிபனுக்கு என்னால் ஆறுதல் சொல்லவே முடியவில்லை. அவன் கண்கள் குத்தி மயக்க நிலைக்கு போய் விட்டான். அவனை தெளிவித்து பெண் குழந்தைகளின் திருமணச்செலவுக்கு பணம் கொடுத்து விட்டு வந்தேன். இப்படி நம்மை அறியாமல் எத்தனை குடும்பங்கள் இந்நாட்டில் செத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. நீங்கள் உடனே எனக்கு யோசனை சொல்லுங்கள், என்றார். மூத்த அமைச்சர் ஒருவர் முன் வந்தார். மன்னா! இயற்கையின் சதியை வெல்ல நம் யாராலும் முடியாது. எந்த யோசனையும் பலிக்காது. ஒரே ஒரு வழி இருக்கிறது. நாம் இப்பூவுலகில் வாழும் தெய்வமான ராகவேந்திரரை தரிசிக்க செல்வோம். அவர் மனம் வைத்தால், இப்பூமி வெள்ளக்காடாகும், என்றார். மன்னன் ஒப்புக் கொண்டான். ஸ்ரீராகவேந்திரரை தரிசிக்க ஒரு பட்டாளமே கிளம்பியது.
ராகவேந்திரருக்கு மரியாதை செய்த மன்னன், அவரைத் தன் அரண்மனைக்கு எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக்கொண்டான். மக்கள் துன்பம் தீர்க்க வந்த அந்த கருணைக்கடலும் அரண்மனைக்கு வந்தார். மக்கள் ராகவேந்திரர் செய்யப்போகும் அதிசயத்தைக் காண ஏராளமாகக் கூடினர். எல்லார் முகமும் பசியாலும், தாகத்தாலும் வாடிப் போயிருந்தது. ராகவேந்திரர் அந்த அப்பாவி முகங்களைப் பார்த்தார். அவர்களது இதயங்கள், தன்னை மனதார துதிப்பதைப் புரிந்து கொண்டார். மன்னனிடம், சிறிது நெல் கொண்டு வரச்சொல், என்றார். நெல் வந்தது. அதை ஒரு பலகையில் பரப்பிய ராகவேந்திரர், அக்ஷய என எழுதினார். அக்ஷய என்றால் வாழ்க, வளர்க எனப் பொருள். அந்த தெய்வப்பிறவியே வாழ்க, வளர்க என வாழ்த்திய பின் மக்களுக்கு கஷ்டம் இருக்குமா என்ன? அம்மாத்திரத்திலேயே பத்தாண்டுகளாக நின்று போயிருந்த மழையும் ஒட்டு மொத்தமாக, ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. மன்னனும், மக்களும் அடைந்த இன்பத்திற்கு அளவில்லை. ஆனந்த மழை என்பார்களே! அதை உண்மையாகவே மக்கள் அனுபவித்தனர். அட்சய திருதியை நாளின் நோக்கமே செழிப்பான உலகைப்படைப்பது தான்.
நாமும் இறைவனை பக்தியுடன் வேண்டி, தேவையான காலத்தில் தேவையான மழை பெய்ய பிரார்த்திப்போம்.