ஒரு பக்தனுக்கு பெருமாளைக் காண வேண்டும் என்று ஆசை. மனிதன் பெருமாளைப் பார்ப்பதென்பது நடக்கிற விஷயமா? பக்தன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. முனிவர்கள் என்ன செய்தார்கள்? தவமிருந்தார்கள். கடவுளை பார்த்தார்கள். அதே வழியை நாமும் பின்பற்றினால் என்ன என்று தவத்தை தொடங்கி விட்டான். ஒரு மரத்தடியில் இருந்த அவன், அந்த மரத்தின் இலைகளை மட்டுமே சாப்பிட்டான். மரத்தைச் சுற்றி சிறிது நேரம் நடப்பான். பின்னர் தவத்தில் ஆழ்ந்து விடுவான். அவன் மரத்தைச் சுற்றி நடந்து நடந்து, அந்த இடமே பள்ளமாகி விட்டதாம்! அத்தனை ஆண்டுகள் தவமிருந்தான். ஒருநாள் ஒரு துறவி அந்தப்பக்கமாக வந்தார். இளைத்து எலும்பாய் போயிருந்தபக்தனைப் பார்த்தார். உன் பெயர் என்னப்பா? திருமலை உன்னைப் பார்த்தால் தவமிருக்கிறாய் போல் தெரிகிறது. என்ன கோரிக்கை வைத்துள்ளாய்? சுவாமி! நான் பெருமாளின் தரிசனத்தை நேரில் பெறவேண்டும், அப்படியா! நான் பெருமாளின் நண்பன் தான். அவரைச் சந்திக்க அடிக்கடி வைகுண்டம் போவேன், வருவேன். இப்போது கூட அங்குதான் போகிறேன். அவரைப் பார்த்து உன் கோரிக்கையைச் சொல்கிறேன்.
நான் சொன்னால் பெருமாள் கேட்பார்,. இப்படியாக இருவரும் பேசிக் கொண்டனர். பக்தனுக்கு சந்தோஷம்.மிக்க நன்றி சுவாமி! தாங்கள் எனக்காக பெருமாளின் கருத்தை கேட்டு வந்து சொல்லுங்கள், என்றான் பக்தன்.துறவி கிளம்பி விட்டார். வைகுண்டத்திற்கு போனார். பெருமாளிடம், பகவானே! தாங்கள் பூலோகத்தில் தவமிருக்கும் திருமலை என்ற தங்கள் பக்தனுக்கு எப்போது காட்சி தரப் போகிறீர்கள்? தங்கள் பதிலை அவனிடம் தெரிவித்து விடுகிறேன், என்றார். துறவியே! அவன் எந்த மரத்தின் கீழ் தவமிருக்கிறானோ, அந்த மரத்தில் எத்தனை இலைகள் இருக்கிறதோ, அத்தனை ஆண்டுகள் இன்னும் தவமிருக்க வேண்டும், என்றார் பெருமாள். பெருமாளின் பதிலை, திருமலையிடம் எப்படி சொல்வதென துறவிக்கு தயக்கம். மரத்திலுள்ள இலைகள் எண்ணிலடங்காதவை. அத்தனை வருடங்கள் இந்த திருமலை உயிருடன் இருக்கமாட்டானே! அவனிடம் எப்படி சொல்வது? என தயங்கிய துறவி, வேறு வழியின்றி பெருமாள் சொன்னதை அவனிடம் சொல்லிவிட்டார். திருமலை அதிர்ச்சியில் உறைவான் என எதிர்பார்த்தார் துறவி. ஆனால், திருமலையோ ஆனந்தமாக நடனமாடினான்.
வைகுண்டம் இருக்கும் வானத்தை நோக்கி கைகூப்பி வணங்கினான். பெருமாளே என் தவம் விரைவில் பலிக்கப் போவதற்காக நன்றி. இத்தனை குறுகிய காலத்தில் எனக்கு காட்சி கொடுக்கப்போவதாகச் சொல்லி அனுப்பினீர்களே! உங்கள் கருணையை என்னவென்பது? என்று கூவினான். துறவிக்கு ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், பெருமாள் அங்கு வந்தார். திருமலைக்கு காட்சி கொடுத்தார். துறவி பெருமாளிடம், பகவானே! தாங்கள் இந்த மரத்தின் இலைகளின் எண்ணிக்கை ஆண்டு கடந்த பின் தானே வருவதாகச் சொன்னீர்கள், என்றார். துறவியே! திருமலையின் மனவலிமையை சோதிக்கவே அப்படி சொன்னேன். நான் சொன்ன ஆண்டுகளை பற்றிக் கவலைப்படாமல், அவற்றை குறுகியதாக நினைத்து மீண்டும் தவத்தை தொடர இருந்தான் திருமலை. அந்த நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். பரிபூரண நம்பிக்கையுடன் யார் என்னை வணங்குகிறார்களோ, அவர்கள் கண்ணுக்கு நான் தெரிவேன், என்றார்.
எந்தச் சூழலிலும், எவ்வளவு கஷ்டமான நிலையிலும், எளிதாக எதையும் எடுத்துக் கொள்பவனே வெல்வான்.