தர்மராஜா அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தார். அவர் மனமெல்லாம், பிறர் நலன் குறித்த சிந்தனை களை மேலோங்கி இருந்தது. இந்த சமயத்தில் குரு பீஷ்மர் வந்தார். தர்மராஜா! உன் மனதில் உள் ளதை முகக்குறிப்பால் உணர்ந்தேன். நீ எப்போதுமே பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவன். இந்த நற்குண முடையவர்களுக்கு சொர்க்கம் நிச்ச யம், என்றார். அத்துடன் ஒரு கதை யும் சொன்னார். ஒரு காலத்தில் கிளி ஒன்று பழுத்த பழங்களை உடைய மரம் ஒன்றில் தங்கியிருந்தது. அம்மரத்தில் வேறு பல பறவைகளும் அடைக்கலம் புகுந்திருந்தன. அம்மரம் அந்தப் பறவை களுக்கு தாய் போல் அடைக்கலம் தந்தது. ஒருமுறை வேடன் ஒருவன் பறவைகளை வேட்டையாடவந்தான். விஷம் தடவிய அம்பை பறவைகளின் மீது எய்தான். பற வைகள் சிக்காமல் பறந்து விட்டன. குறி தவறிய அம்பு மரத்தில் தைத்தது. விஷம் பரவி மரம் நாளடைவில் பட்டுப் போய் விட்டது. இதனால், அதில் தங்கியிருந்த பற வைகள் எல்லாம் வேறு மரங்களை நாடிச்சென்று விட்டன. கிளி மட்டும் அங்கிருந்து செல்லவில்லை.
ஒரு புதருக்குள் தன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருந்தது. பழங்களுக்காக அது வெகு தொலைவு செல்ல வேண்டி வந்தது. சரியான உண வின்மையால் அதன் உடல் மிகவும் மெலிந்தது. இதை தேவலோகத்தில் இருந்து இந்திரன் கவனித்தான். ஏன் இந்தக் கிளி மட்டும் இந்த மரத்தை விட்டு அகலாமல் இருக் கிறது? என்று வியப்படைந்தான். மனித வேடத்தில் பூலோகம் வந்து கிளியிடம் சென்றான். தன்னை நோக்கி வரும் மனிதனைக் கண்டு கிளி சற்றும் அஞ்சவுமில்லை. உயர மான இடத்துக்கு பறக்கவும் இல்லை. மிகுந்த பணிவோடு, வருக வருக தேவாதி தேவனே! தேவேந்திரனே வணக்கம்! என்றது. இந்திரனுக்கு இன்னும் ஆச்சரியம்.மனித வடிவில் வந்த என்னை எப்படி அடையாளம் தெரிந்து கொண்டாய்? என்றான்.இது ஒன்றும் பெரிய விஷய மல்ல இந்திரரே! நான் கிளியாயினும் தவ வலிமை உண்டு. என் தவ வலி மையால், வருபவர் யார் என்பதை உணரும் சக்தியைப் பெற்றுள்ளேன், என்றது. இந்திரன் அதை பாராட்டி விட்டு, சரி... இந்த உலர்ந்த மரத்தில் இருப்ப தால் என்ன லாபம்? மரம் பட்டுப் போனால் செழிப்பான இடங்களுக்கு செல்வது தானே பறவைகளின் இயற்கை குணம். நீ ஏன் இங்கேயே இருக்கிறாய்? என்றான். இந்திரா! இதென்ன கேள்வி! இந்த மரம் நன்றாக வாழ்ந்த காலத்தில் என்னைப் போன்ற ஆயிரக்கணக் கான பறவைகளுக்கு அடைக்கலம் தந்தது. மானிடர்களுக்கு நிழல் தந்தது. கனிகளைக் கொடுத்தது.
இலைகளை சருகாக்கியும், காய்ந்த சுள்ளிகளை உதிர்த்தும் எரிபொருள் ஆக்கியது. இப்படிப்பட்ட மரத்திற்கு ஒரு கஷ்டம் வந்ததும், எல்லாரும் ஓடியது போல, நானும் ஓடியிருந்தால், நான் நன்றி கெட்டவன் என்ற பழியைச் சுமந்திருப்பன். வாழ்வோ, சாவோ இந்த மரத்திலேயே வாழ்ந்து மடிவேன், என்றது. கிளியின் உயர்ந்த குணம் இந்திரனை வெகுவாக கவர்ந்தது.கிளியே! நன்றி கெட்டவர்கள் போன்ற கயவர்கள் உலகில் வேறு யாருமில்லை. உன் உயர்வான குணத்துக்கு நான் பரிசு தர உள்ளேன். ஏதேனும் வரம் கேள், என்றான். இந்திரா! உங்களிடம் வேறென்ன கேட்கப் போகிறேன். எனக்கு அடைக்கலம் தந்த இந்த மரம் மீண்டும் பூத்துக் குலுங்க வேண்டும். எனக்கு அடைக்கலம் தந்த இம்மரத்துக்கு நான் செய்யும் கைம்மாறு இதுவே, என்றான்.இந்திரன் வரம் தந்தான். மரம் மீண்டும் காய், கனிகளுடன் பூத்துக் குலுங்கியது. பறவைகள் மீண்டும் மகிழ்வுடன் வாழத் துவங்கின. இந்தக் கதையைச் சொன்ன பீஷ்மர், தர்மபுத்ரா! நீயும் உன்னை வளர்த்தவர்களை மறந்து விடாதே. நன்றி மறப்பது ஈனச் செயல், என்றார்.