பிருகு மகரிஷியின் மகனான சியவனர், நர்மதை நதிக்கரையிலுள்ள காட்டில், கண்களைத் திறந்த நிலையில் மனதை அடக்கி, நீண்டகாலம் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் உடம்பைச் சுற்றிலும் எறும்புகள் புற்று கட்டியது. நாளடைவில் புற்று அவரை மூடிவிட்டது. கண்கள் இருந்த இடத்தில் மட்டும், மண் மூடவில்லை. சர்யாதி என்ற அரசன் தன் பரிவாரங்களுடன் சியவனர் இருந்த காட்டிற்கு வேட்டையாட வந்தான். அரசனுடன் அவனது மகளும் தோழிகளுடன் வந்திருந்தாள். அவளது பெயர் சுசன்யா. சுசன்யா தோழிகளுடன் விளையாடிக் கொண்டே சியவனர் தவம் இருந்த பகுதிக்கு வந்தாள். புற்றை உற்றுப் பார்த்தாள். உள்ளே ஏதோ பளபளப்பாக மின்னுவதையும் அவள் கண்டாள். குறும்பாக ஒரு குச்சியைக் கொண்டு அதைக் குத்தினாள். சியவனர் பார்வையை இழந்தார். நடந்ததை அறியாமல் சுசன்யாவும் அவளது தோழிகளும் திரும்பினர். சியவனரின் தவம் கலைந்தபிறகு பார்வை தெரியவில்லை. ஞான திருஷ்டியால் தம் கண்கள் எப்படி பார்வை இழந்தன என்பதை தெரிந்துகொண்டார். கடுஞ்சினம் கொண்ட அவர், மகள் செய்த பிழைக்காக மன்னரையும் அவருடன் வந்த ஆட்களையும் சபித்தார். இதையறிந்த, மன்னன் ஓடோடி வந்து முனிவரின் காலடியில் விழுந்து தன் மகள் செய்த குற்றத்தை மன்னித்தருளும்படி வேண்டினான். அதற்குப் பிராயச்சித்தமாக தன் மகள் சுசன்யாவை முனிவருக்குத் திருமணம் செய்துவைப்பதாகக் கூறினான்.
முனிவரும் அவனை மன்னித்து சாபத்தை விலக்கிக் கொண்டார். சுசன்யாவிற்கும் சியவனருக்கும் திருமணம் நடந்தேறியது. முதுமையும், பார்வையுமற்ற சியவனருடன் காட்டில் வாழத் தொடங்கினாள் சுசன்யா. அவருக்கு வேண்டிய பணிவிடைகளை தயங்காமல், மனம் கோளாமல் அன்பாக செய்து வந்தாள். சியவனரின் நீண்டகால தவத்தை மெச்சிய தேவர்களில் இருவர் அவருக்கு உதவிபுரிய எண்ணினார்கள். அதற்கு முன் சுசன்யாவை சோதிக்க விரும்பினர். ஒருநாள் சுசன்யா ஆற்றிலிருந்து நீராடி திரும்பும்போது, அவர்கள் அவள் முன் தோன்றினர். சியவனரின் கண்பார்வையை மீட்டுத் தருவதாகவும், அவருடைய முதுமையைப் போக்கி இளமையை திரும்பத் தருவதாகவும் கூறினார்கள். அதற்கு ஒரு நிபந்தனையை விதித்தார்கள். சுசன்யா! நாங்கள் இருவரும் உன் கணவரைப் போலவே உருமாறி ஒன்றாக உன் முன் நிற்போம். நீ சரியான கணவனைத் தேர்வு செய்ய வேண்டும். இதை செய்து விட்டால், அவருக்கு பார்வை வந்துவிடும். இன்னும் ஒன்பது நாளில் இதற்கான தேர்வு, என்றனர்.
கடுமையான இந்த நிபந்தனையை ஏற்றாள் சுசன்யா. அவள் அம்பிகையின் பக்தை. அவள் ஒன்பது நாளும் விரதமிருந்து அம்பிகையை பூஜித்தாள். குறிப்பிட்ட நாளில், தேவர்கள், சியவனருடன் ஒரே உருவில் காட்சியளித்தனர். ஒரேவித தோற்றத்துடன் இருந்த மூவரையும் பார்த்து அவள் ஒரு கணம் திகைத்தாள். பிறகு கண்களை மூடி தேவியை தியானித்தாள். தேவி அவளது கண்களில் சியவனரைக் காட்ட, சரியான கணவனைத் தேர்ந்தெடுத்தாள். மகிழ்ந்த தேவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி சியவனருக்கு இழந்த கண்பார்வையைக் கொடுத்தார்கள். மேலும் அவரது முதுமையையும் போக்கி, இளமையாக்கினார்கள். மகிழ்ந்த சுசன்யா தன் சியவனருடன் இனிய இல்லறம் நடத்தினாள். இளமையை பெற்ற சியவனரின் பெயரில் தற்காலத்தில் புத்துயிர் அளிக்கும் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருந்தான சியவனப் பிரகாசம் விளங்கிவருகிறது.