பரம நாத்திகன் ஒருவன் இருந்தான். வாழ்நாளில் ஒரு தடவை கூட அவன் கோயிலுக்கு போனதில்லை. போகிறவர்களையும் கேலி செய்வான். கோயிலில் இருந்து வெளியே வருவோரிடம், சுவாமி! என்ன தந்தது? கண் முன்னால் வந்ததா? என்றெல்லாம் கமென்ட் அடிப்பான். ஒருநாள் அவன் ஒரு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தான். திடீரென ஓரிடத்தில் சறுக்க, அதல பாதாளத்தில் சரிந்தான். எந்த பிடிமானமும் கீழே வந்து கொண்டிருந்த போது, ஐயையோ! உயிர் போய்விடும் போல் இருக்கிறதே! இதுவரை நாம் கடவுளை வணங்கியதில்லை. இப்போது வணங்கிப் பார்ப்போமே, கடவுள் இருந்தால் காப்பாற்றி விட்டுப் போகிறார், என எண்ணினான்.
அந்த நிமிடமே ஒரு கிளை கையில் சிக்க அதை பிடித்துக் கொண்டு தொங்கினான். அப்போது அசரீரி சப்தம் கேட்டது. தம்பி! நான் தான் கடவுள் பேசுகிறேன். இவ்வளவு நாளும் நம்பாத என்னை நீ நம்பியதற்கு பரிசாக உன் உயிரைக் காப்பாற்றுகிறேன். ஆனால், நான் சொன்னதைச் செய்வாயா? என்றது. பயத்தில் உறைந்து போயிருந்த நாத்திகன், சாமி! நீ என்ன சொன்னாலும் செய்றேன், என்றான். சரி...அந்தக் கிளையை விட்டுவிடு. நான் காப்பாற்றுகிறேன், என்றார். நாத்திகன் சுதாரித்துக் கொண்டான். நீ சாமியா இல்லை பூதமா...எந்த முட்டாளாவது தனக்கு கிடைத்த ஒரே நம்பிக்கையை விடுவானா? இந்த கிளை தான் எனது நம்பிக்கை. இதையும் விட்டால் உயிரல்லவா போய்விடும்? என்றான். உடனே கடவுள் சொன்னார். ஆமாம்...நீ சொல்வது நூறு சதவீதம் சரியானது. நம்பிக்கையை கைவிட்டவனுக்கு உயிர் போய் விடும் என்பது உன் கருத்து. எனது கருத்தும் அதுவே.
முதலில் நான் இல்லை என்ற நம்பிக்கையுடன் இருந்தாய். இப்போது என்னை நம்புகிறாய். நம்பிக்கையை கைவிட்ட நீ, உயிரோடு இருக்க லாயக்கற்றவன் தானே! என்றார். உடனே கிளை ஒடிந்தது. அதல பாதாளத்தில் விழுந்து உயிரை விட்டான். சிலருக்கு அரைகுறை நம்பிக்கை இருக்கும். இப்படி நடக்குமா? அப்படி நடக்குமா? நாம் போகும் பாதை சரியானது தானா? இல்லை திரும்பி விடுவதா? இப்படி எண்ணுவோரும் துன்பத்தையே சந்திப்பார்கள். கடவுள் என்ற விஷயத்தில் மட்டுமல்ல. எந்தச் செயலைச் செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். நம்பிக்கையை தருவது மனமே. அந்த மனதை பல பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். பயிற்சிகள் என்பது தியானமோ, வழிபாடுகளோ அல்ல. நம் மனதிற்கு நாமே பிறப்பித்துக் கொள்ளும் கட்டளைகள் அவை. சரியான திட்டமிடுதல். திட்டமிட்ட பிறகு பாதையை மாற்றாமல் இருத்தல், எதிர்ப்படும் துன்பங்களை புன்னகை தவழ்ந்தபடியே வரவேற்றல், அந்த துன்பங்களை சமாளிக்கும் ஆற்றலை மட்டும் கடவுளிடம் வேண்டுதல்... இது போதும். வாழ்க்கையில் வெற்றி பெற!