ஓரு அரசன் செல்வச்செழிப்புடன் வாழ்ந்தான். அரசி பேரழகி. இதுதவிர அரண்மனையில் ஏராளமான தாசிகள். அவனுக்கு ஒரே மகள். பெண்களை காமப்பசி தீர்க்கும் இயந்திரமாய் நினைக்கும் தந்தையின் போக்கு அவளுக்கு பிடிக்கவில்லை. அவளது வாழ்வே வெறுத்தது. தந்தை மகளுடைய திருமணப் பேச்சை எடுத்தான். பலதேசத்து ராஜாக்கள் பெண் கேட்டு தூது அனுப்பினர். அத்தனையையும் தட்டிக்கழித்த இளவரசி, பக்தியில் ஆழ்ந்துவிட்டாள்.கிருஷ்ண பக்தையான அவளுக்கு தந்தை புத்தி சொன்னான். மகளே! நீ வணங்கும் அந்தக் கண்ணன் கூட, பல பெண்களின் நாயகன் தான். அவனும் இல்லறத்தில் விருப்பம் கொண்டு பாமா, ருக்மணியை திருமணம் செய்திருக்கிறான். நீயும் இல்லறத்தை ஏற்றுக்கொள், தயங்காதே, என்றான். இளவரசி தந்தையிடம், அப்பா! அறியாமையால் தெய்வத்தை குறை கூறாதீர்கள். கண்ணன் தெய்வம். இந்த உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் தங்களைப் பெண்களாகப் பாவித்து அவனை அடைய விரும்புகின்றனர். அன்பின் காரணமாக அவன் மீது காதல் கொண்டதாக நடிக்கின்றனர்.
அந்த நடிப்பை எழுத்தாளர்கள் காதல் காவியங்களாக வடித்துள்ளனர். ராதாவும் கண்ணனும் காதல் கொண்டதில் காமம் இல்லை. தெய்வீகமே இருக்கிறது. மனித காமத்தை தெய்வத்தின் காதலுடன் ஒப்பிடாதீர்கள், என புத்திமதி சொன்னாள். எக்காரணம் கொண்டும் தனக்கு திருமணம் வேண்டாம் என சொல்லி விட்டாள். தாயும் மகளை வற்புறுத்தினாள். அம்மா! உன்னைப் போல் கணவனை பிற பெண்களுக்கு என்னால் தாரை வார்க்க முடியாது. நான் ஒரு அரசனுக்கு வாழ்க்கைப்படுவேன். அவனும் இதையே தான் செய்வான். எனவே, நான் கிருஷ்ண பக்தையாகவே வாழ்ந்து மறைவேன், என்றாள். வீட்டில் தொடர்ந்து இடைஞ்சல் செய்ததால், யாரும் அறியாமல் காட்டுக்குப் போய் விட்டாள். அங்கே தவ வாழ்வு வாழ்ந்தாள். ஆனால், அங்கேயும் தொடர்ந்தது பிரச்னை. காட்டிற்கு வேட்டையாட வந்த ஒருவன் இளவரசியைப் பார்த்து அவள் அழகில் சொக்கிப் போனான். தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினான். அவள் மறுத்தாள். கடத்திச் செல்வேன் என அவன் மிரட்டவே, சமயோசித புத்தியுள்ள இளவரசி, இளவரசே! பத்துநாள் கழித்து இங்கு வாருங்கள். அப்போதும் என்னை உங்களுக்கு பிடித்திருந்தால், திருமணம் செய்து கொள்ளுங்கள், என்றாள்.
அவனும் அவள் எங்கும் ஓடிவிடக்கூடாதென சத்தியம் வாங்கிக் கொண்டு சென்றான். அதன்பின் இளவரசி தினமும் பேதிமருந்து சாப்பிட்டாள். ஒரு பாத்திரத்தில் மலம் கழித்தாள். பத்துநாளும் பத்து பாத்திரங்களில் கழித்து ஒரு மறைவிடத்தில் வைத்தாள். பேதி அதிகமாக இருந்ததால் இளைத்து விட்டாள். இளவரசன் அங்கு வந்தான். அப்போது பார்த்த இளவரசிக்கும், இப்போது பார்க்கும் இளவரசிக்கும் அதிக வித்தியாசம் இருந்தது. அவளது மெலிந்த தோற்றம் அவனை வெறுப்படையச் செய்தது. இளவரசனிடம் அவள், கலங்காதீர்கள் இளவரசே! என் அழகை அதோ அந்த மறைவிடத்தில் பாத்திரங்களில் போட்டு வைத்துள்ளேன். பாருங்கள், என்றார். இளவரசன் என்னவோ ஏதோவென அங்கு போய் பார்க்க நாற்றம் குடலைப் பிளந்தது. பார்த்தீர்களா! ஒருவரது அழகு என்பது இதுதான். நாற்றம் பிடித்த இந்த சதைக்காகவா இப்படி அலைகிறீர்கள்? என்றாள். அவனுக்கு ஞானம் பிறந்தது. தனது நாட்டை துறந்து, தவமிருக்க போய் விட்டான்.