ஒரு சமயம் பகவான் கிருஷ்ணர் கருடனை அழைத்து பக்ஷிராஜா! குபேரனின் ஏரியில் மலர்ந்திருக்கும் அழகும் வாசனையும் கொண்ட சவுகந்தி மலர்களைப் பறித்து வா என்று கூறி அனுப்பினார். என் போன்ற பலமும், வேகமாகச் செல்லக்கூடிய திறனும் பெற்றவன் இம்மூவுலகிலும் இல்லை முடியாது என சொல்லியபடி வேகமாக பறந்தது கருடன். கந்தமாதன பர்வதத்தை அடைந்து, ஏரியில் இறங்கி சவுகந்தி மலரைப் பறித்தது. அந்த ஏரிக்கரையில் தான் அனுமான் ராமஜெபம் செய்து கொண்டிருந்தார். கருடன் மலர்களைப் பறிப்பதைப் பார்த்த அனுமன், ஏ பறவையே! இம்மலர் யக்ஷராஜன் குபேரனுக்கு உரியது. அவன் அனுமதியின்றி இம்மலர்களைப் பறிக்கக்கூடாது. இருந்தாலும் கேட்கிறேன். இம்மலர்களை அப்படி யாருக்காகப் பறிக்கிறாய்? சொல், என்றார்.கருடன், பகவான் கண்ணபரமாத்மாவிற்காகப் பறிக்கிறேன். பகவான் பணிக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை, என்று மிகக் கர்வமாகப் பேசியது. இதைக்கேட்ட அனுமனுக்கு மிகுந்த கோபம் ஏற்பட, கருடனைப் பிடித்துக் கொண்டு துவாரகை சென்றார்.
அனுமனின் ஆரவாரம் கண்டு துவாரகை மக்கள் நடுங்கினர். அப்போது அனுமனைத் தடுக்க சுதர்சனச் சக்கரம் விரைந்து வந்தது. அதையும் அனுமன் பிடித்துக் கொண்டார். அவரது பிடியில் இருந்து அவற்றால் அசையவே முடியவில்லை.இதை பகவான் பார்த்துக் கொண்டிருந்தார்.அருகில் இருந்த தம் மனைவிகளிடம், தேவியரே! அனுமன் கோபத்துடன் வருகிறான். அவன் எதிரில் சீதையுடன் ராமன் இருந்தால்தான் நல்லது. இல்லையெனில் அவன் இந்த துவாரகையையே கடலில் தூக்கி வீசிவிடுவான். அதனால் உங்களில் யாராவது சீதைபோல் வேடம் கொண்டு வாருங்கள். நான் ராமர் போல் வேடம் அணிகிறேன், என்றார். உடனே கிருஷ்ணர், ராமச்சந்திரமூர்த்தி வடிவம் கொண்டு நின்றார். ஆனால், அவருடைய தேவியர் எத்தனை முயன்றும் அவர்களில் ஒருவராலும் சீதையைப் போல் வடிவம் கொள்ள முடியவில்லை. பின் எல்லோரும் சேர்ந்து ராதையிடம் கூறினர். ராதை உடனே சீதைபோல் வடிவம் கொண்டாள். சீதையாக மாறிய ராதை பகவான் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். அனுமனும் அங்கு வந்து தான் வணங்கும் தம் இஷ்டதெய்வமான ராமச்சந்திர மூர்த்தியையும் சீதாதேவியையும் கண்டு மகிழ்ந்து, அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கிப் பணிந்து நின்றார்.
ராமர் வடிவில் இருந்த கிருஷ்ணர், ஏதும் அறியாதவர் போல அனுமனிடம் கருடனையும், சுதர்சனத்தையும் பிடித்து வைத்திருப்பதற்கான காரணத்தைக் கேட்டார்.அனுமன் நடந்ததைச் சொன்னார்.சுவாமி! தங்களுக்கு சவுகந்தி மலர்கள் தேவை என்றால் என்னிடம் சொல்லக்கூடாதா? பாவம் இந்தப் பறவை. மகா பலசாலியும், சிவபக்தனுமான யக்ஷனுக்குச் சொந்தமான ஏரியில் இருந்து மலர்களைக் கொண்டுவரக் கூடிய அத்தனை திறன் கொண்டதா என்ன? என்றார் அனுமன்.ஆஞ்சநேயா! பாவம் அவர்களை விட்டுவிடு. நீ இப்போது உன் இடத்திற்குச் சென்று ராமஜெபத்தைத் தொடர்வாய், என்றார் பரமாத்மா. ராமனின் கட்டளைக் கிணங்க அனுமன், கருடனுக்கும், சுதர்சனத்திற்கும் தம் பிடியில் இருந்து விடுதலை அளித்தார். ராமச்சந்திர மூர்த்தியையும் தேவியையும் வணங்கிவிட்டு, ராம், ராம், ஜெய் ராம், சீதாராம் என்று சொல்லிக்கொண்டே தம் இருப்பிடமான கந்தமான பர்வதம் நோக்கி பறந்துசென்றார்.கர்வம் கொண்ட கருடன், தன் திறமையில் பெருமை கொண்ட சுதர் சனச் சக்கரம், தங்களைவிட கிருஷ்ண பக்தைகள் யாருமில்லை இல்லை என்ற எண்ணம் கொண்டிருந்த கண்ணனின் மனைவிகள் ஆகியோரின் கர்வத்தை ஒரே சமயத்தில் பகவான் கிருஷ்ணர் அடக்கி அழித்தார்.