நந்தநாதன் என்ற திருடனுக்கு சில்லறை திருட்டுகளில் விருப்பமில்லை. ஒரே நாளில் பணக்காரனாக நினைத்தான். அப்போது அவனது சிந்தனையில் அரண்மனை கருவூலம் காட்சி தந்தது. அவனுடைய மூளை வேகமாக வேலை செய்தது. அதன் விளைவு... அன்றிரவு கருவூலத்திற்குள் புகுந்தான். அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப இயலவில்லை. ஏனெனில் ஏதோ ஒரு தங்கச் சுரங்கத்துக்குள் புகுந்தது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் பொன்னும், மணியும் குவிந்து கிடந்தது. ஆசை யாரை விட்டது? அங்கிருக்கும் அத்தனை செல்வத்தையும் அள்ளிச்செல்ல அவன் எண்ணினான். ஆனால் பாவம், எவ்வளவுதான் ஒருவனால் சுமக்க முடியும்? எனவே தன்னால் முடிந்த அளவு அங்கிருந்த பொருட்களில் உயர்வானவற்றை தேர்ந்தெடுத்து பெரும் பொதியாக கட்டினான். கருவூலத்திலிருந்து வெளியேறும்போது, காலில் ஏதோ ஒன்று குத்தியது போல இருந்தது. இருளில் அதை என்னவென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. ஏதாவது விலை உயர்ந்த மணியாகத்தான் இருக்கும் என எண்ணி அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். அவ்வளவுதான்! அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவனது தாயின் நினைவு வந்தது.
மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. பணமூட்டையை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு வெளியேறினான். மறுநாள் காலையில் கருவூல காவலர்கள் வந்தனர். கருவூலத்தில் அலங்கோலமாக சிதறிக்கிடக்கும் பொருட்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கருவூலத்திற்குள் கிடந்த பொதியை பிரித்துப் பார்த்தனர். பொன்னும், மணியும் இருந்தன. பின்னர் அதிகாரிகள் அங்கு வந்து கருவூல இருப்பை கணக்கு பார்த்தனர். எல்லாம் சரியாக இருந்தது கண்டு ஆச்சரியப்பட்டனர். ஆனாலும், விசாரணை துவங்கியது. கந்தநாதன் கைது செய்யப்பட்டான். அரசருக்கு இந்த தகவல் சென்றது. எதுவும் திருட்டு போகவில்லை என்றாலும் கூட திருட்டு முயற்சி நடந்துள்ளதால் அவர் கோபப்பட்டார். யாரையாவது கண்டுபிடித்தீர்களா? என அவர் அதிகாரிகளிடம் கேட்டார். அதிகாரிகள் கந்தநாதனை அவர் முன்பு நிறுத்தினர். கந்தநாதன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். அரசர் வியப்புடன், அப்படியானால் பொருட்களை ஏன் விட்டுச் சென்றாய்? காரணம் சொல், என்றார். கந்தநாதன் அழுதபடியே, அரசே! நான் பசிக்கொடுமையால் களவாடிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி களவு செய்வது எனது தொழில் அல்ல.
கருவூலத்தில் திருடினால் வறுமை நிரந்தரமாக நீங்கிவிடும் என எண்ணியே திருடினேன். ஆனால், நான் திருடிச் செல்லும் போது காலில் ஏதோ இடறவே, அதை எடுத்து வாயில் போட்டேன். வாயில் போட்ட பிறகுதான் அது உப்பு என தெரியவந்தது. உப்பில் லட்சுமிதேவி வாசம் செய்வதாகவும், அப்படிப்பட்ட சிறந்த தன்மை உடைய உப்பிட்டவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்றும் என் தாய் கூறியிருக்கிறாள். அவளது சொல்லுக்கு மரியாதை தரும் வகையில் அந்த பொருளை அங்கேயே போட்டுவிட்டேன், என்றான். அவனது பேச்சைக் கேட்டு அரசரே கண்கலங்கிவிட்டார். கந்த நாதனுக்கு அறிவுரை சொல்லி அவனை தனது மெய்க்காவலனாக நியமித்துக் கொண்டார். அவனுக்கு லட்சுமிதேவியின் அருளும் கிடைத்தது. விரைவில் அவன் ஒரு சிற்றரசனாகவே உயர்ந்துவிட்டான்.
குழந்தைகளுக்கு தாய்மார்கள் நல்லதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். என்றேனும் ஒருநாள் இந்த அறிவுரைகளை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள். ஒரு நல்ல விஷயத்தை அவர்கள் கருத்தில் எடுத்துக் கொண்டாலும் கூட நல்ல பாதைக்கு திரும்பி விடுவார்கள் என்பதையே கந்தநாதனின் கதை கூறுகிறது.