காஷ்யபர் பெரிய முனிவர். அவரிடம் ஏராளமான சீடர்கள் தவயோகம் பயின்று வந்தனர். ஒருநாள் காஷ்யபரின் விருந்தினராக திரிலோக மாமுனிவர் வந்தார். அவர் பலவிதமான சக்திமிக்க வரங்களைப் பெற்றிருந்தார். அன்று இரவு இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். திரிலோக மாமுனி தனக்குத் தெரிந்த அரிய மந்திரத்தைப் பற்றி காஷ்யபரிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அந்த மந்திரத்தை மன ஒருமைப்பாட்டுடன் நூறுமுறை உச்சாடனம் செய்தால் ஒரு மனிதன் என்ன நினைத்தாலும் நிறைவேறும் என்று கூறினார். அந்த மந்திரத்தை தனக்கும் உபதேசம் செய்யுமாறு காஷ்யபர் கேட்டுக் கேட்டுக் கொண்டார். திரிலோக முனிவரும் அந்த மந்திரத்தை காஷ்யபருக்கு உபதேசித்தார். காஷ்யபரின் சீடர்களில் கோணங்கி என்பவன் இருந்தான். தூக்கம் பிடிக்காமல் எழுந்த கோணங்கி, தனியறைக்குள் காஷ்யபரும், திரிலோக மாமுனியும் பேசிக் கொண்டதை தற்செயலாக ஒட்டுக் கேட்டான். அந்த மந்திரத்தை மனதில் பதித்துக் கொண்டான். உடனே இரவோடு இரவாக அந்த ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிட்டான்.
ஒரு காட்டின் மத்தியப்பகுதியை அடைந்த கோணங்கி தான் கற்ற மந்திரத்தை நூறு தடவை உச்சாடனம் செய்து, அந்த இடத்தில் அரண்மனை போன்ற ஒரு மாளிகை அமைய வேண்டும் என்று நினைத்தான். கண்மூடி திறப்பதற்குள் அந்த காட்டுப்பகுதிக்குள் ஒரு பெரிய மாளிகை அமைந்தது. கோணங்கி மாளிகையின் உள்ளே பிரவேசித்தான். அங்கே எல்லா விதமான வசதிகளும் இருந்தன. அருஞ்சுவை உணவு தயாரிக்கப்பட்டு சாப்பிடும் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. சாப்பிட்டதும், உறக்கம் அவன் கண்ணைச் சுழற்றியது.மலர்கள் பரப்பப்பெற்ற மென்மையான மஞ்சம் ஒன்று அங்கு இருந்தது. அந்த மலர் மஞ்சத்தில் படுத்தான். மாளிகையின் உட்புறத்தை ஒரு நோட்டமிட்டான். அந்த பிரமாண்டமான மாளிகையில் தன்னந்தனியாக இருப்பது அவனுக்கு அச்சத்தை விளைவித்தது.இவ்வளவு பிரமாண்டமான மாளிகையின் மீது திடீரென இடி விழுந்தால் என் கதி என்னவாகும் என்று தன்னையறியாமலே எண்ணிக்கொண்டான். அடுத்தகணம் ஒரு பெரிய இடி அந்தமாளிகை மீது இறங்கியது. அத்துடன் அது இடியத் துவங்கியது. ஐயையோ! நான் இறந்துவிடுவேன் போலிருக்கிறதே! மந்திரசக்திபடி நான் நினைப்பதெல்லாம் நடக்கிறதே, என கூச்சலிட்டான். அவன் நினைத்ததுபோலவே நடந்தும் விட்டது. மாளிகை முற்றிலுமாக இடிந்து, கோணங்கி அதில் புதைந்து இறந்தான். ஒட்டுக் கேட்பது தவறு.
சில சமயங்களில் நல்ல விஷயங்களைக் கேட்க நேர்ந்தாலும், தானும் பிறரும் நன்மையடையும் வகையில் நல்லதையே சிந்திக்க வேண்டும். எண்ணங்கள் தூய்மை யுடையதாக இருந்தால் சுற்றுப்புறம் தூய்மையடையும். இறைவனின் அருள் கிடைக்கும். மேலும், உழைப்பில்லாமலே சுகபோக வாழ்க்கை அமையவேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. முனிவர்கள் பேசிக்கொண்டது எதற்காக? தங்களிடம் உள்ள நச்சுப் புற்களை களையெடுப்பதற்காக. பெரியவர்கள் பேசும் போது, விலகிச்செல்ல வேண்டிய சீடன், அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்டதின் விளைவை அனுபவித்து விட்டான். காஷ்யபரோ, திரிலோக மாமுனிவரோ இதுபோன்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவே இல்லை. தங்களுக்கு மாடமாளிகை கூடகோபுரம் வேண்டுமென இறைவனிடம் கேட்கவும் இல்லை. தக்க சமயத்தில் மக்களுக்கு நன்மை செய்வதற்காக, இதுபோன்ற அரிய மந்திரங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
ஆசையை நிறைவேற்ற குறுக்கு வழியில் சென்றால் ஆபத்து என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.