தீலிபச் சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார். காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக் கொண்டிருந்த ஒரு ஆண் மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக் கண்ட பெண் மானும் ரிஷிபத்தினி வடிவமெடுத்து, அவர் மீது விழுந்து அழுதது. நிலைமை விபரீதமாகி விட்டதை உணர்ந்த மகாராஜா, அப்பெண்ணிடம் ஓடி வந்தார். அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகி தவிக்கிறேனே, என்றார். அதுகேட்ட ரிஷிபத்தினி, அரசே! நீ அறியாமல் செய்த தவறு மன்னிக்கக் கூடியதே. இருப்பினும், என் கணவர் இல்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன். என்னையும் கொன்று விடு, என்றாள். மன்னனின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. அவர் தன் குலகுருவான வசிஷ்டரை நினைத்தார். அவர் அங்கு தோன்றினார். அப்பெண் அவர் கால்களில் விழுந்து அழுது புலம்பினாள். என்ன நடந்ததென்று தெரியாத வசிஷ்டர், தீர்க்க சுமங்கலி பவ என வாழ்த்தினார்.
மாமுனிவரே! என் கணவர் இதோ இறந்து கிடக்கிறார். நீங்களோ தீர்க்க சுமங்கலியாய் வாழ வாழ்த்துகிறீர்கள். எப்படி இது சாத்தியமாகும்? என்றாள் ரிஷிபத்தினி. வசிஷ்டருக்கு நிலைமை புரிந்தது. தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்த பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியும் பொய்யாகக் கூடாது. அவர், அப்பெண்ணிடம், பெண்ணே! நீ காவிரிக்கரையில் உள்ள சிவாலயத்திற்கு செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து வந்து உடலில் தெளி. அவர் உயிர்பெற்று எழுவார். அத்தலத்தில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண், இறந்த தன் கணவரை பிழைக்க வைத்தாள். அவளது பெயரால் அத்தீர்த்தம் ஜல்லிகை தீர்த்தம் எனப்படுகிறது. மாங்கல்ய தீர்த்தம் என்றும் அதை வழங்குவர், என்றார். அப்பெண் மனம் மகிழ்ந்தாள். மன்னன் உடனடியாக பல்லக்கு தயார் செய்தான். அவனும் பல்லக்கை சுமந்து சென்றான். குறிப்பிட்ட இடத்தை அடைய 11 நாட்கள் ஆனது. காவிரிக்கரையில் வில்வமரங்கள் அடங்கிய பகுதியில் ஒரு சிவலிங்கம் சுயம்பாக எழுந்தருளியிருந்தது. அருகே தீர்த்தவல்லி அம்பிகை அழகே வடிவமாய் கல்யாண கோலத்தில் சிலையாய் நின்று கொண்டிருந்தாள்.
பல்லக்கை இறக்கி வைத்து விட்டு, ரிஷிபத்தினி காவிரியில் நீராடி, அம்பிகையின் அருகில் இருந்த மாங்கல்ய தீர்த்தத்தில் தீர்த்தம் எடுத்து தெளித்தாள். முனிவர் உயிர்பெற்றெழும் இந்த அற்புதக்காட்சியைக் காண தேவர்கள் வானில் கூடினர். வசிஷ்டர் சொன்னது போலவே நிகழ்ந்தது. முனிவர் உயிர் பெற்றெழுந்தார். தீர்த்தவல்லிதேவியின் அருளை எண்ணி அனைவரும் மனம் நெகிழ்ந்தனர். அம்பிகை அரசனுக்கும், முனிவர் மற்றும் ரிஷிபத்தினிக்கும் காட்சி தந்தாள். தேவர்களும் அவளை வணங்கினர். இத்தீர்த்தத்துக்கு வந்து தன்னை வணங்குவோர் தீர்க்க சுமங்கலியாய் இருப்பர் என அம்பிகை அருள்புரிந்தாள். ரிஷிபத்தினியும் முனிவரும், அரசனும் இதே தலத்தில் கோயில் கட்டி நீண்டகாலம் வாழ்ந்து சிவப்பதம் எய்தினர்.
இத்தலம் தான் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் ஆகும். இக்கதையை பக்தியுடன் படிப்போர் குடும்பத்தில் அகாலமரணம் நிகழாது. தம்பதி சமேதராய் இங்கு சென்று வாருங்கள்.