கணவன் மீது பக்தி கொண்ட பெண்கள் பெய்யென்றால் பெய்யும் மழை என்பார்கள். இதோ! சுந்தரவல்லியின் கதையைக் கேளுங்கள். சுந்தரவல்லியின் கணவன் சுந்தரன் முருகனின் பக்தன். சுந்தரவல்லி காலையில் எழுந்ததும் கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடங்குவாள். இவர்களுக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் என குழந்தைச் செல்வங்கள் பெருகின. வீட்டுக்கு விருந்தினர்கள் வேறு தினமும் வந்து சென்றனர். கருத்தொருமித்த தம்பதிகள் என்பதால், யார் தரப்பு உறவினர்கள் வந்தாலும், முகச்சுளிப்பின்றி உபசாரம் செய்தனர். ஆனால், ஐந்து பிள்ளைகளோடு, உறவுக்கும் சேர்த்து சாப்பாடு போட்டால், நிலைமை என்னாகும்? குடும்பத்தில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு புன்செய் நிலத்தை வாங்கினான் சுந்தரன். அதில் ஒரு மரம் இருந்தது. அம்மரத்தை வெட்டி நிலத்தைப் பண்படுத்தி, ஏதேனும் பயிர் செய்ய எண்ணினான் சுந்தரன். சுந்தரவல்லியும் அவனுமாய் இணைந்து மரத்தை வெட்டினர். அதில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது.
நில்லுங்கள்! இம்மரத்தில் நான் நீண்ட நாட்களாய் குடியிருக்கிறேன். இதை வெட்டினால், உங்களை கொல்வேன், என பயமுறுத்தியது. பதிபக்தியால் பழநி முருகனின் அருள் பெற்றிருந்த சுந்தரவல்லி கலங்கவில்லை. அவள் பூதத்திடம், ஊரில் எத்தனையோ மரங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றில் தங்கிக் கொள். போய் விடு. எங்கள் பிழைப்பைக் கெடுக்காதே, என்றாள். பூதம் மறுத்தது. பதிபக்தி கொண்ட அவள் தன் கணவனின் காலைக்கழுவி, மரத்தின் மீது தண்ணீரைத் தெளித்தாள். அவ்வளவு தான். மரம் சாய்ந்தது. பூதம் தானாக வெளியேறியது. இருப்பினும், இவர்களைப் பழிதீர்க்க எண்ணியிருந்தது பூதம். தம்பதியர் நிலத்தைப் பண்படுத்தி சோளம் பயிரிட்டனர். நன்கு விளைந்து வரும் வேளையில் பூதம் கடும் மழையை வரவழைத்தது. பயிர் தண்ணீரில் மூழ்கியது. சுந்தரன் கலங்கினான். சுந்தரவல்லி அவனை தேற்றி, அன்பரே! நம் பழனியாண்டவர் நம்மைக் காப்பார். இந்நிலத்தை அப்படியே உழ ஏற்பாடு செய்யுங்கள். தண்ணீருள்ள நிலம் நன்செய்யாக மாறும். நன்செய் நிலத்தில் நெல் நன்றாக விளையும். நெல் விளைந்தால் நமக்கு நல்ல லாபம் கிட்டும், என்றாள். மனைவி சொல்படியே கணவனும் செய்தான். நெல் செழித்து வளர்ந்தது. அதைப் பார்த்து பெருமைப்பட்டான் சுந்தரன். ஆனால், பாழாய் போன பூதம் மீண்டும் வந்தது.
ஏ சுந்தரா! நீ அறுவடை செய்யும் போது கட்டுக்கு இரண்டுபடி நெல்தான் தேறும், என சாபமிட்டது. கவலையில் இருந்த சுந்தரனை மனைவி தேற்றினாள். இதற்காக அஞ்சாதீர்கள். என் பதிபக்தி உண்மையானால், பழநி முருகன் நம்மைக் காப்பான். அறுவடை நடக்கட்டும், என்றாள். அறுவடை நடந்தது. கட்டுகளை கட்டும் கூலியாட்களை அழைத்த சுந்தரவல்லி, ஒரு கட்டுக்கு இரண்டு கதிர்களை மட்டும் வையுங்கள், என்றாள். கூலியாட்கள் அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா எனக்கருதினர். இருப்பினும் நில எஜமானியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டனர். கட்டுகள் களத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு கட்டையும் அடித்த போது, இரண்டு படி நெல் கிடைத்தது. இப்படியே, கட்டுக்கு இரண்டுபடி வீதம், ஏராளமான நெல் சேர்ந்து விட்டது. பூதத்தின் சாபம், பழநியாண்டவனின் அருளாலும், சுந்தரவல்லியின் பதிபக்தியாலும் ஏராளமாக நெல் கிடைக்க காரணமானது.
கணவன் மீது கொண்ட பாசம் பெண்களை வாழ வைக்கும். மனைவியின் சொல் கேட்டு நடப்பது ஆண்களை உயர வைக்கும். கருத்தொருமித்த தம்பதியராக வாழுங்கள். இருவீட்டு உறவினர்களையும் சமமாக நினையுங்கள். பழநியாண்டவனின் இன்னருள் உங்களுக்கும் கிடைக்கும்.