குஷன் என்ற தேவனுக்கும், ஹூண்டன் என்ற அசுரனுக்கும் கடும் பகை ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஒருமுறை கடும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஹூண்டனை நகுஷன் கொன்றுவிட்டான். தன் தந்தையைக் கொன்ற நகுஷனையும், அவனது தேவகுலத்தையும் அழிக்க ஹூண்டனின் மகன் விஹூண்டன் சபதம் செய்தான். விஹூண்டன் கொடூரமானவன். அவனைக் கண்டு தேவகுலமே நடுங்கியது. தேவர்கள் திருமாலை அணுகி தங்களைப் பாதுகாக்க வேண்டினர். திருமால் நினைத்தால் மறையும் தன்மையுடைய ஒரு அழகியை, விஹூண்டனை அழிப்பதற்காக அனுப்பி வைத்தார். அவளைப் பார்த்ததும் விஹூண்டன் காதல் கொண்டான். அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். காமோதரம் என்ற மலரைப் பறித்து வந்து யார் என் தலையில் சூடுகிறார்களோ, அவரே என்னைத் திருமணம் செய்ய முடியும் என சொல்லி விட்டாள்.
அந்த அசுரனும் அம்மலர் பற்றி விசாரித்தான். தங்களுக்கு பிச்சி, முல்லை, கனகாம்பரம், ரோஜா போன்ற மலர்கள் தான் தெரியுமென்றும். காமோதரம் என்றால் என்னவென்றே தெரியாது என்று பலரும் சொல்லி விட்டனர். விஹூண்டன் தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் அது பற்றி கேட்டான். அவர் அவனிடம், அடே! அந்த மலர் செடியில் பூப்பதல்ல. ஒரு பெண்ணின் சிரிப்பிலும், அழுகையிலும் பூப்பது. அந்த பெண்ணின் பெயர் காமேதாகா. அவள் யார் தெரியுமா? திருமாலின் பத்தினியான துளசியே அவள். அவள் சிரித்தால் பூக்கள் உதிரும். அதையே நீ எந்தச் செயலுக்கும் எடுக்க வேண்டும். அழுதால் கண்ணீரில் இருந்து விழும் பூக்களை பயன்படுத்தினால், எந்த காரியத்துக்காக பயன்படுத்தினாலும் துன்பமும், நஷ்டமும் உண்டாகும். அது கிடைக்க வேண்டுமானால், நீ சிவனை நினைத்து கடும் தவமிருந்தாக வேண்டும். அம்மலரைக் கொண்டே அவருக்கு ஒருமுறை பூஜையும் செய்ய வேண்டும், என்றார். விஹூண்டன் விடாக்கண்டன். அவன் தவமெல்லாம் இருக்கவில்லை. நேரே கைலாயத்துக்கு போய் சிவனை நேரில் பார்த்து அந்த மலரைப் பெற்று விட எண்ணி கைலாயத்தையும் நெருங்கி விட்டான். அப்போது ஒரு முனிவர் வந்தார். அவர் மீது கவனியாமல் விஹூண்டன் மோதி விட்டான். அவர் அந்த அசுரனிடம், எதிரே ஆள் வருவது கூட தெரியாமல், இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்? என்றார்.
தன் குறிக்கோளைச் சொன்னான் விஹூண்டன். விஹூண்டா! நீ நினைப்பது போல் அந்த மலரைக் கொண்டு சிவனுக்கு பூஜை செய்ய முடியாது. ஏனெனில், திருமாலுக்குரிய துளசியை, சிவன் ஏற்கமாட்டார், என்றார் முனிவர். அப்படியானால், நான் அந்த மலர்களை எப்படித்தான் பறிப்பது? என்றான் அசுரன். அதற்கு முனிவர், காமோதா என்ற அந்தப் பெண் ஆண்டில் ஒருநாள் கங்கைக்கு வருவாள். இன்று முழுவதும் அவள் உதிர்க்கும் மலர்களே கங்கையில் மிதந்து வரும். அவற்றை எடுத்து கட்டி சிவார்ச்சனை செய்த பிறகு, பின் உன் காதலியின் தலையில் சூடு, என்றார். பின்னர் காமோதாவிடம் சென்று, உன் கணவர் திருமால், பத்து அவதாரங்கள் எடுப்பதற்காக வேறு லோகங்களுக்கு போய் விட்டார். உன்னைத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டார், என்றார். இதைக் கேட்டதும் திருமாலின் பிரிவு தாங்காமல், துளசி அழுதாள். கங்கைக்கு வந்தாள். அவளது கண்ணீர் பூக்கள் கங்கையில் மிதந்து வந்தன. அவற்றைப் பொறுக்கி மாலை கட்டிய அசுரனின் ஆசை நிறைவேறவில்லை. மேலும் கண்ணீர் பூக்களால் நாசம் ஏற்படும் என்ற விதிப்படி, அந்த அசுரன் தலைவெடித்து இறந்தான். நல்ல விஷயங்களுக்காகவே கடவுளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். கெட்டவை நிறைவேற கோரிக்கை வைத்தால் ஹூண்டனின் கதிதான் ஏற்படும்.