சத்தியவதிக்கு குழந்தை இல்லாத பெருங்குறை மனதை வாட்டியது. அந்த முருகபக்தை கந்தனிடம் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். கந்தன் என்னவோ இவள் முகத்திலேயே விழிக்க விரும்பாதவன் போல அமைதியாக இருந்தான். ஒருநாள் சஷ்டி விரதம். காலையிலேயே நீராடி, சஷ்டி கவசம் பாடிக் கொண்டிருந்தாள் சத்தியவதி. அவளது மாமியார் காமாட்சி பூஜையறைக்குள் வந்தாள். மலட்டு நாயே! நேற்றே உன்னிடம் என்ன சொன்னேன்! குழந்தை இல்லா குறை போக்கும் வைத்தியர் ஒருவர் நம் ஊருக்கு வருகிறார். அவரிடம் போய் வைத்தியம் பார் என்று சொன்னேன். நீ இங்கே உட்கார்ந்து முருகா...முருகா என அழுது கொண்டிருக்கிறாய். பன்றியே! அந்த முருகன் என்ன மயில் மீது பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டா வரப்போகிறான். உடனே கிளம்புடி, என்றாள் மனம் புண்படும் வகையில். இந்த வசைமாரியைக் கண்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தாள் சத்தியவதி. அவள் கணவன் வெளியூர் சென்றிருந்தான். யாரிடம் சொல்லி அழ! அத்தை,ஏன் இப்படி பேசுகிறீர்கள்? நான் தினமும் அந்த முருகனை வணங்குகிறேன். அவன் ஏனோ கண்ணை மூடிக் கொண்டிருக்கிறான்.
உங்கள் பிள்ளையும் வணிகத்திற்காக வெளியூர் போயுள்ளார். அவர் வரட்டும். அவரைக் கலந்து செய்கிறேன், என்றாள். அப்படியானால் என் சொல்லைக் கேட்க மாட்டயா? என்றவள் அருகில் கிடந்த துடைப்பத்தை எடுத்து மருமகளை அடிக்க ஓங்கினாள். சீறிவிட்டாள் சத்தியவதி. அத்தை! இப்படி செய்தால் நான் புலியாகி விடுவேன். போனால் போகட்டும் என்று பார்த்தால் ஒரேயடியாக துள்ளிக் குதிக்கிறீர்களே! குழந்தை இல்லை என்றால் குறை என்னிடம் மட்டும் தானா? அல்லது உங்கள் மகனிடமும் உள்ளதா என்பதை வைத்தியர் பரிசோதிக்க வேண்டும். அவர் வரட்டும். நாங்கள் சேர்ந்தே செல்வோம். உங்கள் மகன் என்னிடம் இதுபற்றி ஏற்கனவே பேசியுள்ளார். யாருக்கு குறை என்பதை அறிய ஏற்கனவே ஒரு திட்டம் வைத்துள்ளோம். இங்கேயிருந்து சென்று விடுங்கள். எந்த மருத்துவராலும் முடியாததை இந்த கந்த மருத்துவன் செய்தே தீருவான். என்று பொரிந்து தள்ளி விட்டாள். அநியாயம் செய்யும் மாமியார்கள் கொஞ்சமாவது வாய் திறந்தால் தான் அடங்குவார்கள். இவளும் அடங்கிப்போய் விட்டாள். மகன் வந்ததும் வராததுமாக பற்ற வைத்தாள். ஏம்மா! இப்படி அநியாயம் பண்றே! நான் இப்பத்தான் நாலு ஊரு சுத்திட்டு தேமேனு வரேன். அசதி எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பிள்ளையும் வேண்டாம், கொள்ளியும் வேண்டாம். போ வெளியே! என்னை ஓய்வெடுக்க விடு, என்று விரட்டியடித்தான்.
தன் பருப்பு வேகாதததால் அவள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மகள் வீட்டுக்குப் போய் விட்டாள். கணவனை ஆசுவாசப்படுத்திய சத்தியவதி, அவனிடம், அன்பரே! தங்கள் தாய் மீது கோபிக்காதீர்கள். அவர் என்னை துடைப்பம் எடுத்து அடிக்க வந்த போது கூட சற்றே கடிந்தேனே தவிர வேறெதுவும் சொல்லவில்லை. வாருங்கள். நோய்க்கும் பார் பேய்க்கும் பார் என்பது எங்கள் கிராமத்து பழமொழி. நாம் மருத்துவரைப் பார்ப்போம். பின்னர் வேண்டியதைச் செய்வோம், என்றாள். மருத்துவர் சோதித்து விட்டு முகுந்தனுக்கே கோளாறு உள்ளது என்றார். ஊரில் இருந்து ஒடிந்த காலுடன் திரும்பிய மாமியார் காமாட்சி மருமகள் முகத்தில் விழிக்கவே வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொண்டாள். தனக்கு வந்தால் தானே தலைவலி தெரியும்! மகனிடம் குறை இருக்கிறது என்பதால் அவளும் சஷ்டி விரதம் இருக்கத் துவங்கினாள். சத்தியவதி! உனக்கு ஒரு குறை இருப்பதற்காக நான் கடிந்து கொண்டேன். மகள் வீட்டில் பரணில் ஏறிய நான் கீழே விழுந்து காலை இழந்து விட்டேன். பிறரைக் குறை கூறினால் அடுத்த கணமே மற்றொரு குறை நம்மைத் தேடி வரும் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடு, என்றாள். சில நாட்களில் கந்தனின் கருணையால் முகுந்தனின் குறை அகன்றது.