போதி சத்துவ நாகார்ஜூனர் என்ற துறவி கல்வி கேள்விகளில் சிறந்து, ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்.அவரது காலத்தில் போதிசத்துவ தேவர் என்ற துறவியும் இருந்தார். அவர் நாகார்ஜூனரின் பெருமைகளைப் பற்றி கேள்விப்பட்டார். பல மாதங்கள் பயணம் செய்த அவர் நாகார்ச்சுனரின் மடத்தை அடைந்தார். வாயிலில் நின்றிருந்த சீடன் ஒருவன், ஐயா! நீங்கள் யார்? எதற்காக எங்கள் குருவைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்? என்று பணிவுடன் கேட்டான். உங்கள் குரு அறிவுக்கடல் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்தித்து உரையாட ஆவல் கொண்டுள்ளேன். அதற்காக ஆயிரம் கல் தூரம் நடந்து வந்துள்ளேன். வழியில் நான் சந்தித்த துன்பங்கள் ஏராளம், என்றார் அவர். உள்ளே சென்ற சீடன், குருவிடம் அவர் சொன்னதை அப்படியே சொன்னான். அதைக்கேட்ட நாகார்ஜூனர் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரை நிரப்பினார். இதை அவரிடம் கொடுத்துவிட்டு வா என்றார்.
பாத்திரத்தை எடுத்துச்சென்று தேவரிடம் நீட்டினான் சேவகன். ஆனால், போதி சத்துவர் பாத்திரத்தை வாங்கவில்லை. தன்னிடமிருந்த ஒரு ஊசியை தண்ணீருக்குள் அதைப் போட்டார். ஊசி தண்ணீருக்குள் மூழ்கியது. இதை உங்கள் குருவிடம் கொண்டு போய்க்கொடு என்றார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. குருவிடம் திரும்பி வந்தான். தண்ணீருக்குள் ஊசி கிடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார் நாகார்ஜூர். சீடர்கள் ஒன்றும் புரியாமல் ஆச்சரியமாய் பார்த்தனர். அவர்களிடம் நாகார்ஜூனர், சீடர்களே! நம் மடத்திற்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் அவர். அவரின் வருகையால் நம் மடம் பெருமை பெறப்போகிறது. அவரை மரியாதையுடன் அழைத்து வாருங்கள் என்றார். குடிப்பதற்கு தண்ணீர் அனுப்பினால் அதில் ஊசியையா போட்டு அனுப்புவது? அதற்கு ஏன் நம் குரு இவ்வளவு மகிழ்ச்சியடைகிறார்? என்று குழம்பினார்கள் சீடர்கள். உங்கள் இருவரின் செயலும் எங்களுக்கு விளங்கவில்லை. குழப்பமாக உள்ளது என்றனர். அதற்கு நாகார்ஜூனர், சீடர்களே! நான் பாத்திரத்தில் தண்ணீர் அனுப்பினேன்.
என் ஞானம் இந்த பாத்திரத்தில் உள்ள அளவுதான். இதை தெரிந்து கொள்வதற்காகவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்துள்ளீர்கள் என்று அவரைக் கேட்டேன். புனிதமான அந்தத்துறவி என் கேள்வியினைப் புரிந்துகொண்டார். அந்த தண்ணீரில் ஊசியைப் போட்டார். அது தண்ணீரில் மூழ்கி பாத்திரத்தின் அடிப்பகுதிக்கு வந்தது. என் ஞானம் இந்த ஊசியின் அளவுதான். கடல்போன்ற உங்கள் ஞானத்தின் ஆழத்திற்குச் சென்று முழுமையாக அறிந்துகொள்ள முயற்சி செய்வேன் என்று பதில் அனுப்பி உள்ளார். சீடர்களே! நீங்கள் எத்தனையோ ஆண்டுகள் என்னுடன் உள்ளீர்கள். என் செயல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு தெரியும். நான் தண்ணீரை அனுப்பியதன் பொருளை உங்களில் யாருமே அறிந்து கொள்ளவில்லையே. ஆனால், அந்த துறவியோ முதன் முறையிலேயே என் கருத்தை புரிந்துகொண்டார். ஞானம் உடையவர்களாக இருப்பதற்கும், இல்லாமல் இருப்பதற்கும் இதுதான் வேறுபாடு என்றார்.
நாலு எழுத்து படித்தவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தக்காலத்தில், நம் நாட்டு மகான்கள் எவ்வளவு அடக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள்.