ஒரு பால்காரி இருந்தாள். அவள் தினமும் ஆற்றின் மறுகரையில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஒரு குருவுக்கு பால் கொடுத்து வந்தாள். தினமும் அவள் சமயத்துக்கு ஆற்றங்கரைக்கு வந்து விட்டாலும், ஓடக்காரன் தாமதமாகத்தான் வருவான். இதனால், இவளால் உரிய நேரத்துக்கு பால் கொண்டு போக முடியவில்லை. ஒருநாள் குரு பால்காரியிடம் கடுமையாகக் கடிந்து கொண்டார். நான் என்ன செய்யட்டும் சாமி! படகுக்காரன் தாமதமா வர்றான். அதனாலே தாமதமாகுது, என்றாள். அட பைத்தியக்காரி! சக்தி வாய்ந்த கடவுளை மனசுல நினைச்சுகிட்டு ஆற்றைக் கடந்து வா. நேரத்துக்கு வந்துடுவே, என்றார் குரு. பால்காரிக்கு அவள் கொண்டு வரும் பால்போலவே கள்ளமில்லாத வெள்ளை மனசு. மறுநாள் அவள் கடவுளை மனதில் நினைத்தாள். கடவுளே! என்னை அக்கறையில் சேரும், என்றாள். ஆற்றில் இறங்கினாள். என்ன ஆச்சரியம்! புடவை கூட நனையாமல், அக்கரையை அடைந்து விட்டாள். இப்படியே தினமும் நடந்தது.
ஒருநாள் குரு, பால்காரி! தினமும் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னாலேயே வந்துடுறே! படகையும் காணலே. எப்படி வர்றே!என்றார். நீங்க சொன்ன மாதிரி தான் சாமி, என்றவள் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். குரு அசந்து விட்டார். இது எப்படி சாத்தியம்? என நினைத்தபடியே தண்ணீரில் அவர் இறங்கிய போது, தொபுக்கென உள்ளே விழுந்தார். பின்னால் திரும்பிய பால்காரி, சாமி! நீங்க தண்ணிக்குள்ளே இறங்கும் போது வேற சிந்தனையிலே இருந்தீங்களா! நான் நீங்க சொன்ன மாதிரி கடவுளை நினைச்சுகிட்டே நடக்கிறேன். நீங்களும் அந்தக் கடவுளை நினைச்சுகிட்டே வாங்க! ஆத்தைக் கடந்துடலாம், என்றாள்.
ஊருக்கு உபதேசம் செய்பவர்களே! நீங்கள் பிறருக்கு புத்தி சொன்னால் போதாது. முதலில் நீங்கள் அதைக் கடைபிடியுங்கள்.