பரத்வாஜ முனிவருக்கு ரைப்யர் என்ற முனிவர் நண்பராக இருந்தார். இவருக்கு அர்வாவசு, பராவசு என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் நன்றாகப் படிப்பார்கள். வேதத்தின் எந்தப் பகுதியை ஒப்புவிக்கச் சொன்னாலும், பொருள் கேட்டாலும் கடகடவென சொல்லிவிடுவார்கள். பரத்வாஜருக்கு யவக்கிரீதன் என்ற மகன் இருந்தான். இவனும், ரைப்யரின் மகன்கள் படிக்கும் குருகுலத்திலேயே படித்தான். அவர்களைக் கண்டாலே யவக்கிரீதனுக்கு பிடிக்காது. இந்தப் பயல்கள் நம்மை விட...ஏன் நம் தந்தையை விட உயர்வாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களை எப்படியாவது நாம் வென்றாக வேண்டும், என்று பொறாமை கொண்டான். இந்திரனை நோக்கி தவமிருந்தான். கடும் தவம். வானலோகமே உருகி விட்டது. இவனது தவத்தின் வெப்பம் தாங்காமல்! இந்திரன் பயந்து போய் வந்து நின்றான். பக்தா! இவ்வளவு கடும் தவம் செய்கிறாயே! என்ன வேண்டும்! தங்கம், வைரம் ஏதாச்சும் வேணுமா! என்றான். ஊஹூம்...எனக்கு படிக்காமலேயே வேதம் வர வேண்டும். வேதத்தை விட உயர்ந்த படிப்பு ஏதாவது இருந்தால் அதுவும் வர வேண்டும், என்றான்.
இந்திரன் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான். தம்பி! படிக்காமல் அறிவு யாருக்கும் வராது. நீ தவம் செய்த இந்தக்காலத்தில் கண்விழித்து ஒழுங்காகப் படித்திருந்தால், அது தானாக வந்திருக்குமே, என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டான். தன் தவம் வீணாகிப்போன கவலையுடன், ஆற்றங்கரையில் உலவிக்கொண்டிருந்தான் யவக்கிரீதன். கரையில் இருந்த ஒரு பெரியவர், ஆற்றுக்குள் மணலை அள்ளிவீசிக் கொண்டிருந்தார். யவக்கிரீதன் அவரிடம் அப்படி செய்வதற்கான காரணத்தைக் கேட்டான். மணலை வீசி ஆற்றுக்குள் அணை கட்டுகிறேன், என்றார் பெரியவர். ஓய்! முட்டாள் கூட இப்படி செய்யமாட்டான். இவ்வளவு பெரிய மனிதர் இப்படி செய்கிறீரே! என்றதும், தம்பி! நீ மட்டும் படிக்காமலே வேதாந்தியாக நினைக்கும் போது, நான் செய்வது மட்டும் நடக்காதோ என்றார். அவன் அதிர்ச்சியுடன் அவரை ஏறிட்ட போது, பெரியவர் இந்திரனாக மாறி வானலோகம் நோக்கி புறப்பட்டார்.