முன்னொரு காலத்தில் ரைப்யரிஷி என்ற மகரிஷி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பராவசு, அர்வாவசு என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே குருவிடம் முறையாக கல்வி பயின்றவர்கள். அண்ணன் பராவசு சுயநலகுணம் கொண்டவனாகவும், தம்பி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளவனாகவும் இருந்தான். அண்ணனின் குணத்தை அறிந்திருந்த அர்வாவசு அவனது கெட்ட குணத்தை விடும்படி சொல்லியும் அவன் கேட்கவில்லை. ஒருசமயம் பிருஹத்யும்னன் என்ற மன்னன் யாகம் ஒன்றை நடத்த விரும்பினான். அவனது யாகத்தை நடத்த பராவசு, அர்வாவசு இருவரும் சென்றனர். யாகம் நடந்தபோது, பராவசுவிற்கு தன் மனைவியின் ஞாபகம் வந்தது. அவன் யாருக்கும் தெரியாமல், யாகசாலையை விட்டு வெளியேறி வீட்டிற்கு சென்றான்.
வழியில் ஓரிடத்தில் புதரில் இருந்து சத்தம் கேட்கவே, ஏதோ மிருகம் வருகிறது என்றெண்ணி பயந்த அவன், அருகில் கிடந்த ஒரு ஆயுதத்தை எடுத்து வீசினான். அப்போது அவனது தந்தை ரைப்யரிஷியின் அலறல் சத்தம் கேட்டது. பராவசு அருகில் சென்ற பார்த்தபோது, அப்பா இறந்து கிடந்ததைக் கண்டான். கலங்கிய பராவசு, அவரை அடக்கம் செய்துவிட்டு, யாகசாலைக்கு திரும்பி தன் தம்பியிடம் நடந்தவற்றைக் கூறினான். மேலும், தந்தையை கொன்ற தோஷத்தில் இருந்து விடுபட தனக்கு பரிகார பூஜை செய்யும்படி கேட்டுக்கொண்டான். அவனுக்காக அர்வாவசு பரிகார பூஜை செய்ய சென்றான். பராவசு, நடந்ததை மறைத்து விட்டு, யாகத்தை தொடர்ந்து நடத்தினான். யாகம் பல மாதங்களாக தொடர்ந்து நடந்தது. இதனிடையே, அண்ணனுக்காக பரிகார பூஜைகளை முடித்த அர்வாவசு மீண்டும் யாகசாலைக்கு திரும்பினான். தன் பூஜையின் பலனால், முன்பைவிட மேலும் பொலிவு பெற்றவனாக இருந்தான். அவனது நிலைகண்டு பொறாமைப்பட்ட பராவசு, தன் தம்பி அர்வாவசு யாகத்தில் கலந்து கொண்டால் தனக்கு முக்கியத்துவம் இல்லாது போகும் என்று கருதி அவனை வெளியேற்ற திட்ட மிட்டான்.
அவன் யாகசாலைக்குள் நுழையும்வேளையில், அவனை தடுத்து நிறுத்திய பராவசு, ஒரு உயிரைக் கொன்று, பிரம்மஹத்தி தோஷம் பிடித்த இவன் யாகசாலைக்குள் நுழைய தகுதி இல்லாதவன் என்று உரக்கச் சொன்னான். அதைக்கேட்ட மன்னர் உட்பட அனைவரும் திடுக்கிட்டனர். மன்னர் விபரம் கேட்க, தங்களைப் பெற்ற தந்தையையே கொன்ற பாவி இவன் என்று பொய் சொன்னான்.அதைக்கேட்டு கோபம்கொண்ட மன்னன், அர்வாவசுவை நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டான். அர்வாவசு புன்னகை மாறாத முகத்துடன் நாட்டைவிட்டு கிளம்பினான். காட்டிற்கு சென்று தவவாழ்க்கை மேற்கொண்டான். அவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அவனுக்கு காட்சி தந்து, என்ன வரம் வேண்டும்? என்றார். அவரிடம் அர்வாவசு, தன் தந்தை மீண்டும் உயிர் பெற வேண்டும். அண்ணன் பராவசு தீய குணங்களை விடுத்து நல்லவனாக மாறவேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரங்களைக் கொடுத்தருளினார். தன் சுயநல குணம் மறையப்பெற்ற பராவசு, தன் தம்பியிடம்மன்னிப்பு கேட்டான். பின்இருவரும் தங்கள் தந்தையுடன் நீண்ட காலம் இறைப்பணியில் ஈடுபட்டு நற்செயல்கள் செய்தனர்.
யாரை வேண்டுமானாலும் மன்னிக்கலாம், துரோகியை மன்னிக்க கூடாது என்பார்கள். ஆனால், தனக்கு துரோகம் செய்த அண்ணனையும் மன்னித்தான் இந்த தம்பி. பொறுமை கடலினும் பெரிது.