சாப்புக்கடை நடத்தும் ஒருவர், தன் விலைக்கு வாங்கி வந்த பசுவை வெட்ட முற்பட்டார். அப்போது அது அவர் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டது. கடைக்காரன், அதைத்தேடி வந்த போது, ஒருவர் கோயில் முன்பு நின்று கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார். அவரிடம், இங்கே ஒரு பசு கடந்து சென்றதா? என்றார். அவர், ஆம்...அந்தப்பக்கமாகச் சென்றது, என அது சென்ற திசையை நோக்கி கையை நீட்டினார். அவர் காட்டிய திசையில் சென்ற கடைக்காரர், பசுவைக் கண்டுபிடித்து வெட்டி விற்றுவிட்டார். கோயில் முன்பு நின்றவர் இப்பிறவியில் பெரும் கிருஷ்ண பக்தராக விளங்கினார். தன்னை கிருஷ்ணனின் நண்பனாகப் பாவித்து, குசேலர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஒருநாள் அவருக்கு குருவாயூரப்பனை தரிசிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அவரது ஊரில் இருந்து பல மைல் தொலைவில் இருந்த குருவாயூருக்கு நடந்தே சென்றார். செல்லும் வழியெல்லாம், பிச்சை எடுத்து சாப்பிட்டபடி, ஆங்காங்கே இருக்கும் வீட்டுத்திண்ணைகளில் இரவுப் பொழுதைக் கழித்து விட்டு செல்வார்.
ஒருநாள், ஒரு சிறுநகரத்திலுள்ள வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். நள்ளிரவில், அவ்வீட்டுப்பெண் ஏதோ வேலையாக, கதவைத் திறந்து கொண்டு வந்தாள். திண்ணையில் படுத்திருந்தவரை விளக்கை உயர்த்திப் பார்த்தாள். மிகுந்த பேரழகுடன் அந்த பக்தர் உறங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அவர் மீது காதல் கொண்டுவிட்டாள் அப்பெண். அவளது கணவன் அழகு என்ற சொல்லில் இருந்து காததூரம் விலகியிருந்தவன். அழகற்ற ஒருவன் தனக்கு கணவனாக வாய்த்து விட்டானே என பொருமிக் கொண்டிருந்த அவள், பக்தரின் பேரழகு கண்டு வியந்தாள். பெண்ணழகுக்கு மயங்காத ஆணுமுண்டோ? என்ற கர்வத்தில் அவரருகே சென்று எழுப்பி, தன்னை எங்காவது கூட்டிப்போய் வாழும்படி சொன்னாள். குசேலர் எவ்வளவோ புத்தி சொன்னார். கேட்கவில்லை அவள். உன் கணவன் உயிரோடு இருக்கும்போது, நீ இப்படி நடப்பது அழகல்ல, என கூறினார். அவ்வளவுதானே, என்றவள் வீட்டுக்குள் சென்று, உறங்கிக் கொண்டிருந்த கணவனை வெட்டிக் கொன்றாள். குசேலர் அதிர்ந்தார். இப்போது உமக்கு ஆட்சேபமில்லையே, இனி நீர் என் வீட்டிலேயே தங்கலாம், என்றாள். அவர் மறுக்க...அவள் வற்புறுத்த... எதுவும் நடக்காமல் ஏமாந்த அப்பெண் தன் குரூர புத்தியைக் காட்டினாள். பெரும் சப்தம் போட்டு ஊரைக்கூட்டினாள்.
காற்றுக்காக வீட்டை திறந்து போட்டு படுத்திருந்தேன். இவன் வீட்டில் புகுந்து, என்னைக் கெடுக்க முயன்றான். தடுக்க வந்த என் கணவனைக் கொன்று விட்டான், என்றாள். அவரைப் பிடித்த பொதுமக்கள் மன்னனிடம் ஒப்படைத்தனர். பெண்ணைக் கெடுக்க முயன்ற அவனது கைகளை வெட்டி வீழ்த்த அரசன் உத்தரவிட்டான். கையை இழந்த குசேலர் அங்கிருந்து குருவாயூர் புறப்பட்டார். கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய கண்ணன், என் பக்தன் வருகிறான். அவனை நீங்கள் நேரில் சென்று அழைத்து வாருங்கள், என்று அவரது அடையாளங்களைச் சொன்னான். அதன்படி அர்ச்சகர் பரிவாரங்களுடன் சென்று குசேலரை வரவேற்றார். ஆச்சரியப்பட்ட குசேலர் சன்னதிக்கு வந்து, கண்ணா! இப்போது என்னை வரவேற்கும் நீ, செய்யாத குற்றத்திற்காக கையை இழக்க வைத்தாயே. நான் என்ன பாவம் செய்தேன்? என்றார். அங்கு தோன்றிய கண்ணன், குசேலரே! சென்ற பிறவியில் ஒரு பசுவைக் கொல்ல நீர் கை காட்டி வழி காண்பித்தீர். அந்த பசுவே அப்பெண்ணாக பிறந்து, உம் மீது பழிபோட்டது. அந்த கசாப்புக்கடைக்காரனே அவளது கணவன். தெரிந்து செய்தால் மட்டுமல்ல, தெரியாமல் செய்தாலும் பாவத்திற்கு தண்டனை உண்டு, என்றார்.
உதவி செய்யும் போது கூட தகுதியறிந்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை தான் கிடைக்கும்.