ஒரு அந்தணரும் அவரது மனைவியும் தங்கள் இரண்டு வயது குழந்தையுடன் காட்டுப்பாதையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் களைப்பாய் இருக்கவே, தாகசாந்தி செய்ய எண்ணினர். அந்தணர், மனைவியை குழந்தையுடன் ஒரு மரத்தடியில் அமர வைத்தார். அவள் களைப்பில் மரத்தடியில் படுத்தாள். கூஜாவுடன் அருகில் தெரிந்த நீரோடையை நோக்கிச் சென்றார்.அந்த மரத்தின் மீது யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு கிளைகளிடையே தங்கி நின்றது. சற்றுநேரத்தில் காற்றடிக்கவே, கிளையில் தொக்கி நின்ற அம்பு படுத்திருந்த அந்தப் பெண்ணின் வயிற்றில் தைத்தது. அது விஷம் தோய்ந்த அம்பு. விஷம் உடலில் பரவி அவள் இறந்தாள். அப்போது அங்கே ஒரு வேடன் வந்தான். ஒரு பெண் இறந்து கிடப்பதையும், அருகில் அவளது குழந்தை அழுது கொண்டிருப்பதையும் பார்த்தான். இதற்குள் அந்தணரும் வந்து விடவே, வயிற்றில் அம்பு தைத்து இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.அருகில் நின்ற வேடன் மீது சந்தேகம் கொண்டு, என்ன நோக்கிலடா என் மனைவியைக் கொன்றாய்? நீ வேட்டைக்காரனா? அல்லது காமுக நோக்குடன் இப்படி செய்தாயா? நீ நல்லவன் என்றால், கடவுளின் மீது சத்தியமாக இங்கிருந்து ஓடக்கூடாது. என்னோடு உன் ஊர் மன்னனைக் காணவா! அவன் தீர்ப்பளிக்கட்டும், என்றார்.வேடன் கெஞ்சினான்.அந்தணரே! உமது மனைவியை நான் கொல்லவில்லை.
நான் ஏதுமறியாதவன். உமது மனைவியின் இறப்புக்கு காரணமும் எனக்குத் தெரியாது, என கெஞ்சினான்.அவனை நம்பாத அந்தணர், மனைவியின் உடலை தோளிலும், ஒரு கையில் குழந்தையுடனும் அரண்மனைக்கு வந்தார். மன்னனிடம் புகார் சொன்னார்.வேடன் மன்னனிடம், தான் ஏதுமறியாதவன் என புலம்பித் தீர்த்தான். அவனை சேவகர்கள் அடித்தும் மிரட்டியும் பார்த்தன். மன்னா!என்னைக் கொல்லுங்கள். வேண்டாம் என சொல்ல வில்லை. ஆனால், நான் சாகும் முன் உண்மை செத்துவிடக்கூடாது, என்றான்.மன்னன் அவனை சிறையில்அடைத்து விட்டு, அந்தணரிடம், உம் மனைவியின் ஈமக்கிரியையை முடித்து விட்டு நாளை வரும், என சொல்லிவிட்டான்.மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று, சுந்தரேஸ்வரா! தவறான தீர்ப்பை நான் வழங்கி விடக்கூடாது. அதற்கு நீயே அருள் செய்ய வேண்டுமென பிரார்த்தித்தான். அன்றிரவு கனவில் வந்த சுந்தரேஸ்வரர், மன்னா! நீ நாளை மாசிவீதியிலுள்ள மண்டபத்தில் நடக்கும் திருமணத்துக்கு செல். உண்மை தெரியும், என்றார்.மறுநாள் மன்னனும் அந்தணரும் மாறுவேடத்தில் அங்கு சென்றனர்.அப்போது சமையலறையில் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால், பேசுபவர்களின் உருவம் தெரியவில்லை.
தூதனே! நம் எமதர்ம மகாராஜா, இந்த மண்டபத்தில் திருமணம் செய்யப்போகும் மணமகனின் உயிரைப் பறிக்க உத்தரவிட்டுள்ளார்.இவனோ மணமேடையில் ஆரோக்கியத்துடனும், உறவினர்கள் புடைசூழவும் இருக்கிறான். என்ன செய்வது? என்றது ஒரு குரல். மற்றொரு குரல், தூதர் தலைவரே! கவலை வேண்டாம். நேற்று காட்டில் இருந்த அந்தணரின் மனைவியின் மீது மரத்தில் தங்கியிருந்த விஷ அம்பை எப்படி அவளது வயிற்றில் விழச்செய்து உயிரைப் பறித்தோமோ, அதே போல இந்த தெருவில் நிற்கும் காளையை மிரளச்செய்து மண்டபத்திற்குள் விரட்டி விடுவோம். கூட்டம் கலைந்தோடும் போது, காளை மணமகனை முட்டிக் கொல்லட்டும், என்றது. மன்னரும் அந்தணரும் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர். வேடனிடம் மன்னிப்பு கேட்டார் அந்தணர். சிறையில் வைத்ததற்காக மன்னன் அவனுக்கு ஏராளமான பொருளை நஷ்ட ஈடாக கொடுத்து அனுப்பி வைத்தான்.