தன் மனைவியைக் காணாத வேதியர் மிகுந்த துக்கத்திற்கு உள்ளானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் காசிக்கு புனித யாத்திரை சென்று கொண்டிருந்தனர். ஒரு நாள் இரவில் ஒரு மண்டபத்தில் படுத்திருந்த போது, அவரது மனைவியை ஒரு நீசன் கடத்தி சென்று விட்டான். தூக்கத்தில் இருந்த அவளது வாயைப்பொத்தி தூக்கிச்சென்றதால் வேதியருக்கு அவள் கடத்தப்பட்டது தெரியவில்லை. அவரது துயரத்தைப்பார்த்த ஒரு முதியவர்,தொலைந்த பொருள் பற்றி மனிதன் எப்போதுமே கவலைப்படக்கூடாது. அதனால் ஆகப்போவது ஏதுமில்லை. நீ தொடர்ந்து புனித யாத்திரை செல், என அறிவுறுத்தினார். வேதியரும் வேறு வழியின்றி தன் பயணத்தை தொடர்ந்தார். காசிக்கு சென்று சிறிது காலம் தங்கியிருந்தார். மீண்டும் ஊர் திரும்பும் வழியில், தன் மனைவியை தொலைத்த அதே மண்டபத்தில் தங்கினார். பழைய நினைவுகள் அவரை வாட்டின.
இந்த நேரத்தில் அலங்கோலமான நிலையில் ஒரு பெண் அவரது கால்களில் வந்து விழுந்து அழுதாள். நீ யாரம்மா? என விசாரித்த வேதியரிடம்,என்னை உங்களுக்கு தெரியவில்லையா? நான் தான் உங்கள் மனைவி. ஒரு கொடூரக்காரனால் நான் கடத்தப்பட்டடேன். அவன் எனக்கு பல கொடுமைகள் செய்தான். என்னை சிறையில் அடைத்தான். என்னை தவறான செயலுக்கு வற்புறுத்தினான். நான் இணங்காததால் என் முகத்தில் சூடு போட்டு இப்படி ஆக்கி விட்டான். என்னைப்பற்றி சந்தேகம் கொள்ளாதீர்கள். ஊருக்கு அழைத்துச்செல்லுங்கள். உங்கள் மனைவியாக என்னை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வேலைக்காரியாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள், என கதறினாள். தன் மனைவியின் நிலைமையை எண்ணி அவர் மிகவும் வருந்தினார். மனைவிக்கு நடந்த கொடுமைக்கு பரிகாரம் தேடி பூரியிலுள்ள ஜகந்நாத பண்டிதர் என்ற ராம பக்தரின் வீட்டிற்கு ஆலோசனை கேட்க சென்றார். நடந்ததை கூறினார். அந்த மகான் சிறிதும் தயக்கமின்றி,ராம ராம ராம என மும்முறை சொல்லி தீர்த்தம் தெளித்து அவளை உன் மனைவியாகவே மீண்டும் ஏற்றுக்கொள், என கூறினார்.
அப்போது அந்த மகானின் தாயார் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். நன்றாக இருக்கிறதப்பா நீ சொல்லும் யோசனை. ராம என்ற நாமத்தை மூன்று முறை சொல்ல சொல்கிறாயே. அதை ஒரு தரம் சொன்னாலே போதுமே. ராம நாமத்தின் மகிமை பற்றி உனக்கு இவ்வளவு தான் தெரியுமா? என கடிந்து கொண்டார். தாயும் மகனும் கூறியதைக்கேட்ட வேதியருக்கு நிம்மதியும் திருப்தியும் ஏற்பட்டது. அதே நேரம் ஊரார் என்ன சொல்வார்களோ என்ற பயமும் இருந்தது. இதை ஜகந்நாத பண்டிதர் முகக்குறிப்பின் மூலமே உணர்ந்து கொண்டார். வேதியரின் பயத்தை போக்கும் வகையில் அவரது மனைவியை அருகிலுள்ள குளத்தில் ராம என்ற நாமம் சொல்லி மூழ்கி எழுமாறு சொன்னார். இதற்குள் இந்த தகவல் எப்படியோ ஊரில் பரவி விட்டது. ஊர் மக்கள் குளத்தின் முன்னால் கூடினர். வேதியரும் அவரது மனைவியும் ராமா என உரக்க தியானித்தவாறு குளத்து நீரில் மூழ்கி எழுந்தனர். மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அந்த பெண்ணின் முகத்திலிருந்த தீக்காயங்கள் மாறி மஞ்சளும் குங்குமமும் நிறைந்து முன்பை விட அழகாக இருந்தது. ஸ்ரீராமனின் மகிமையை அவ்வூரார் புரிந்து கொண்டனர். ராம ராம என்ற கோஷம் எங்கும் எழுந்தது.