புத்தருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஆனால், அவர் தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வார். தனக்கு நெருக்கமாக யாரையும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், அவருக்கு வயதான பிறகு, வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, தன்னைக்கவனித்துக் கொள்ள சீடர் ஒருவரைத் தன்னருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீடர்களே! நான் எனக்கு நெருக்கமாக ஒரு சீடரை வைத்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களில் ராவது முன் வருகிறீர்களா? எனக் கேட்டார். புத்தருக்கு ஏவல் புரிய சீடர்கள் காத்துக் கிடந்தனர். குறிப்பாக சாரிபுத்திரதேவர் என்ற சீடருக்கு புத்தர் என்றால் உயிர். அவர் முதல் ஆளாக எழுந்து நின்றார்.புத்தர் அவரை அமரச்சொல்லி விட்டார். எல்லாருக்கும் ஆச்சரியம். ஏன் அவரை புத்தர் சீடராக ஏற்றுக்கொள்ள வில்லை என்று குழம்பினர். எனவே, நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு வரிசையாய் எழுந்தனர்.
யாரையும் புத்தர் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அவரது பார்வை மட்டும் ஒரு சீடரின் மீது பதிந்திருந்தது. அந்த சீடர் இங்கு நடந்த எதிலுமே கலந்து கொள்ள விரும்பாதது போல், அமைதியாய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். இதைக் கவனித்த சீடர்கள், ஆனந்தா! உன்னைத்தான் பகவான் புத்தர் தன் ஆத்ம சீடராக ஏற்றுக்கொள்ள இருக்கிறார் என்பது அவரது பார்வையில் இருந்தே புரிகிறது. நீ அதற்கு சம்மதம் சொல், என்றனர். ஆனந்தர் என்ற அந்த சீடர் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. அமைதியாய் இருந்தார். புத்தர் அவரிடம், ஆனந்த தீர்த்தரே! தங்களை பலரும் என் அந்தரங்க சீடராகச் சொல்லியும், தாங்கள் அதை ஏற்க மறுப்பதேன்? என்றார். இப்போது ஆனந்ததீர்த்தர் புத்தரின் முன்னால் வந்தார். பகவானே! தங்களுக்கு அந்தரங்க சீடராக வேண்டுமென்றால், நான் விதிக்கும் நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும், என்றார். மற்ற சீடர்கள் அதிர்ந்தனர்.
பகவானுக்கே இவன் நிபந்தனை விதிக்கிறானே! இவனை பகவான் விரட்டத்தான் போகிறார், என நினைத்தனர். ஆனால், கருணைக்கடலான புத்தர் அவரை அருகில் அமர வைத்தார். ஆனந்தரே! உங்கள் நிபந்தனையைச் சொல்லுங்கள், என்றார். பகவானே! உங்களுக்கு யாராவது நல்ல உணவைக் கொடுத்தால், அதில் எனக்கு பங்கு தரக் கூடாது. நல்ல ஆடைகள் கிடைத்தால், அதையும் தரக்கூடாது. தாங்கள் உடுத்திக் கிழிந்த கந்தலாடை போதும். உங்களுக்கு ஆசனம் அளிக்கப்பட்டால், அதில் என்னை அமரச் சொல்லக்கூடாது. நான் தடுமாறும் வேளையில், என்னைத் தாங்கள் தான் நல்வழிப்படுத்த வேண்டும், என்றார். இப்படி ஒரு நல்லவரா என நெகிழ்ந்து போன புத்தர் அவரையே தன் அந்தரங்க சீடராக ஏற்றார்.
ஆனந்ததீர்த்தரின் வரலாறைத் தெரிந்து கொண்ட பிறகாவது, தங்களை வழிநடத்துபவர்கள் நலத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேசத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இந்த நல்லெண்ணம் அடிகோலும்.