விநாயகப் பெருமான் தான் வளர்த்த பூனை ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கை நகம் பட்டு பூனையின் முகத்தில் கீறல் விழுந்து விட்டது. பூனை வலிதாங்காமல் ஓரிடத்தில் படுத்துக் கொண்டது. வலி குறைந்ததும் வழக்கம் போல் விளையாடியது. விநாயகரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.சற்றுநேரம் கழித்து வீட்டுக்கு போனார். அம்மா பார்வதியின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தார். மகனின் தும்பிக்கையை தடவி விட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. அந்த சுகத்திலேயே கண்கள் செருக, அப்படியே மேலே பார்த்தவர், அம்மாவின் கன்னத்தில் ஒரு கீறல் இருப்பதையும், அதில் ரத்தம் ஒட்டியிருப்பதையும் பார்த்தார். பதறிப்போய் எழுந்தார். அம்மா! உன் முகத்தில் ஏதோ கீறியிருக்கிறது. ரத்தம் வந்து காய்ந்திருக்கிறது. நீ கவனிக்கவில்லையா? என்றார். தெரியும் மகனே! நீ தூங்கு என்றாள் பார்வதி.
அம்மா விளையாடாதே. யார் உன் முகத்தில் இப்படி கீறினார்கள். தம்பி முருகன் வேல் கொண்டு விளையாடும் போது அது முகத்தில் பட்டதா? அல்லது அப்பா தன் சூலத்தை அசைக்கும் போது பட்டதா? அல்லது நீயாகவே ஏதும் செய்தாயா? என படபடத்தார். பார்வதி சிரித்தாள். நீயாகவே என் முகத்தில் கீறிவிட்டு, இத்தனை பேரை சந்தேகப்படுகிறாயே? என்றாள். விநாயகர் அரண்டு விட்டார். அம்மா! நான் ஏதும் செய்யவில்லையே. ஒருவேளை உன் மடியில் வந்து படுக்கும் போது என் கிரீட நுனி குத்திவிட்டதோ? என்றார். இல்லையப்பா! நீ பூனையுடன் விளையாடும் போது, அதன் முகத்தில் உன் நகம் பட்டு கீறல் விழுந்ததே! அதுதான் இது., என்றாள். விநாயகர் ஆச்சரியம் தாங்காமல், பூனையின் முகத்தில் பட்ட காயம் உன் முகத்துக்கு எப்படி தாவியது? என்றார். இந்த உலக உயிர்கள் அனைத்திலும் நான் இருக்கிறேன். அவற்றிற்கு செய்யப்படும் நன்மையும், தீமையும் என்னைத் தான் சேரும், என்றாள் பார்வதி. அப்படியானால், நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. ஏனெனில், ஒரு பெண்ணைத் தொட்டால் என் தாயைத் தொட்டதாக அல்லவா ஆகும்? என்ற விநாயகர், எல்லாப் பெண்களையும் தன் தாயாகவே பார்க்கிறார்.
ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை, நம் தாய்க்கு இழைக்கப்படுவது போல என்பதை எல்லோரும் உணர வேண்டும்.