ராவண வதத்திற்கு பிறகு விபீஷணன் இலங்கையின் அரசனானான். அவனது விருப்பப்படி அயோத்தியில் இருந்த ரங்கநாதர் சிலையை ராமன் பரிசளித்தார். அதைப் பெற்றுக் கொண்டு, இலங்கையில் பிரதிஷ்டை செய்ய வரும் போது, அகத்தியரின் விருப்பப்படி, ரங்கநாதரை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடு செய்து விட்டார் விநாயகர்.ரங்கநாதரைப் பிரிந்த விபீஷணன் நாட்டுக்கு போய் கவலையில் இருந்தான். அவரைத் தரிசிப்பதற்காக ஒவ்வொரு ஏகாதசியன்றும் ஸ்ரீரங்கத்திற்கு வருவான். இதை ஒரு அர்ச்சகர் கவனித்துக் கொண்டே இருந்தார். விபீஷணன் அசுரன் அல்லவா? எனவே இலங்கையில் இருந்து வரும் போது, மிகப்பெரிய கூடை ஒன்றில் பூ எடுத்து வருவான். அந்த கூடைக்குள் பத்து, இருபது ஆட்கள் அமர்ந்து கொள்ளலாம். அந்தளவுக்கு பெரிய கூடை. ஒருநாள் அர்ச்சகருக்கு ஒரு ஆசை. எப்படியாவது இலங்கைக்கு போய் அந்த நாட்டை பார்த்து விட வேண்டுமென்று. நைசாக கூடைக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். விபீஷணன் கூடையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான். ராட்சஷர்களுக்கு மனிதர்கள் எறும்பு மாதிரி. எனவே, கூடைக்குள் அர்ச்சகர் ஒளிந்திருந்தது விபீஷணனுக்கு தெரியாது. கொஞ்சம் பிரசாதம் மட்டும் கூடைக்குள் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். வான் வழியே சில நிமிடங்களில் இலங்கை போய் சேர்ந்தான்.
அரண்மனைக்குள் சென்று கூடையை கவிழ்த்தான். உள்ளேயிருந்து அர்ச்சகர் உருண்டு விழுந்தார். ஓய் அர்ச்சகரே! என்ன தைரியம் உமக்கு! எதற்கு இங்கு வந்தீர்? என்றான். அர்ச்சகர் இலங்கையை சுற்றிப்பார்த்து விட்டு விபீஷணனிடம் வந்தார். அரண்மனை கஜானாவுக்கு கூட்டிச் சென்றான் விபீஷணன். இங்கிருப்பதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் என்றான். அங்கே தங்கமும் ரத்தினமும் கொட்டிக் கிடந்தது. அர்ச்சகருக்கு ஆசையோ ஆசை. இங்கிருப்பதிலேயே விலை மதிப்பற்ற ஒன்றைக் கொடுங்கள், என்றார். விபீஷணன் கணக்குப்பிள்ளையிடம் கண்ணைக் காட்ட, கணக்குப்பிள்ளை ஒரு சிறு டப்பாவை எடுத்து வந்து கொடுத்தார். இவர் ஆவலோடு டப்பாவைத் திறந்தார். உள்ளே ஒரு ஊசி இருந்தது. அர்ச்சகரே! இது சிறிய ஊசி தான். ஆனால், எங்கள் மகாராஜா எந்த நாட்டில் இருந்தோ இதை வாங்கி வந்தார். இதை ஒரு அரிய பொக்கிஷமாக பாதுகாத்து வந்தோம். இன்று இது உமக்குச் சொந்தம். இனி இதை என்று காண்போம்? என கண்ணீர் மல்கச் சொன்னார் கணக்குப்பிள்ளை. அர்ச்சகருக்கு ஈயாடவில்லை. மன்னன் கேட்ட போது, ஒரு கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு போயிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? அதீத ஆசை எவ்வளவு பெரிய நஷ்டத்தைக் கொண்டு வந்தது.