கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமக் கரையிலுள்ள ஒரு ஊரில் வசித்த ரகுநாதன் என்ற வியாபாரி பெரும் செல்வம் பெற்றிருந்தார். அவருடைய மனைவி கவுசல்யா. செல்வம் இருந்தாலும், மக்கள் செல்வம் இல்லை. மக்கள் செல்வம் இல்லாதவர் இறந்து போனால் அவரது செல்வம் வேறு யாருக்காவது போய்விடும். எனவே, பூமியில் வாழும் காலத்திலேயே அவற்றைத் தானம் செய்து விடுவது நல்லது. ரகுநாதனுக்கு வயதான பிறகும் கூட தன் செல்வத்தில் ஒரு காசு கூட குறையக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஒருமுறை மகரசங்கராந்தி பண்டிகை வந்தது. அவர் தன் மனைவியுடன் திரிவேணி சங்கமத்திற்கு சென்றார். அடியே கவுசல்யா! தானம், தட்சிணை என இங்கிருக்கும் புரோகிதர்களுக்கு எதையாவது கொடுத்து விடாதே. நாம் ஒரு ஓரமாக போய் குளித்து விட்டு வந்து விடுவோம். இந்த சங்கமத்தில் தலை மூழ்கினாலே செய்த பாவமெல்லாம் போய்விடும். இதற்காக புரோகிதர்கள் சிரார்த்தம் என்ற பெயரில் செய்யும் சடங்கிற்கு தனியாக காசு கொடுக்க தேவையில்லை, என்றார். அவளும் கணவனின் புத்தியறிந்து தலையசைத்து வைத்தாள். இருவரும் ஆற்றுக்குச் சென்றதும் புரோகிதர்கள் மொய்த்தனர்.
வணிகரே! என்னிடம் வாருங்கள். குறைந்த செலவில் சிரார்த்தம் செய்து விடலாம், கையில் இருப்பதைக் கொடுங்கள், என்றனர். ஐயையோ, நான் ஒரு காசு கூட கொண்டு வரவில்லையே. வேண்டாம்...வேண்டாம்...அடுத்த சங்கராந்திக்கு பார்த்துக் கொள்ளலாம், என தப்பிச் சென்று விட்டார். ஒரு ஓரமாக அவரும் அவரது மனைவியும் நீராடினர். மிக ஒதுக்கமான பகுதி என்பதால் அங்கே யாருமே இல்லை. கரையேறும் போது சிவபெருமான் ஒரு புரோகிதர் வேடத்தில் அங்கு வந்தார். வணிகரே! சிரார்த்தம் செய்யாமல் யாரும் செல்லக்கூடாது. அது பாவம். என்னிடம் சிரார்த்தம் செய்யுங்கள். குறைந்த பணம் கொடுத்தால் போதும், என்றார். ரகுநாதன் மசியவில்லை. இருந்தாலும் சிவன் ரூபத்தில் வந்த புரோகிதர் அவரை சம்மதிக்க வைத்து விட்டார். ஒரு நாணயம் மட்டும் கூலி பேசி சிரார்த்தம் நடந்து முடிந்தது. அந்தக்காசையும் வியாபாரி உடனடியாக கொடுக்கவில்லை. வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி சொல்லிவிட்டார். மறுநாள் வியாபாரியின் வீட்டுக்கு புரோகிதர் போனார். வியாபாரி அவரைக் கண்டு ஒரு அறையில் ஒளிந்து கொண்டார். மனைவியைக் கூப்பிட்டு, எனக்கு காய்ச்சல், இன்னொரு நாள் வந்து காசு வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி அனுப்பி விடு, என்றார்.
கவுசல்யா தலையில் அடித்துக் கொண்டே, கணவன் சொன்னதைச் செய்தாள். புரோகிதர் சிவனாயிற்றே! லேசில் விடுவாரா! அம்மா! உன் கணவனுக்கு காய்ச்சல் எனத்தெரிந்தும் அவனைப் பார்க்காமல் போனால், என்னைப் பற்றி என்ன நினைப்பான்? நான் பார்க்க வேண்டுமென சொன்னதாகச் சொல், என்றார் சிவன். அவளும் உள்ளே போய் அதைச்சொல்ல, அடியே! என்னை ஒரு சவப்பெட்டியில் வைத்து, இறந்து விட்டதாகச் சொல்லி விடு. அவர் போய் விடுவார், என்றார் ரகுநாதன். கவுசல்யாவும் அப்படியே சொல்ல, சிவன், ஐயோ, எனக்கு தர வேண்டிய பாக்கியைப் பற்றிக் கவலையில்லை. இவனை அடக்கம் செய்வது என் கடமை, என்றபடியே பக்கத்தில் இருந்தவர்கள் துணையுடன், பெட்டியைத் தூக்கிக் கொண்டு மயானத்துக்கு சென்றார். ரகுநாதனை சிதையில் தூக்கி வைத்து தீப்பற்ற வைக்கவும், அவர் குதித்து எழுந்தார். தவறுக்கு மன்னிப்பு கேட்டார். சிவன் அவனை மன்னித்து, ஏதாவது வரம் கேள்? என்றார். சிவனே! நீர் புரோகிதர் வேடத்தில் வந்து கேட்ட ஒரு நாணயத்தை என்னிடம் கேட்காதீர், என்றார் அந்த கஞ்ச வியாபாரி.
பிறவி குணத்தை மாற்றுவது என்பது சிரமம் தான்.