பங்குனி உத்திரத்தன்று மகா சாஸ்தா அவதரித்தார் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. இவர், சிவவிஷ்ணுவின் பிள்ளையாகக் கருதப்படுகிறார். ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை பிறக்குமா என்பது தான் இங்கே ஏற்படுகிற சந்தேகம்; இதற்கு விடை தருகிறது ரகுவம்சம். காளி உபாசகரான காளிதாசர் ரகுவம்சம் என்னும் நூலை எழுதினார். இந்த நூலைத் துவங்கும் போது, அவர் கடவுள் வணக்கம் ஸ்லோகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த ஸ்லோகத்தில் சாஸ்தாவின் பிறப்பு ரகசியம் வெளிப்படுகிறது.
வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே!
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ
என்பதே அந்த ஸ்லோகம். "சொல்லும், பொருளும் போல் பொருந்தி இருப்பவர்களும், எல்லா உலகங்களுக்கும் அதிபதியானவர்களுமான பார்வதி-பரமேஸ்வரரை வணங்குகிறேன்... என்பது இதன் பொருள். இந்த ஸ்லோகத்தில் வரும், "பார்வதீ-ரமேச்வரௌ என்று பிரிக்கலாம். "பார்வதீப என்றால், "பார்வதிக்கு அதிபதியாகிய சிவன், ரமேச்வரௌ என்றால் ரமா என்னும் லட்சுமியின் கணவராகிய விஷ்ணு. ஆக, விஷ்ணுவும், சக்தியும் ஒன்றே என்றாகிறது. சக்தி ஆண் வடிவில் இருக்கும் போது விஷ்ணு ஆகிறாள். சக்தியை இடது பாகத்தில் சிவன் வைத்துக் கொணடால், "அர்த்தநாரீஸ்வரர் என்பர். விஷ்ணுவை இடது பாகத்தில் வைத்துக் கொண்டால், சங்கரநாராயணன் ஆகிறார். ஆக, சாஸ்தாவை, சிவசக்தியின் பிள்ளை என்றே கொள்ள வேண்டும்.
இந்த ஸ்லோகத்தில் வரும் "பிதரௌ என்ற சொல்லுக்கு, "இரண்டு தந்தையர் என்று பொருள். இதனால், சிவா-விஷ்ணு இருவரையும் உலக பிதாக்கள் என்று கொள்ளலாம். தேவாரத்தில் திருநாவுக்கரசர், "அரிஅலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே என்கிறார். சிவபெருமானுக்குரிய ஒரே தேவி ஹரி என்பது அவரது கருத்து. சிவனுடைய அழகைப் பார்த்தால் மனம் அடங்கும்; விஷ்ணுவின் அழகைக் கண்டால் மனம் மோகம் கொள்ளும். சாந்தமும், மோகமும் இணைந்த போது ஒரு ஒளி பிறந்தது. அந்த ஒளியே, சாஸ்தா என்னும் குழந்தையாகச் சித்தரிக்கப்பட்டது. சாஸ்தா காட்டிலே பிறந்தவர். இதனால், இவருக்குரிய கோவில்கள் அனைத்துமே வனங்களில் உள்ளன. பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில், ஆரியங்காவு, அச்சன்கோவில் குளத்துப்புழை, சபரிமலை உள்ளிட்ட எல்லா சாஸ்தா தலங்களும் காட்டிற்குள்ளே அமைந்துள்ளன. இவருக்குரிய விசேஷ நாட்களில் இவரைக் கூட்டமாகப் போய் தரிசிப்பர். கூட்டத்தை, "சாத்து என்பர். கூட்டமாக வந்து வழிபடும் கடவுள் என்பதால் இவர், "சாஸ்தா ஆனார். கிராமப்புற மக்கள் இவரை, "அய்யனார் என்பர். "அய்யன் என்றால், "மதிப்புக்குரியவன். தகப்பனை, "ஆர் விகுதி சேர்த்து, "தகப்பனார் என்று மரியாதையாக அழைப்பது போல, அய்யனுடன், "ஆர் விகுதி மரியாதை கருதி சேர்க்கப்பட்டுள்ளது. சாஸ்தா, சிவா-விஷ்ணு பிள்ளை என்பதால், வாழ்வுக்கு பிறகு சிவன் நமக்களிக்கும் முக்தியையும், வாழும் காலத்தில் விஷ்ணு நமக்களிக்கும் செல்வத்தையும் ஒன்றாகக் கோரிப் பெறலாம். பங்குனி உத்திர திருநாளில் சாஸ்தாவை வணங்கினால், அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.