Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தேவியின் கருணை!
 
பக்தி கதைகள்
தேவியின் கருணை!

கோசல நாட்டை துருவசிந்து என்ற அரசன் ஆண்டு வந்தான். இவனுக்கு இரண்டு மனைவிகள்.மூத்தவள் மனோரமா, இளையவள் லீலாவதி. மனோரமா பட்டத்தரசி. லீலாவதியை தன் ஆசை நாயகியாக துருவசிந்து வைத்திருந்தான். இருவருக்கும் ஆண் குழந்தைகள் பிறந்தன. மனோரமாவின் மகன் சுதர்சனன். லீலாவதியின் மகன் சத்ருஜித். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற துருவசிந்து சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்டான். நாட்டை யார் ஆள்வது என்ற பிரச்னை ஏற்பட்டது.பட்டத்தரசியின் மகனுக்கே முடிசூட்ட வேண்டும் என பெரும்பாலானோர் கூறினர். ஆனால் லீலாவதியின் தந்தை யுதாஜித் இதை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்தான். மனோரமாவை மந்திரிகளின் துணையோடு ஊரை விட்டே துரத்தி விட்டான். தன் குழந்தை சுதர்சனனுடன் அவள் பரத்வாஜரின் ஆசிரமத்தை அடைந்தாள். தன் கதையை சொன்னாள். பரிதாபப்பட்ட அவர் தன் ஆசிரமத்திலேயே அவளை தங்கவைத்தார்.  அவர்கள் உயிரோடு இருப்பதை சத்ருஜித் விரும்பவில்லை. எதிர்காலத்தில் சுதர்சனன் தனக்கெதிராக திரும்பிவிடுவானோ என பயந்தான். அவனை கொல்வதற்காக பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு சென்றான். பரத்வாஜரோ அவனை எச்சரித்து அனுப்பிவிட்டார்.

பலகாலம் சென்றது. பரத்வாஜரின் துணையோடு சுதர்சனன் வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்றான். இளம் வயது முதலே அம்பிகை பக்தனாக இருந்தான். தேவியே கதி என அவளைப்பற்றி பாடல்கள் பாடுவான். அவனது பக்தியை மெச்சி லட்சுமிதேவி ஒருமுறை கருட வாகனத்தில் அவனுக்கு காட்சி கொடுத்தாள். இந்நிலையில் காசிநாட்டு அரசன் சுகேது தன் மகள் சசிகலாவுக்கு நல்ல மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தான். அந்நாட்டு அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றித்திரிந்து மாப்பிள்ளை தேடினர்.  பரத்வாஜர் தங்கியிருந்த ஆசிரமத்தின் வழியே அவர்கள் செல்லும்போது சுதர்சனனை பார்த்தனர். எழில் மிக்கவனாக அவன் திகழ்ந்தான். இந்த அழகனை எப்படியாவது தங்கள் இளவரசிக்கு திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என முடிவெடுத்தனர்.  ஊருக்குச் சென்று இளவரசியிடம் அவனைப் பற்றி கூறினர். அவன் அரசனாக இல்லாவிட்டாலும், ஒரு துறவியுடன் சேர்ந்து வசித்தாலும் கூட அவனே தங்களுக்கு ஏற்றவன் என கூறினர். இளவரசிக்கும் அவனைப்பார்க்காமலேயே அவன் மீது காதல் ஏற்பட்டது.

இதற்கிடையே சுகேது சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். அனைத்து நாட்டு அரசர்களும் வந்தனர். சசிகலா சுதர்சனனுக்கு ஒரு வேதியன் மூலமாக தகவல் சொல்லி அனுப்பினாள். இதை சற்றும் எதிர்பாராத சுதர்சனன் சசிகலாவின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அவன் வந்ததும் சுயம்வரத்தை நிறுத்தி விடும்படியும், சுதர்சனனையே திருமணம் செய்வேன் என்றும் சசிகலா தந்தையிடம் அடம் பிடித்தாள். வேறு வழியின்றி சுகேது சுயம்வரத்தை நிறுத்திவிட்டான். ரகசியமாக இரவோடு இரவாக தன்மகளை சுதர்சனனுக்கு திருமணம் செய்து வைத்தான்.  இதைக் கேள்விப்பட்ட அரசர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக சுகேது மீது போர் தொடுத்தனர். தேவி பக்தனான சுதர்சனன் அம்பிகையை வேண்ட அம்பிகை சிங்க வாகனத்தில் வந்து தன் பக்தனை எதிர்த்த அரசர்களை சம்ஹரித்தாள். மற்ற அரசர்களெல்லாம் இது கண்டு பயந்து தேவியின் காலடியில் விழுந்தனர். சுதர்சனனால் தங்களுக்கு தேவியின் அருள் காட்சி கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். இதன் பிறகு தன் சொந்த நாட்டுக்குச் சென்று சத்ருஜித்தை தோற்கடித்து சுதர்சனன் நாட்டின் அரசன் ஆனான்.  இந்த போர் 9 நாட்கள் நடந்தது. தேவி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுத்து போரிட்டாள். இந்த நாட்களை நவராத்திரி என பிற்காலத்தில் கொண்டாடத் துவங்கினர்.  இளம் வயது முதலே அம்பிகையை வணங்குபவர்களுக்கு அவளது அருள்காட்சி அவசியம் கிடைக்கும். மேலும் அவளது அருளால் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar