லட்சுமி கடாட்சம் மட்டும் ஒருவனுக்கு கிடைத்து விட்டால், அவனை அசைக்க யாராலும் இயலாது என்பதற்கு மாயனின் கதை உதாரணம். இடையர்குலத்தில் பிறந்தவன் மாயன். மிகச்சிறந்த லட்சுமி உபாசகன். லட்சுமியின் கணவர் பரந்தாமனைக் கூட அவன் கண்டுகொள்வதில்லை. லட்சுமி தேவியுடன் ஐக்கியமாகி விட்டவனாகவே வாழ்ந்தான். ஆனாலும் அவனுக்கு குழந்தை இல்லை. அவன் சந்தானலட்சுமியை உளமுருக வேண்டினான். அவனது பக்தியை மெச்சி லட்சுமி தன் கணவர் பரந்தாமனுடன் தரிசனம் தந்தாள். மாயன் பரந்தாமனை பார்க்கவே இல்லை. லட்சுமியை மட்டும் வலம் வந்து வணங்கினான். லட்சுமியும் குழந்தை வரம் தந்தாள். மாயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த பக்தனை சோதிக்க எண்ணினார் பெருமாள். சில நாட்களில் நோய் கண்டு மாயனின் மனைவி இறந்தாள். பாலின்றித் தவித்த குழந்தையும் இறந்துபோனது. மாயன் மிகவும் வேதனைப்பட்டான். இனி யாருக்காக வாழ வேண்டும். லட்சுமி அருளால் பிறந்த குழந்தையே இறந்துவிட்டால் யாரை நொந்து கொள்வது? என மனம் வேதனைப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறினான். கால்போன போக்கில் நடந்தவன் ஒரு குளத்தில் குதித்தான். அக்குளத்தில் இருந்த ஆமைகளிடம், ஏ ஆமைகளே! என்னை எல்லாரும் சேர்ந்து உணவாக ஏற்றுக்கொள்ளுங்கள், என்றான். ஆமைகளோ, ஐயா! தாங்கள் இறப்பதற்கு முன் எங்களை இதைவிட அதிக நீர் நிறைந்த குளத்தில் விட்டுவிட்டால் நாங்கள் உங்களை மகிழ்ச்சியோடு புசிப்போம், என்றன. மாயனும் மற்றொரு குளத்தில் அவற்றை கொண்டுவிட்டான். அன்புக்குரியவரே! நீங்கள் செய்த உதவியை எங்களால் மறக்க இயலாது. உதவி செய்தவரைக் கொல்ல எங்களுக்கு எப்படி மனம் வரும்? ஏதாவது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எங்களை மனதில் நினையுங்கள். நாங்கள் ஓடோடி வந்து உதவி செய்கிறோம். இக்குளத்தில் விழந்து சாக நினைத்தால் நாங்கள் அதை தடுத்துவிடுவோம், என்றன.
மாயன் வேறொரு குளத்திற்கு சென்றான். அதில் குதித்தான். ஒரு வலையில் அவனது கால் மாட்டிக்கொண்டது. வலையை பிரித்து பார்த்தபோது அதனுள் சில அன்னங்கள் சிக்கியிருப்பதைக் கண்டான்.அந்த அன்னங்கள் மாயனிடம், ஐயா! நாங்கள் வேடர்கள் விரித்த கண்ணிவலையில் சிக்கிவிட்டோம். எங்களை காப்பாற்றுங்கள், என கெஞ்சின. மாயனும் அவற்றை காப்பாற்றினான். அவற்றிடமும் தான் சாக விரும்புவதை சொன்னான். அந்த அன்னங்களோ தங்களுக்கு உதவிய மாயனை சாகவிடாமல் தடுத்துவிட்டன. எப்போது தங்களை மனதில் நினைத்தாலும் பறந்துவந்து உதவுவதாக வாக்களித்தன.மாயன் திகைத்தான். இறப்பைப்பற்றிய எண்ணத்தை கைவிட்டான். ஒரு நகரத்திற்கு சென்றான். அங்கிருந்த சத்திரக்காரனிடம், இந்நகரில் ஏதேனும் விசேஷம் உண்டா? என்றான்.ஐயனே! இவ்வூர் அரசனின் மகள் பிரம்மதேவனைத்தான் மணந்துகொள்வேன் என பிடிவாதம் செய்கிறாள். அவரோ தேவலோகத்தில் இருக்கிறார். இவள் பூலோகத்தில் இருக்கிறாள். இதெல்லாம் நடக்கிற காரியமா? என்றான் சத்திரக்காரன்.அதற்கு மாயன், சத்திரக்காரனே! நான் தரும் ஓலையை மன்னனிடம் கொடுத்துவிடுங்கள், எனக் கூறி, நான் தான் பிரம்மன். உம் மகளை மணம் முடிக்க இரண்டு நாளில் வருவேன், என எழுதி அனுப்பி வைத்தான். சத்திரக்காரன் ஏதும் புரியாமல் மன்னனிடம் ஓலையை ஒப்படைத்தான். மன்னனுக்கு குழப்பமாக இருந்தது. ஒருவேளை பிரம்மா வந்து திருமண ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பதைக்கண்டு கோபித்துக்கொண்டு போய்விட்டால் நம் பெண் காலமெல்லாம் கன்னியாக அல்லவா இருக்க வேண்டும் என கருதி திருமண ஏற்பாடுகளை செய்தான். ஊரெங்கும் செய்தி பரவியது. பிரம்மனைக்காண மக்கள் கூடினர்.
மாயன் தனக்கு உதவிய அன்னங்களை நினைத்தான். அவை பறந்துவந்தன. அவற்றிடம், அன்னங்களே! பிரம்மனுக்குரிய ஆடை, கிரீடம், ஆபரணங்கள் ஆகிய அலங்காரங்களுடன் என்னை சுமந்துசெல்லும் வலிமை பெற்ற பெரிய அன்னப்பறவை இருக்கிறதா, என கேட்டான். மறுநாள் வலிமைமிக்க அன்னப்பறவை வந்தது. மாயன் சர்வ அலங்காரத்துடன் அதன்மீது அமர்ந்து பறந்துசென்றான். மக்கள் அனைவரும் பிரம்மதேவா, பிரம்மதேவா என கோஷமிட்டனர். மன்னன் மாயனை வரவேற்றான். இளவரசிக்கும் மாயனுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது.இந்நேரத்தில் வைகுண்டத்தில் லட்சுமியும் பரந்தாமனும் பேசிக்கொண்டனர். அன்பரே! நீங்களோ மாயனது மனவியின் உயிரையும் குழந்தை உயிரையும் பறித்தீர்கள். அவனது உயிரையும் பறிக்க இருந்த நேரத்தில் நான் அவனை காப்பாற்றினேன். இப்போது நான் மாயனை மன்னனின் வாரிசாகவே மாற்றிவிட்டேன், என்றாள். அப்போது நாரதர் உள்ளே வந்தார்.நாரதரே! லட்சுமி என்மீது குற்றம் சாட்டுகிறாள். இடையன் மாயனின் குடும்பம் அழிந்ததற்கு என்னை காரணமாக காட்டுகிறாள். இந்த மாயன் போலி பிரம்மன் என்ற விஷயம் தெரிந்துவிட்டால் அவன் நிலைமை என்னாகும் என்பது புரியாமல் பேசுகிறாள், என்றார்.லட்சுமி தன் நாதனிடம், சுவாமி! இந்த நாரதனையே வேண்டுமானாலும் அரண்மனைக்கு அனுப்புங்கள். என் பக்தனை அசைக்க முடியாது, என்றாள்.அதையும்தான் பார்த்துவிடுவோமே என்றார் லட்சுமிபதி. நாரதர் சத்தியலோகம் சென்று பிரம்மனிடம் நடந்ததைச் சொன்னார்.
பிரம்மன் அதிர்ந்தார். அதோடு விடாத நாரதர், தேவர் உலகம் முழுவதும் சென்று பூலோகத்தில் தன் தந்தைக்கு இன்னொரு திருமணம் நடந்துவிட்டதாக செய்தியை பரப்பினார். பிரம்மனுக்கோ அவமானமாகப் போய்விட்டது. அதேநேரம் பூலோகத்தில் ஒரு பிரம்மன் இருப்பதாக சொன்ன செய்தி அவரது நான்கு தலைகளையும் குடைந்தது. அவர் விஷ்ணுவிடம் சென்றார். நடந்த விஷயத்தை விளக்கிய விஷ்ணு, பிரம்மனுடன் பூலோகம் சென்றார்.இருவரும் தபஸ்விகள் போல வேடமணிந்து அரண்மனைக்கு சென்று மன்னன் மகளுக்கு பிரம்மனை மணம் முடித்திருக்கும் விஷயத்தைப்பற்றி கேட்டனர். மன்னன் அவர்களை மாயன் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்ற தபஸ்விகள், சுவாமி! தங்களுக்கு நான்கு தலை என கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு அந்த தலைகளுடன் தரிசனம் தரவேண்டும், என்றனர்.மாயன் சமயோசிதமாக பதில் சொன்னான். மகாவிஷ்ணு ராமனாக அவதாரம் செய்தபோது சீதையை ராவணன் கடத்தி சென்றான். அப்போதே விஷ்ணு தன் விஸ்வரூபத்தைக் காட்டி ராவணனை மடக்கியிருக்கலாம். ஆனால் மானிடப்பிறப்பாக பிறந்ததால் அவர் அவ்வாறு செய்யவில்லை. நானும் இப்போது மனிதனாக வந்துள்ளேன். இப்போது நான்கு தலையை காட்டினால் என் மனைவி கூட என் அருகே வர பயப்படுவாள், என்றான். அதற்கு தபஸ்விகள், உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். நீங்கள்தான் உண்மையான பிரம்மா என்றால் நாங்கள் வைக்கும் சோதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றனர்.
மகாலட்சுமியின்மீது பாரத்தை போட்டுவிட்டு நிபந்தனையை ஏற்றான் மாயன். விஷ்ணு கருடனை மனதில் நினைக்க, கருடன் பறந்துவந்து அவரது கையிலிருந்த யோகதண்டத்தை பறித்துச்சென்று கடலில் வீசிவிட்டது. உடனே ஸ்ரீஹரி மாயனிடம், பிரம்மனே! எனது யோகதண்டத்தை மீட்டுத்தரவேண்டும், என்றார். மாயன் தனக்கு உதவிய ஆமைகளை நினைத்தான். அவை கடலுக்குள் சென்று யோகதண்டத்தை மீட்டுக்கொடுத்தன. மாயன் அதை பரந்தாமனிடம் ஒப்படைத்தான்.இதுகண்டு பிரம்மன் வியந்தார். மாலவன் அவரிடம், அவன் லட்சுமி தேவியின் திருவருள் பெற்றவன். வித்யாலட்சுமியாய் அவள் அவனது நாவில் உறைந்திருக்கிறாள். தான்யலட்சுமியாய் அரண்மனை களஞ்சியத்தில் நிறைந்திருக்கிறாள். தைரியலட்சுமியாய் தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறாள். சந்தானலட்சுமியாய் இரண்டு ஆண்குழந்தைகளை கொடுத்திருக்கிறாள். அவனுக்கு எத்தனை சோதனைகள் வைத்தாலும் ஜெயலட்சுமியாய் வெற்றியைத் தருவாள், என்றார்.பிரம்மன் அவனது லட்சுமிபக்தியை மெச்சியபடி சத்தியலோகம் திரும்பினார்.