நான் வீடு போய் திரும்புவதற்குள் லிங்கத்தின் மீது இந்தச் சிலந்தி வலை பின்னி விடுகிறது. அது என் கையில் கிடைக்கட்டும். அதை நசுக்கி விடுகிறேன், என பொருமியவராய், அர்ச்சகர் பூஜையை ஆரம்பித்தார். வலையை ஒரு குச்சியால் அகற்றினார். பின்பு கற்பூர ஆரத்தி காட்டினார். அதன் சூட்டில், வலை இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டது. மறுநாளும் இதே நிலை தான். இப்படி ஆண்டாண்டு காலமாக செய்து கைசோர்ந்து போனார் அர்ச்சகர். ஆனால், சிலந்தியை கண்டுபிடித்த பாடில்லை. ஒருநாள், கோயிலுக்குள் வரும்போது, லிங்கத்தின் மீது நவரத்தினக்கல் ஒன்று இருந்தது. அதன் விலையை அளவிட பூமியில் ஆளில்லை. தேவலோகத்தில் இருந்தே யாராவது வந்து சுவாமிக்கு சார்த்தியிருப்பார்களோ! அர்ச்சகர் சந்தேகப்பட்டார். பக்த கோடிகளை அழைத்தார். அந்த அதிசயத்தைச் சொன்னார். சரி! யாரேனும் பக்தர் இறைவனுக்கு காணிக்கையாக வைத்து விட்டு போயிருப்பார்.இதை இறைவனின் நெற்றியில் பதியுங்கள், அழகாக இருக்கும், என்றனர். அர்ச்சகரும் மகிழ்ச்சியோடு லிங்கத்தின் நெற்றியில் பதித்தார். அடுத்தநாள் வந்தார். லிங்கத்தின் நெற்றியில் இருந்த நவரத்தினத்தைக் காணவில்லை. பதிலாக மலர்கள் லிங்கத்தின் தலையில் தூவப்பட்டிருந்தன. அவர் அலறியே விட்டார். ஐயோ! எல்லாரும் வாருங்கள்.
நவரத்தினத்தைக் காணவில்லை. நான் என்ன செய்வேன்? கோயில் நிர்வாகிகள் வந்து கேட்டால், அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே? என்று பதறினார். நிர்வாகிகள் வந்தனர். நீண்ட காலமாக பணியாற்றும் அர்ச்சகர் மீது அவர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. லிங்கத்தைச் சுற்றி பாதுகாப்பாக சுவர் எழுப்பி, கதவு போட்டனர். இனி பாதுகாப்பு பற்றி கவலையில்லை, என்றனர். கதவின் வழியாக லிங்கத்தை தரிசிக்க ஒரு துவாரம் மட்டும் போடப்பட்டது.மறுநாள் நடை திறக்கப்பட்டது. சிவலிங்கத்தின் நெற்றியில் தொலைந்து போன நவரத்தினமும், தலையில் மற்றொரு நவரத்தினமும் இருந்தது. நிர்வாகிகள் அசந்து போய் விட்டனர். பூட்டிய கதவை திறக்காமலேயே இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? அவர்கள் ஏதும் புரியாமல், அன்றைய பூஜையை முடித்து நடை அடைத்து விட்டனர்.மறுநாள் நடை திறக்க வந்தனர். அங்கே கதவுகள் உடைந்து கிடந்தன. நெற்றியில் நவரத்தினம் இல்லை. பதிலாக சிவலிங்கத்தின் தலையில் பூக்கள் கிடந்தது. அவர்கள் அசந்து போனார்கள். இதென்ன அதிசயம்! ரத்தினம் காணாமல் போவதும், மீண்டும் திரும்பி வருவதுமாய் இருக்கிறதே.
இன்றிரவு நாம் இங்கே தங்குவோம். யார் வருகிறார்கள் என கவனிப்போம், என முடிவெடுத்தனர். நள்ளிரவானது. ஒரு பாம்பு கோயில் கதவின் மேலிருந்த துவாரத்தின் வழியாக லிங்கத்தின் அருகே சென்றது. நேற்று நான் உன் தலையில் அலங்காரமாக பதித்து வைத்த நவரத்தினத்தை யாரோ திருடி விட்டனரே! இறைவா! நான் அன்போடு தந்த நவரத்தினத்தை பிறர் அபகரிக்கும் போது, அதை தடுத்து நிறுத்த வேண்டாமா? அவர்களை அழித்து விட வேண்டாமா? போதாக்குறைக்கு உன் தலையில் குப்பை மாதிரி பூக்களை அள்ளிக் கொட்டி உன் சன்னதியை குப்பையாக்குவது யார்? அவர்களை நீ உதைக்க வேண்டாமா? எனக்கேட்டது. பின்பு, லிங்கத்தை மூன்றுமுறை சுற்றி வந்தது. இறைவனின் தலையிலிருந்த பூக்களை கீழே தள்ளியது. ஒரு நவரத்தினக் கல்லை கக்கி, அதை சிவனின் நெற்றியில் அழுத்தி பதித்தது. வெளியேறி விட்டது. அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இப்போது லிங்கத்தின் அடிப்பாகத்திலிருந்து சிலந்தி வந்தது. இறைவா! நான் உன்னை அலங்கரிக்க என்னால் இயன்ற காணிக்கையாக அழகான வலைகளைப் பின்னுகிறேன். அர்ச்சகரோ அகற்றி விடுகிறார். நீ அவரிடம் எடுத்துச் சொல்லக்கூடாதா? என பிரார்த்தித்தது.
லிங்கத்தை சுற்றி வலை பின்னியது.லிங்கத்தை மும்முறை வலம்வந்து லிங்கத்தின் அடியில் சென்று மறைந்து விட்டது. சற்று நேரத்தில் ஒரு யானை வந்தது. ஐயோ! இறைவா! கண்ட கண்ட கல்லையெல்லாம் உன் நெற்றியில் யாரோ பதிக்கிறார்கள். இதை நீ ஏன் ஏற்றுக் கொள்கிறாய். நெற்றியில் கல்லைப் பதித்தால், உனக்கு வலிக்குமல்லவா? உன் தலை வலிக்கக்கூடாது என்பதற்காகத்தானே நான் இலகுவான மலர்களை உன் தலையில் சூட்டுகிறேன். உன்னைச் சுற்றி யாரோ வேலி போல சுவர் கட்டி உன் சுதந்திரத்தை கெடுத்தார்களே! அந்த சுவருக்குள் புகுந்து இந்த பெரிய உடலுடன் நுழைந்து உன்னை பூஜிக்க முடியாது என்பதால் தானே சுவரை நொறுக்கினேன். நீ என் காணிக்கையை மட்டும் ஏற்றுக் கொள், என்று கூறி, நெற்றியிலிருந்த கல்லை தும்பிக்கையால் பிடுங்கி தூர எறிந்தது. பூக்களை தலையில் வைத்தது. லிங்கத்தை வலம் வந்து, காட்டுக்குள் ஓடி விட்டது. அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இறைவனின் மீது சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை கொண்ட உண்மையான பக்தியை எண்ணி வியந்தனர். தன்னை எப்படி வணங்க வேண்டும் என்பதற்கு, இறைவன் நடத்திய நாடகம் இது என்பதை பக்தர்கள் உணர்ந்தனர். இறைவனை வணங்க கடன் வாங்க வேண்டாம். அவரவர் கையில் உள்ளதைக் கொண்டு, உள்ளூரில் இருக்கும் கோயிலில் வணங்கினாலே போதுமென்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
சிலந்திக்கு ஸ்ரீ என்ற பெயர் உண்டு. பாம்பை காளம் என்பர். யானையை ஹஸ்தி என்பர். இந்த சம்பவம் நடந்த இடம் எது தெரியுமா? ஸ்ரீகாளஹஸ்தி ஆகும்.